Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காற்றில் பறக்கலாம்! ஏரியல் யோகா

“உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் யோகாசனங்களை, இன்று பெரும்பாலானோர் உடலை வருத்தி, கடமைக்காகச் செய்கின்றனர். அப்படி அல்லாமல், மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் செய்தால் முழுமையான பலன்களைப் பெற முடியும். அப்படி மனதை உற்சாகப் படுத்தி, உடலுக்கு சுகத்தையும், உணர்வுகளுக்கு உற்சாகத்தையும் தருவதற்காக உருவானதே ஏரியல் யோகா” என்கிறார் ரெனாசா ஸ்டுடியோ உரிமையாளரும் ஃபிட்னெஸ் பயிற்சியாளருமான சர்வேஷ்.

“ஏரியல் யோகா என்றால் என்ன?”

“1991-ல் கிறிஸ்டோபர் ஹாரின்சன் என்பவர் முதன் முதலாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் மற்றும் டான்ஸ் கம்பெனியில், ஆன்டிகிராவிட்டி யோகா என்ற பெயரில் ஏரியல் யோகாவை அறிமுகப்படுத்தினார். வழக்கமாக நாம் செய்யும் யோகாவை தொங்கிய நிலையில் செய்வதுதான் ஏரியல் யோகா. இதைச் செய்யும்போது, காற்றில் பறப்பது போன்ற உணர்வு இருக்கும்.”

“எப்படிச் செய்ய வேண்டும்?”

“ஹம்மாக் (Hammock) எனப்படும் பிரத்யேகத் துணியை உத்திரத்தில் கட்டி, இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படும். தூளியில் குழந்தைகள் தூங்கும்போது, ஒருவித அரவணைப்பை உணரும். உடலுக்கு இதமாக இருக்கும். வலி இருக்காது. நம் பாரம்பரியமான தூளி கான்செப்ட்தான் இந்த யோகாவுக்கான அடிப்படை.”

“யோகாவுக்கும் ஏரியல் யோகாவுக்கும் என்ன வித்தியாசம்?”

“தரையில் அமர்ந்து செய்வது யோகா. ஹம்மாக்கில் அமர்ந்தும், தொங்கியும் செய்வது ஏரியல் யோகா. யோகாவுக்குத் தரைவிரிப்பைப் பயன்படுத்தப்படுவதைப் போல, இதற்கு  ஹம்மாக்கைப் பயன்படுத்துகிறோம். யோகாவை 45 நிமிடங்கள் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்கள், ஏரியல் யோகாவை 10 நிமிடங்கள் செய்வதி
லேயே கிடைத்துவிடும். இப்போது இருக்கும் வேகமான உலகத்தில் யோகா, நடை, தியானம் என நம் ஆரோக்கியத்துக்குக்கூட நேரம் ஒதுக்க இயலாமல் ஓடுகிறோம். இப்படிப்பட்ட சூழலில், இந்த யோகாவுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது.”

“பிரத்யேக முன்பயிற்சி தேவையா? யாரெல்லாம் செய்யலாம்?”

“உடற்பயிற்சி செய்பவர்கள், முச்சுப் பயிற்சியை மேற்கொள்பவர்கள், ஓரளவு யோகா கற்றவர்கள், ஜிம்னாஸ்டிக் தெரிந்தவர்கள்தான், ஏரியல் யோகா செய்யத் தகுதியானவர்கள். வயது வரம்பு இல்லை. ஃபிட்டாகவும் ஆர்வமாகவும் உள்ள அனைவராலும் இந்த ஏரியல் யோகா செய்ய முடியும்.  தேர்ந்த பயிற்சியாளரின் உதவியுடன்தான் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். இதயம், கண் அறுவைசிகிச்சை செய்தவர்கள், வெர்டிகோ பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது. தலைகீழாகச் செய்யும்போது, ரத்தம் தலைக்குப் போவதால், துவக்கத்தில் சிலருக்கு வாந்தி ஏற்படலாம். பிறகு சரியாகிவிடும்.”

