Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி எல்லாம் சுகமே - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை. இதில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, இரைப்பையின் செயல்பாடு, அதைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

தொப்பையைச் சுற்றிய மொத்தப் பகுதியையும் வயிறு என நாம் சொல்கிறோம். உண்மையில், வயிறு என்பது இரைப்பையைத்தான் குறிக்கும். செரிமான மண்டலத்தில் அளவில் பெரியதும், தேவைக்கு ஏற்ப நன்றாக விரிந்து கொடுக்கக்கூடியதுமான உறுப்பு, இரைப்பை. இரைப்பையை கார்டியா (Cardia), ஃபண்டஸ் (Fundus), கார்ப்பஸ் (Corpus), பைலரஸ் (Pylorus) என நான்கு  பகுதிகளாகப் பிரிக்கலாம். கார்டியா என்பது, வயிற்றின் மேல் பகுதி. உணவுக்குழாயில் இரண்டு வால்வுகள் இருப்பதுபோலவே,  இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு உணவு பயணிக்கும் இடத்தில், பைலரஸ் எனும் வால்வு இருக்கிறது. நாம் உணவை மென்று விழுங்கிய பிறகு, உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கு உணவு வந்து சேர்கிறது. இரைப்பையின் தசைகள் மிக வலுவானவை. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு  கடினமானதாக இருந்தாலும், தசைகளால் பிசைந்து... அமிலத்தோடு கலந்து, கூழாக (Chyme) மாற்றி, சிறுகுடலுக்கு அனுப்புகிறது. இரைப்பையில் இருக்கும் அடர் அமிலங்கள் அதிக வீரியமானவை. இரைப்பையின் பி.ஹெச் மதிப்பு இரண்டு என்ற அளவில் இருக்கும். இந்த அளவுக்கு பி.ஹெச் மதிப்பு உள்ள அமிலம், நமது மேல் தோலில் பட்டால், பொத்தலை ஏற்படுத்திவிடும். இவ்வளவு வீரியமான அமிலங்கள் இரைப்பையின் நான்கு அடுக்குச் சுவர் போன்ற தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன. அமிலங்கள், நாம் சாப்பிடும் உணவுகளைச் சிதைப்பதற்கு மட்டும் அல்ல; உணவில் இருக்கும் கிருமிகளை அழிப்பதற்கும் பயன்படுகின்றன.  பெப்ஸின், அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம்  போன்றவை இரைப்பையில் உள்ளன.

இரைப்பையில் மியூகோஸா (Mucosa) எனப்படும் ஒருவகை சளிசவ்வு இருக்கிறது. இது, உமிழ்நீர் போல சுரந்துகொண்டே இருக்கும். உணவுடன் இது கலக்கும்போதுதான், உணவுப்பாதையில் பயணம் சுகமாகும். இல்லை எனில், இரைப்பையைத் தாண்டி உணவு பயணிக்கும்போது, அதிக அளவு அமிலத்தன்மையால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். இரைப்பையின் வேலை உணவை அரைப்பது, கிருமிகளை அழிப்பது, வெளியே அனுப்புவதுதான். உணவை நேரத்துக்குச் சாப்பிடாமல் தவிர்க்கும்போதுதான்,  பெரும்பாலும் இரைப்பை பாதிக்கப்படுகிறது.

வயிறு நிறையச் சாப்பிடுவது தவறானது. உடல் உழைப்பு  குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது.  இரைப்பை, உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,   சாப்பிட்ட பிறகு அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் மீண்டும் ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரைப்பையில்  நன்றாகவோ பாதியோ அரைக்கப்பட்ட நிலையில் உணவு இருக்கும்போது, மேலும் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படும். அசைவ உணவுகளைச் சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பது, கோலா பானங்களைக் குடிப்பது. ஜங்க் ஃபுட் எனும் நவீன உணவுப் பழக்கம் போன்றவை முற்றிலும் தவறானவை.

சாப்பிடும்போதும், சாப்பிட்ட பின்னரும் அவசியம் இல்லாமல் தண்ணீர் அருந்துவதே தவறுதான். பலர், காலை உணவுகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். காலை எப்போதுமே ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளலாம். அதேபோல, சாப்பிடும்போது  சமைத்த உணவுகளையும் சமைக்காத உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பின்னர், உடனே பழங்கள் சாப்பிடுவதும்  தவறு. உணவைச் சீரான இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை, அவர் சாப்பிடுவதை வைத்தே அறிந்துவிடலாம். நேரத்துக்குப் பசி எடுத்து, தேவையான, சரியான அளவில் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என அறியலாம். சாப்பிடுவதில் நேர ஒழுங்கின்மை, ஏதாவது ஒரு ஒருவேளை அதிகமாகச் சாப்பிடுவது, ஒரு வேளை முற்றிலுமாக உணவைப் புறக்கணிப்பது போன்றவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எதை, எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும் என அறிந்து சாப்பிட்டால், செரிமானப் பயணம் எப்போதுமே சுகமாக இருக்கும்.

செரிமானச் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறு காரணமாக, டிஸ்பெப்சியா என்கிற பிரச்னை ஏற்படுகிறது. மேல்வயிற்றில் வலி, எரிச்சல், வயிற்று உப்புசம், உணவைச் சாப்பிட்ட திருப்தி சீக்கிரமாகவே ஏற்படுவது, பசியின்மை, அதிகப்பசி, ஏப்பம், குமட்டல் ஏற்பட்டால், இரைப்பையில் ஏதேனும் கோளாறு இருப்பதை அறியலாம். செரிமானப் பிரச்னைகள் பற்றி  அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்


காலை உணவைத் தவிர்த்தால் எடை கூடுவது ஏன்?

‘உணவைத் தவிர்த்தாலும் உடல் எடை ஏறுகிறதே’ எனக் கவலைப்படுவார்கள். இதற்கு அறிவியல் விளக்கம் உண்டு.  இரவு நெடுநேரம் நாம் சாப்பிடாமல் இருப்போம். நாம் சாப்பிட்ட உணவு முற்றிலும் இரைப்பையில் அரிக்கப்பட்டு வெளியேறிய பிறகு, அமிலம் சுரக்க ஆரம்பிக்கும். அதிகாலை மூன்று மணி அளவில்தான் அதிக அளவு அமிலம் சுரக்கிறது. காலையில் நாம் எழும்போது இரைப்பை அமிலத்தோடு காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், நாம் தீனி போடாமால் தவிர்த்தால், மேலும் மேலும் அமிலம் அதிகரித்துக்கொண்டே செல்லும். விளைவு, மதிய உணவைச் சாப்பிடும்போது, அதிக அளவு அமிலம் இருப்பதால், உணவுத்தேவை அதிகமாகி, மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிடுவோம். மாலை நொறுக்குத்தீனிகள், இரவு மீண்டும் ஹெவியான உணவு  என முற்றிலும் தவறான உணவுமுறைக்குப் பழக்கப்படுத்துவதால், உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை கூடுவது மட்டும் அல்ல, செரிமான உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஸ்வீட் எஸ்கேப் - 8
உடலினை உறுதிசெய் - 13
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close