Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடலின் நிதி அமைச்சர்!

 

 

 

யிற்றின் பின்பக்கம், முதுகுத்தண்டின் இரு புறமும் கைக்கு அடக்கமான மாங்காய் அளவுக்கு அவரை விதை வடிவத்தில் சிறுநீரகங்கள் இருக்கின்றன. வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ, அதேபோல நமக்கு இந்த உறுப்பு மிக முக்கியம். சிறுநீரகத்தில், சிறுநீரைப் பிரிக்கக் கூடிய சின்னச் சின்ன சிறுநீர் முடிச்சுகள் இருக்கும். இவற்றை 'நெஃப்ரான்கள்’ (Nephrons) என்பார்கள்.  ஒவ்வொரு நெஃப்ரானும் ஒரு தலைமுடிபோல் இருக்கும். ஒரு சிறுநீரகத்தில் சுமார் 10 லட்சம் நெஃப்ரான்கள் இருக்கும். இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நீளவாக்கில் வைத்தால், சுமார் 65 கிலோ மீட்டர் நீளம் இருக்கும். 

நம் உடலிலேயே அதிக ரத்த ஓட்டம் உள்ள ஓர் உறுப்பு சிறுநீரகம். இதனால், ரத்தத்தில் கலக்கும் எதுவும் உடனே சிறுநீரகத்துக்குப் போய்விடும். அதனால்தான், மாத்திரை-மருந்து சாப்பிட்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாகிறது. பொதுவாக, 'நாட்டுக்கு பட்ஜெட் போடுபவர் நிதி அமைச்சர், வீட்டுக்கு பட்ஜெட் போடுபவர் அம்மா, உடலுக்கு பட்ஜெட் போடுபவர் சிறுநீரகம்’ என்பர். அதாவது, உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தேக்கி வைத்துக்கொண்டு, தேவை இல்லாதவற்றை வெளியேற்றுகிறது. சிறுநீரை வெளியேற்றுவது மட்டும் அல்ல, உடலுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்துவைப்பதும் சிறுநீரகமே.

'ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களைப் பிரித்து எடுத்து வெளியேற்றும் வேலையைத்தான் சிறுநீரகம் செய்கிறது’ என்பது மேலோட்டமான கருத்து. இது சிறுநீரகத்தின் முதன்மையானப் பணியாக இருந்தாலும், இன்னும் சில வேலைகளையும் சிறுநீரகம் மேற்கொள்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலக்கூறான 'எரித்ரோபாய்ட்டின்’ (Erythropoietin) என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்-டி சத்தைப் பதப்படுத்தி, '125 வைட்டமின்- டி’யாக மாற்றுகிறது. 'மெட்டபாலிக் ஃபங்ஷன்’ (Metabolic Function) என்று சொல்லக் கூடிய வளர்சிதை மாற்றப் பணியில் உடலுக்குத் தேவையான குளுக்கோஸின் ஒரு பகுதியைச் சுரக்கிறது. நாம் உட்கொள்ளும் மருந்து- மாத்திரைக் கழிவுகளின் ஒரு பகுதியையும் வெளியேற்றுகிறது.

இவ்வளவு பணிகளைச் செய்யும் சிறுநீரகம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கல் போன்ற பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிட்டால், நாளடைவில் எந்த வேலையுமே செய்ய முடியாமல், சிறுநீரகம் முழுவதுமாகச் செயல் இழந்துவிடும். எனவே, ஆரம்பத்திலேயே சிறுநீரகச் செயல் இழப்பைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மற்ற நோய்களைப்போல், சிறுநீரகச் செயல் இழப்பைக் குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது. காரணம், நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சாதாரணமாகவே சிறுநீர் பிரியும். நீங்களும் 'எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று நினைத்துக் கொள்வீர்கள். ஆனால், சிறுநீரகச் செயல் இழப்பானது, இதய நோய், எலும்பு நோய், ஜீரண மண்டலக் கோளாறுகள், ரத்தசோகை போன்ற நோய்கள் இருப்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக மருத்துவரையும் சந்திப்பது நல்லது. யூரின் மைக்ரோ அல்புமின் (Urine microalbumin) பரிசோதனை, ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் க்ரியாட்டின் பரிசோதனை, சிறுநீரக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலை சிறுநீரகச் செயல் இழப்பைக் கண்டறிய முடியும்!'

சந்திப்பு:

சி.காவேரி மாணிக்கம்

 அடக்கினால் ஆபத்து!

நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்துவிடுவது நல்லது!

வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, மரபு ரீதியாகவும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

உப்பின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக அளவு உப்பானது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் வந்தால், சிறுநீரக நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பத்து பேரில் நீங்களும் ஒருவரா?
முதல் உதவி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close