“ஏரியல் யோகாவைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா?”

“ஏரியல் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பலரும் யோகா கற்றுக்கொள்ளவும், வொர்க் அவுட்ஸ் செய்யவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்தான். யோகா, வொர்க்அவுட்ஸ் குறித்து எந்த முன் அனுபவமும் இல்லையென்றாலும், அவர்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் சொல்லித்தந்து, ஏரியல் யோகா பயிற்சிக்கு அனுப்பிவைப்போம். ஒரு வகுப்பில் நான்கு பேருக்கு மட்டும்தான் பயிற்சி அளிக்கிறோம். அப்போதுதான் தனிப்பட்ட, சிறப்பான பயிற்சி அளிக்க முடியும்.”

“இந்த யோகாவை வீட்டில் செய்யலாமா?”

“பயிற்சியாளர் இல்லாமல் பண்ணக் கூடாது. நழுவி விழ வாய்ப்பு உள்ளது. ஹம்மாக் ஸ்லிப்பானால் தசைகள் பாதிப்பு ஏற்படலாம்.  தலைகீழாகச் செய்யும்போது, இன்னும் அதிகக் கவனம் தேவையாக இருக்கும். பயிற்சி காலம் முடியும் வரை, பயிற்சியாளரை அருகில் வைத்துக் கொண்டு, நன்றாகப் பயிற்சி பெற வேண்டும். குறைந்தது ஆறு மாதங்கள் முழுமையாகப் பயிற்சி முடிந்த பிறகுதான், வீட்டில் செய்ய முடியும். பயிற்சியாளர் நன்றாகக் கற்றுக்கொண்டார் என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான், தனியாக வீட்டில் செய்ய அனுமதிப்போம்.”


ஏரியல் யோகாவின் பலன்கள்

யோகா செய்தால் ஏற்படக்கூடிய அத்தனை பலன்களும் இதிலும் கிடைக்கும். யோகாவைத் தாண்டி, டான்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் இதில் செய்யலாம். ஒருசில யோகாக்களைத் தவிர, பெரும்பாலான யோகாக்களை இதில் செய்ய முடியும். உடலில் வலி இருக்காது. 

முழு உடலுக்கான பயிற்சி கிடைக்கும்.  தசைகள் விரிவடையும். மூட்டு இணைப்பு வலுப்பெறும். முதுகெலும்புக்கு நல்ல ஸ்ட்ரெச்சிங் கிடைக்கும்.

வியர்வை அதிகம் சுரக்கும். செரிமானம் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராகும். புத்துணர்ச்சி கிடைக்கும். சருமம் பொலிவுபெறும். மன அழுத்தம் குறையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளைக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். 

மன அழுத்தத்தைக் குறைக்கும். சென்சிட்டிவ், எமோஷனல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்.

புதிய செல்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலைத் தயார்ப்படுத்தும்.

நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.


டிப்ஸ்

தளர்வான உடைகளைத் தவிர்க்க வேண்டும்.

வெறும் காலுடன்தான் பயிற்சி செய்ய வேண்டும்.
 

எந்த நகைகளையும் அணியக் கூடாது.

நகங்கள் நன்றாக வெட்டப்பட்டு இருக்க வேண்டும். 

பயிற்சிக்கு இரண்டு மணி நேரம் முன்பிருந்து எதுவும் சாப்பிடக் கூடாது. 

கைகளில் லோஷன், எண்ணெய் போன்றவற்றைப் பூசியிருக்கக் கூடாது.

பயிற்சிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு இருந்தே தண்ணீர் அருந்தக் கூடாது.


ஏரியல் யோகாவின் வீடியோ பதிவை
www.vikatan.com/ மற்றும் https://www.youtube.com/user/vikatanwebtv-ல் காணலாம்!

- ரேவதி, படங்கள்: ர. சதானந்த்
மாடல்: ஷிவானி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
புற்றுநோயை அழிக்கும் புரோட்டான் தெரப்பி
வீட்டு சாப்பாடு - 13
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close