Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தர்மன் போதித்த வர்மம்!

 

 

ர்மத்தின் மீதான நம்பிக்கையை மிகுதியாக்கி இருக்கிறார் சூர்யா வடிவில் வந்த போதி தர்மன்! மருத்துவத்தின் அனுதினக் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு முன்னோக்கிச் செல்கிறதோ... அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு பாரம்பரியத்தைத் தேடித் துழாவி பழைய மருத்துவத்தை மீட்டெடுக்கும் வேலைகளும் நம்பிக்கையோடு நடக்கின்றன. மரபணுவைத் தூண்டி போதி தர்மனை மீட்டெடுக்கும் அளவுக்கு வர்ம சிகிச்சையின் அவசியம் இப்போது உருவாகி இருக்கிறது. 'நம் கைகளிலேயே எல்லா நோய்களையும் தீர்க்கும் சக்தி இருக்கிறது’ என்கிற பற்றுதலையும் நம்பிக்கையையும் வார்க்கும் சிகிச்சையைத்தான் வர்மம் என்கிறார்கள். 

'பிறரைக் காப்பவரே பெரும் பலசாலி’ என்பார்கள். வர்மத்தைக் கற்றவர்களின் பால பாடமும் இதுதான். வர்மம் தற்காப்புக் கலை மட்டும் அல்ல; அது  ஓர் அற்புதமான  மருத்துவம்.

கோமாவில் இருப்பவரை நடமாட வைக்கவும், பேச முடியாதவர்களை பேச வைக்கவும் வர்மத்தால் முடியும். சித்த மருத்துவத்தை அடுத்து சித்தர்கள் தந்த பொக்கிஷம் வர்மம். உடலுக்குள் இயங்கும் நுட்பமான ஆற்றலே வர்மம். ஆங்கில மருத்துவம் எட்டிப்பார்க்காத காலத்தில் கொடி கட்டிப் பறந்த இந்த மருத்துவம், இடையில் கொஞ்ச காலம் காணாமல் போனது. பாரம்பரிய சிறப்பு உணர்ந்து வர்ம மருத்துவம் இப்போது மீண்டும் பிரபலமாகத் தொடங்கி இருக்கிறது.

கோவையில் உள்ள கலைகளின் ஆய்வு மைய கௌரவ ஆலோசகரான வர்ம மருத்துவர் சண்முகத்திடம் பேசினோம்.

''வர்ம மருத்துவம் குருகுல முறையில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. குமரி, நெல்லை, கோவை மாவட்டங்களில் இந்த மருத்துவம் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. சித்தர்கள் அளித்த இந்த மருத்துவம் பற்றி சுவடிகளும் நூல்களும் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் இது தமிழர்களின் மருத்துவம்.

இரும்புத் துண்டை காந்தம் ஈர்க்கும்போது இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒருவித ஆற்றல் இருப்பதுபோல, உடலுக்குள்ளும் ஓர் ஆற்றல் இயங்கி வருகிறது. அதுதான் வர்மம். நரம்பு, தசை, எலும்பு போன்றவற்றை வர்ம ஆற்றல் வலுவுடையதாக ஆக்குகிறது. தற்காப்பு, மருந்தியல், உடல் பாதுகாப்பு என மூன்று அடிப்படை விஷயங்களை உள்ளடக்கியது வர்மம். இந்த மூன்றும் தெரிந்தால்தான் மருத்துவம் பார்க்க முடியும்.  

வர்ம மருத்துவத்தில் வர்மப் புள்ளிகளை இயக்கும் முறைதான் முக்கியமானது. உடலில் 8,000 வர்மப் புள்ளிகள் இயங்குகின்றன. இந்த வர்ம இடங்களில் ஏற்படும் ஆற்றல் சிதைவே நோய் வருவதற்குக் காரணம். இதனை சரிசெய்தாலே நோய் தீர்ந்துவிடும். இந்த வர்ம இடங்களில் தட்டல், அமர்த்தல், பிடித்தல் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அழுத்தல் அளவில் நிறைய முறைகள் இருக்கின்றன. நோய்க்குத் தகுந்தபடி இந்த அழுத்தத்தைத் தர வேண்டும். குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட உறுப்போ அல்லது நோயோ குணமடையும். உறுப்புகளுக்கு ஏற்ப தனித் தனி தடவல் முறைகள் உண்டு. கைகளால் தொட்டு ஆற்றலை இயக்குவதன் மூலம் உடலுக்கு நன்மை செய்ய முடியும். இப்படி அழுத்தம் கொடுப்பதால் வலி எதுவும் ஏற்படாது. மூட்டுத் தேய்வு, எலும்புச் சிதைவு போன்ற நோய்களையும் வர்மம் குணப்படுத்தும். குறிப்பாக நரம்பியல் சிகிச்சைக்கு வர்ம மருத்துவம் பெரும் பங்காற்றுகிறது. தோல், பல், புற்றுநோய் போன்றவை தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் வர்மத்தில் சிகிச்சை அளிக்கலாம். பக்க விளைவோ, எதிர் விளைவோ உண்டாக்காத மருத்துவ முறை இது!'' என்கிறார் சண்முகம்.

''வலிப்பு நோய்களுக்கு வர்மத்தில் நல்ல பலன் உண்டு. வலிப்பு நோய் வந்தால் கைகளில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தாலே, வலிப்பு நின்றுவிடும். தொடர்ந்து வர்மப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தால் இந்தப் பிரச்னை நிரந்தரமாகத் தீரும்.

வர்மக் கலையின் ஒரு சிறு கூறுதான் அக்குபிரஷர். வர்மக் கலையின் நுட்பங்கள் கடல் போன்றது. வர்மத்தில் ஓர் இடத்தை 12 விதமாக அழுத்தம் (இயக்கம்) கொடுத்தால் 12 விதமான நோய்கள் நீங்கும். அக்குபிரஷரில் அப்படிச் செய்ய முடியாது!'' என்று கூடுதல் விவரங்களையும் விவரிக்கிறார் சண்முகம்.  

உயர்ந்த மலை உச்சிக்கு செல்லும்போது உடலில் ஆக்சிஜன் அளவு குறையும். அதனை வர்மத்தால் கட்டுப்படுத்தலாம். இதற்காக இந்திய ராணுவத்தினருக்கு சண்முகம் தலைமையிலான குழு பயிற்சி கொடுத்து வருகிறது. டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் வர்ம டாக்டர்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பிட்ஸ்..
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close