Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சின்னத்திரை நடிகைகளின் தற்கொலைக்கு என்ன காரணம் தெரியுமா..?

சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த நடிகை சபர்ணாவின் தற்கொலையும் வெடிகுண்டாய் வெடித்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதற்கு என்ன காரணம்..? இதனை தடுக்க என்ன வழிகள்..? உண்மையாகவே சின்னத்திரை நடிகர்களுக்கு வேலையில்லையா..? சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்னைகள் என்ன..? இந்த மாதிரியான பல கேள்விகளை சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான போஸ் வெங்கட் முன் வைத்தோம்.

“சின்னத்திரை நடிகர்களுக்கு வேலையில்லாததால் தான் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ் சீரியல்களில் ஆரவார வரவேற்பு பெற்ற ஒரு நாடகத்தின் இயக்குநர் புதியதாக எந்த ஒரு நாடகத்தை தொடங்கினாலும், அதில் நடிக்க பல புதுமுகங்களை தேர்வு செய்வார். அவர்களோடு சில சீனியர்களும் நடிப்பாங்க. அப்படி அவர் அடுத்து தொடங்கவிருக்கும் நாடகத்துக்கு பல சீனியர்களை நடிக்க வையுங்க என்று நாங்கள் கேட்டோம். அவரும் அதற்கு ஓகே சொன்னார். எங்க சங்கத்தில் இருக்கும் 1500 பேருக்கும் செய்தி அனுப்பி அவங்களோட போட்டோஸை அனுப்பச் சொன்னோம். 1500 பேர்ல 800 பேர் தான் போட்டோ அனுப்புவாங்க. அந்த 800 பேர்ல 80 பேர் செலக்ட்டாகி நேர்முகத்தேர்வுக்கு வரச் சொன்னாங்க. அந்த 80 பேர்ல 8 பேர் தான் நேர்முகத்தேர்வுக்கு வந்தாங்க.

வேலை இல்லை, வேலை இல்லைனு சொல்றவங்க ஒரு வேலை வந்திருக்கும்போது அதை பயன்படுத்திக்கணும் தானே! ஆனால் அதற்கு யாரும் வரவேயில்லை. அதற்காகத்தான் புதியதாக ஒரு ஐடியா பண்ணியிருக்கோம். சங்கத்தில் இருக்கும் 1500 பேருடைய போட்டோவையும் கலெக்ட் பண்ணி அதை ஒரு டைரியா போட்டு எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இலவசமா கொடுக்கப்போறோம்.

அடுத்து, எங்களுக்கு வேலையில்லாததுக்கு காரணம் டப்பிங் சீரியல்கள் தான். டப்பிங் சீரியல் வந்ததுக்கு அப்பறம்தான் எங்களுக்கு வேலையில்லைன்னு சொல்றாங்க. நான் 13 வருஷத்துக்கு முன்னாடி சீரியல்ல நடிக்கும்போது, இரண்டு சேனல்களில் மட்டும்தான் சீரியல் ஒளிபரப்புனாங்க. இரண்டு சேனல்களையும் சேர்த்து மொத்தம் 7 அல்லது 8 சீரியல் தான் போயிட்டு இருக்கும். அப்படியிருக்கும்போதே நாங்க தினமும் வேலைக்கு போய்கிட்டு பிஸியாகத் தான் இருந்தோம். ஆனால் இப்போ, சேனல்கள் பெருகிடுச்சு, அதில் ஒளிப்பரப்புற நேரடி தமிழ் சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கு. இப்படியிருக்கும்போது ஒரு சில சேனல்களில் போடுற சில டப்பிங் சீரியல்களினால் எப்படி எல்லாருக்கும் வேலையில்லாமல் போகும்..? 

