Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 ஸ்டார் ரெசிப்பி

துடிப்பான,  துறுதுப்பான, குறும்புக்கார  நடிகர் கார்த்தி.  “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’  செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா.

வஞ்சிரம் மீன் கிரேவி

தேவையானவை:  வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி  - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம்,  காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி,  வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1.

செய்முறை: பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும். பிறகு, மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து, அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

பலன்கள்: மீன் சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராது. அதிலிருக்கும் ஒமேகா 3 இதய பிரச்னைகள் தாக்காமலும், மன அழுத்தம் வராமலும் பாதுகாக்கும்.  எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும். இதுதவிர, பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் என இதில் உள்ள பல பொருட்களும் மருத்துவ குணம்கொண்டவை.


கேரட் - வெள்ளரி சாலட்

தேவையானவை: கேரட், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா இரண்டு, வெள்ளரிக்காய் - 1, பச்சை மிளகாய் - 1, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.

செய்முறை: கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும். மிளகாயைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை ஒன்று சேர்த்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

பலன்கள்: தினமும் எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்கான வாய்ப்பு பெருமளவு குறையும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க நினைப்பவர்கள், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாடுகளைப் போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையானவை:  பால் - 300 மி.லி, ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 5,  ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்,  சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை:  பாலை நன்றாகக் கொதிக்கவிட்டு, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்றாகக் குளிர்ந்ததும், ஸ்ட்ராபெர்ரி பழங்கள், ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து, மிக்ஸிியில் போட்டு அரைத்துக் குடிக்கவும்.

பலன்கள்: கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. ஸ்ட்ராபெர்ரி பழத்திலும், பாலிலும் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு, பற்களை வலுவாக்கும். ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். நினைவு ஆற்றலை அதிகரிக்கும். வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக்கொள்ளலாம்.

பைனாப்பிள் ஜூஸ்

தேவையானவை:  பைனாப்பிள் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி, ஐஸ் கட்டி, சர்க்கரை - தேவையான அளவு.
 
செய்முறை: பைனாப்பிளில் இருக்கும் முட்களை சுத்தமாக நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் ஐஸ் கட்டி, தண்ணீர் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடிக்கலாம்.

பலன்கள்: வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். சிறிதளவு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாது. உடலில் நச்சுக்களை வெளியேற்றும். சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

- குரு அஸ்வின்,
படங்கள்: எம்.உசேன்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஹார்மோன் கெமிஸ்ட்ரி
இடுப்பு, தொடைக்கான பயிற்சிகள் !
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close