Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்வீட் எஸ்கேப் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ர்க்கரை நோய் ஏற்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதால், ஆரோக்கியமாக வாழ்பவரைப் பற்றிச் சொல்லி இருந்தேன். மேலும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், மற்றவர்களைவிட நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் சொல்லி இருந்தேன். இதற்கு ஒரு வாசகர், `அது எப்படி, சர்க்கரை நோய் இல்லாதவரைவிட ஆரோக்கியமாக வாழ முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

சர்க்கரை நோய் இல்லாதவர் எந்தப் பரிசோதனையும், உணவுக்கட்டுப்பாடும் இன்றி இருப்பர். ஆனால், சர்க்கரை நோய் வந்து, கட்டுப்பாட்டுடன் இருப்பவர் என்றால், அவர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை என்று தன்னை எப்போதும் ஃபிட்டாக, ஹெல்த்தியாக வைத்திருப்பார். இதனால், எந்த நோயும் நெருங்காமல், ஆயுள் நீடித்திருக்கும்.

இலக்கை அடையத் திட்டமிட வேண்டும். சரியான பாதையில் செல்கிறோமா என அவ்வப்போது அதை மதிப்பீடு செய்ய வேண்டும். இல்லை என்றால், நாம் எங்கே இருக்கிறோம் என்றே தெரியாமல் போய்விடும். அதேபோல, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல்நிலையைத் தெரிந்துகொள்ள மூன்று பரிசோதனைகள் செய்துகொள்வது மிகவும் அவசியம். ஏ, பி, சி எனப்படும் இந்தப் பரிசோதனைகள் சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்ல, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு இதுபற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏ என்றால் ஏ1சி, பி என்றால் பிளட் பிரஷர் (ரத்த அழுத்தம்), சி என்றால் கொலஸ்ட்ரால்.

ஏ1சி: இது மூன்று மாதங்களுக்கான சராசரி ரத்த சர்க்கரை அளவைக் குறிக்கும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இந்தப் பரிசோதனை மிகமிக முக்கியம். குதிரைக்குக் கடிவாளம்போல, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஏ1சி பரிசோதனை. இந்த எளிய பரிசோதனை மூலம், வாழ்க்கைமுறை, மாத்திரை மருந்துகளில் தேவையான மாறுதல்களைச் செய்து, சர்க்கரைநோயை மிகத் திறன்பட கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

மிகவும் திறன்பட சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றால், பரிசோதனை மதிப்பு ஏழு அல்லது அதற்குக் கீழாக இருக்க வேண்டும். அப்படி என்றால், கடந்த 90 நாட்களில் அவரது சராசரி சர்க்கரை அளவு 120-130மி.கி/டி.எல் என்ற அளவில் இருந்தது என அர்த்தம். இதுவே, இந்த மதிப்பு எட்டு அல்லது அதற்கு மேல் இருந்தால், வாழ்க்கைமுறை மற்றும் மருந்து மாத்திரையில் மாற்றம் செய்து, இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

ரத்த அழுத்தம்: சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்கள் தங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தம் 130/80 மி.மீ.ஹெச்.ஜி என்ற அளவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு  பரிசோதனைக்கு வரும்போதும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இயல்பு நிலையில் உள்ளவரைக்காட்டிலும், சர்க்கரை நோயாளிக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

கொலஸ்ட்ரால்: சர்க்கரை நோயாளிகள் கண்காணிக்க வேண்டிய அடுத்த முக்கிய விஷயம், கொலஸ்ட்ரால் அளவு. இதற்கு, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு பற்றிய விழிப்புஉணர்வும் இருக்க வேண்டும். `கெட்ட கொழுப்பு’ எனப்படும் எல்.டி.எல், 100-க்கு கீழ் இருக்க வேண்டும். `நல்ல கொழுப்பு’ எனப்படும் ஹெச்.டி.எல் ஆண்களுக்கு 45-க்கு மேலும், பெண்களுக்கு  50-க்கு மேலும் இருக்க வேண்டும். மொத்த கொழுப்பு 180-க்கு கீழ் இருக்க வேண்டும். டிரைகிளசரைட் 150-க்கு கீழ் இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு டிரைகிளசரைட் அதிகமாக இருக்கும். சர்க்கரையை அளவைக் கட்டுக்குள்வைத்திருந்தால், இது இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இதற்குத் தினமும் நடைப்பயிற்சி மற்றும் இதர ஃபிட்டாக்கும் பயிற்சிகள் செய்தாலே போதும். இதனால், நல்ல கொழுப்பு அளவும் அதிகரிக்கும்.

- தொடரும்


ஸ்வீட்டர்

சர்க்கரையை ஆரம்பத்திலேயே கண்டறிவோம்... ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவோம்... ஆரோக்கியமாக வாழ்வோம்.

டயாபடீஸ் டவுட்

“எனக்குச் சமீபத்தில் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. நண்பர் ஒருவர் மாற்று மருத்துவத்தில் நல்ல சிகிச்சை உள்ளது, அதைச் செய் என்கிறார். ஆனால், அதற்கு முன்பு, மருந்து, மாத்திரைகளை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். இதைச் செய்யலாமா... சரிதானா?”


“உங்கள் வங்கிக் கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் போடுகிறீர்கள், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாமல் போகும் இல்லையா? அதுபோலத்தான் உங்கள் சர்க்கரை நோயும். உங்களுக்குச் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டது என்றால், உண்மையில் உங்கள் கணையத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இன்சுலின் சுரப்பைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது. ஒரு கட்டத்தில் சுரப்பு முற்றிலும் நின்றுவிடும். இதைக் கட்டுப்படுத்த நம்மால் முடியும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி 50 சதவிகிதம் உதவும். மீதம் உள்ள 50 சதவிகிதத்தை மருந்துகளால்தான் செய்ய முடியும். இந்த மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. ஆரம்பநிலையில் கண்டறியும்போது, இந்த மருந்துகள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதுகாக்கின்றன. மாற்று மருத்துவம் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், அதற்காக மருந்து மாத்திரைகளைப் புறக்கணித்து செல்லும்போது, வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே, கவனத்துடன் முடிவெடுங்கள்.”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஸ்டார் ஃபிட்னெஸ்
இனி எல்லாம் சுகமே - 8
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close