எனக்கு தெரிஞ்சு நான் ஃபீல்டுல இருக்கிற இந்த 13 வருஷத்துல எனக்கு வேலையில்லை, அதுனால நான் தற்கொலை பண்ணிக்கிறேன்னு கடிதம் எழுதிவச்சு இறந்து போனது ஒரு இயக்குநர் மட்டும் தான். மற்றயாரும் வேலையில்லாததால் இறந்து போகலை. அவங்களுக்கு ஏதோ சொந்த பிரச்னைகள் இருந்திருக்கு. அதுனால அவங்க இறந்திருக்காங்க. ஆனால், அவங்க அந்த பிரச்னைகளை சங்கத்துக்கு கொண்டு வந்திருந்ததால் அதைக் கட்டாயம் சரி செய்திருப்போம். ஒரு நடிகை/நடிகருக்கு சக நடிகர்/நடிகையால் பிரச்னை வந்தால் தான் சங்கத்துக்கு வர வேண்டும் என்று கிடையாது. வேறு யாராலும் ஒரு நடிகை/நடிகருக்கு பிரச்னை வந்தால் அதை சங்கத்துக்குக் கொண்டு வரும் பட்சத்தில் சங்கம் தலையிட்டு அதைத் தீர்த்து வைக்கும். சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் சிலர் தமிழ்நாட்டில் பிரதானமாக இருக்கும் இரண்டு அரசியல் கட்சிகளில் இருக்காங்க. சிலருக்கு போலீஸ் பழக்கமும் இருக்கு. அதனால் பிரச்னைகளை சரி செய்வதும் எளிது தான். அதனால் இனி எந்த ஒரு நடிகை/நடிகருக்கும் சொந்த பிரச்னையாக இருந்தால் சங்கத்துக்கு வர வேண்டும். உளவியல் ரீதியாக இருக்கும் பிரச்னைகளுக்கும் சிறந்த மனோதத்துவ மருத்துவரை வைத்து இலவசமாக கலந்தாய்வு கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

என்னைப் பொறுத்தவரை தான் ஒரு நடிகன் என்கிற அங்கீகாரத்தை தலையில் ஏற்றிக் கொள்வதால் தான் தற்கொலைகள் நடக்கிறது. நான் சீரியல்ல இருந்து சினிமாவுக்கு வருவதற்கு 3 வருஷம் ஆச்சு. அந்த 3 வருஷமும் நான் எந்த சீரியல்லையும் நடிக்கலை. அந்த டைம்ல நான் எல்லா வேலையும் பார்த்தேன். அதை பார்த்தவங்க, ‘என்ன சார் நீங்க இந்த வேலை பார்க்குறீங்க’னு கேட்பாங்க. நானும் உங்களை மாதிரி ஒரு மனிதன் தான். நானும் எல்லா வேலையும் பார்க்கலாம்னு சொல்லுவேன். ஆனால், இப்போ இருக்கிற சிலர் ஒரு சில நாடகங்களில் நடித்து ஃபேமஸ் ஆனதும் வெளியில தன் முகத்தை காட்ட மாட்றாங்க. பைக்ல போனவங்க கார்ல போக நினைக்கிறாங்க. பக்கத்துல கடைக்கு போகக்கூட தயங்குறாங்க. ஏன்னா, தான் ஒரு பிரபலமான நடிகன், நான் எப்படி அதை பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் சிலர் தான் அகல கால் வச்சு பல செலவுகளை இழுத்துப் போட்டுக்கிட்டு, வாய்ப்பு கிடைக்காமல் போனப்பின்னாடி அந்த கடன்களை எல்லாம் அடைக்க முடியாம தற்கொலை பண்ணிக்க முடிவு எடுக்குறாங்க. என்னைக்குமே ஒரு நடிகர் நடிப்பை இரண்டாவதாக தான் வைக்கணும். வேற ஒரு வேலையை முதலாக வைத்துக்கொண்டால் தான் நல்லது. 

சங்கம் என்பது அனைவரின் நலத்துக்காகவும் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதனை உதாசினப்படுத்துபவர்களும் சின்னத்திரையில் இருக்கிறார்கள். தற்போது நடித்து வரும் சில நடிகர்கள் சங்கத்தில் சேர மாட்டோம், அதனால் எங்களுக்கு என்ன பயன் என்று சொல்கிறார்கள். தற்போது அவர்கள் நடித்து வரும் சீரியலில் சம்பள பிரச்னை என்றால் யாரைப் போய் கேட்பார்கள். சங்கத்தினரின் உதவி தேவைப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள்..? இதை எல்லாம் புரியாமல் இருக்கிறார்கள். சங்கம் என்பது ஒரு குடும்பம். குடும்பமாய் இருந்தால் தான் பிரச்னையை சமாளிக்க முடியும். சங்கத்தில் சேராமல் சின்னத்திரையில் நடிச்சிட்டு இருப்பவர்களுக்கு பிரச்னை வர்றப்போ தனியா எதிர்கொள்ள முடியாம சுருண்டுர்றாங்க!” என்று காரசாரமாக பேசி முடித்தார், சின்னத்திரை நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட். 

- மா.பாண்டியராஜன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close