குருவருள் இருக்க குறையொன்றும் இல்லை!

வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பிப்பார்கள். தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், அதிக சுபமானவர், நன்மை செய்பவர், எப்போதும் உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்.

நீர்த்தன்மை வாய்ந்த கிரகமான குரு பகவான், புனித நூல்களையும், மேதைத் தன்மையையும், நல்ல பண்புகளையும் குறிப்பவர். செல்வம், அதிர்ஷ்டம், புகழ், பக்தி, மந்திர ஞானம், ஆன்மிக நாட்டம், நல்லொழுக்கம், தியானம், தர்மம், குழந்தைகள், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மதம் மற்றும் அரசியலில் தலைமைப் பதவியில் இருப்பவர்களை இவரே ஆள்கிறார்.

ஒருமுறை, இந்திரன் முதலான தேவர்கள் மட்டுமின்றி, வித்யாதரர், கின்னரர், கிம்புருடர் ஆகியோரும் அடிக்கடி அசுரர்களின் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. மிகுந்த வலிமை, மந்திர சக்திகள், அற்புத அஸ்திரங்கள் போன்றவை தங்களிடம் இருந்தாலும், அசுரர்களை வெல்ல முடியாமல் திண்டாடினார்கள் தேவர்கள். எனவே, அசுரர்களை அடக்குவதற்கான வழிகேட்டு பிரம்மனைச் சரணடைந்தனர்.

‘‘உங்களிடம் எவ்வளவு சக்திகள் இருப்பினும், குருவின் துணையும், வழிகாட்டுதலும் இல்லாமல் பகைவரை வெல்ல முடியாது. எனவே, நீங்கள் ஓர் ஆச்சார்யரைத் துணைக் கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார் நான்முகன். அதற்கேற்ப, தங்களுக்கு வல்லமை மிக்கதொரு குருநாதர் வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் மும்மூர்த்தியரையும் குறித்து தவம் செய்தனர் தேவர்கள். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த மும்மூர்த்திகளும், பிரகஸ்பதியை அவர்களுக்குக் குருவாக அளித்து அருள்புரிந்தனர்.

குருபகவான் தனது திரிகால ஞானசக்தியாலும், ஆன்ம சக்தியாலும் அசுரர்களை வெற்றிகொள்ளும் தந்திரங்களைக் கூறி, தேவர்களின் இன்னல்களைத் துடைத்து, இன்புறச் செய்தார் என்கிறது புராணம்.

தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.

தனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை.சந்திரனும் குருவும் சேர்ந்திருந்தால், குருச்சந்திர யோகம். இதனால் பேரும் புகழும் தேடி வரும். செவ்வாயும் குருவும் இணைந்து நின்றால், குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.

Guruvesaranam

குரு பகவான் காயத்ரீ

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு: ப்ரசோதயாத்

குரு பகவான் மந்திரம்

தேவானாம்ச ருஷினாம்ச குரும்

காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் த்ரிலோகஸ்ய

தம் நமாமி பிருஹஸ்பதிம்

கருத்து: தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குரு, பொன்னன், மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவராகிய பிரகஸ்பதியை வணங்குகிறேன்.

குரு பலம் வேண்டுமா?

ராகு 6ல் நின்று, கேந்திரத்தில் குரு இருந்தால், அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். சகல சுகங்களும் சந்தோஷமும் கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பெருமையுடன் வாழ்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சரி, குரு பலம் இல்லாதவர்களும், அவரின் திருவருளை பரிபூரணமாகப் பெறுவது எப்படி?:

ஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப் பட்டால், நரம்புக் கோளாறுகள், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள், ரத்தம் அசுத்தம் அடைதல், கவலையும் பதற்றமும் தோன்றுதல் ஆகிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

வியாழன்தோறும் விரதம் அனுஷ்டித்து, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, குருபகவானை வழிபட்டு வரலாம். குரு பகவான் சிறப்பாக அருளும் தலங்கள், அவர் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தரிசித்து நன்மை பெறலாம். அது மட்டுமின்றி, குருவின் அதிதேவதைகளான பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பதும் நலம் பயக்கும்.

ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள், வியாழக் கிழமைதோறும் பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து அருகிலுள்ள கோலத்தைப் போட்டு, குருபகவானை கீழ்க்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபட்டு வரம் பெறலாம். திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.

Table

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

பன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும்!

குரு பலம் வேண்டும் மேஷ ராசிக்காரர்கள், ஆலங்குடிக்குச் சென்று தரிசிக்கலாம். ரிஷபராசிக்காரர்கள் தரிசிக்க வேண்டிய தலம், தென்குடித் திட்டை; மிதுனம் தக்கோலம்; கடகம் இலம்பயங்கோட்டூர்; சிம்மம் திருப்புலிவனம்; கன்னி பாடி (சென்னை); துலாம் சுருட்டப்பள்ளி; விருச்சிகம் புளியரை (தென்காசிக்கு அருகில்); தனுசு உத்தமர்கோவில்; மகரம் கோவிந்தவாடி அகரம்; கும்பம் திருவொற்றியூர்; மீனம் மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்).

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்களுக்கு உரிய இந்தத் தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சித்து வழிபட, சகல நலன்களும் உண்டாகும். குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.