Latest News
Published on :30-11--0001 06:00 AM
'தானே' துயர் துடைத்தோம்!
களத்தில் விகடன்
விகடன் தானே துயர் துடைப்பு அணி

புலம்பெயர்ந்து வந்தவர்களைப் புயலும் தாக்கினால்?

 'தானே’ தாக்குதலுக்கு உள்ளான கடலூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கின்றன இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்கள். பேரினவாதத் தாக்கு தலில் சிக்கித் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் கடந்து வரத் தொடங்கியவர்களைத் தாய்த் தமிழகம் அரவணைத்து வரவேற்றது. அவர்களுக்கெனத் தனித்தனிக் குடியிருப்புகள் கட்டித் தங்கவைத்தது. இத்தகைய முகாம்கள் தமிழ்நாட்டில் 100 ஊர்களில் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கானவர் கள் இருக்கிறார்கள். 10-க்கு 10 கூரைக்குள் முடக்கப்பட்ட இவர்களை 'தானே’ புயலும் பதம் பார்த்தது. 30 ஆண்டுகள் பழமையான மரங்களே வேரோடு பிடுங்கி எறியப்பட்டபோது, சாதாரண மூங்கில் கழிகளால் கட்டப்பட்ட கூரை வீடுகள் என்ன ஆகும்?

''லேசான மழை பெய்தாலே... அடுத்த ஒன்றிரண்டு வாரத்துக்கு எங்கட வீட்ல வாழ்றது கஷ்டம். ஆனா, அன்றைக்கு மழையும் காத்தும் வந்து எங்க வாழ்க்கையைச் சீரழிச்சுப்போடுச்சு. எங்க முகாம் வாசல்ல இருந்த பள்ளிக்கூடத்து மேற்கூரை பிய்ஞ்சு விழும்போது, இன்றைக்கு அவ்வளவுதான்னு நினைச்சோம். இந்த இடத்துல இருக்க வேண்டாம்னுட்டு, வீட்டையும் பொருட்களையும் அப்படியே போட்டுட்டு பக்கத்துல உள்ள அரசாங்கக் கட்டடத்துல போய் இருந்துக்கிட்டோம். காத்துல மொத்த வீடுமே அழிஞ்சுபோயிருக்கும்னு நினைச்சோம். நாள்பட்ட கூரைகளை அப்படியே காத்து தூக்கிட்டுப் போயிருச்சு. உள்ள நாங்க வெச்சிருந்த பொருட்களும் போயிருச்சு. துணிமணிகளைக் காணலே. இனிமே இதை நாங்க சேகரிக்க இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ''   -  எதிர்காலமும் சூன்யமாய் ஆன நிலையில், நமது நிருபர்களிடம் தங்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டார்கள் சொந்த நாட்டையும் இருந்த வீட்டையும் இழந்த தமிழர்கள்.

சொந்த மண்ணில் படும் கஷ்டங்களை விட, நம்பி வந்த மண்ணில் படும் துன்பம் இன்னமும் துயரமானது! 'விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணி’யின் தொடக்கமாக அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்கள் அமைந்தன.

''எங்களுக்கு மாதத்துக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுக்குது அரசு. முகாமை விட்டுக் காலையில வெளியில் போகலாம். சாயந்திரம் 5 மணிக்குள்ள உள்ள வந்திரணும். சொந்தக்காரங்ககூட எங்களைப் பார்க்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கித்தான் உள்ள வரணும். வெளியூருக்குப் போனால், அங்க இருக்கிற போலீஸுக்குச் சொல்லிட்டுத்தான் போகணும். இவ்வளவு கஷ்டத்தோடதான் வாழுறோம். எங்க நாட்டுல இப்ப போர் முடிஞ்சதுனால இப்ப கொஞ்சம் நிபந்தனையைத் தளர்த்தி இருக்காங்க. உடம்புல வலு உள்ள வாலிபப் பசங்க மட்டும்தான் வேலைக்குப் போறாங்க. கூலி வேலை, கட்டடம் கட்டுற வேலைக்குப் போவம். சாயந்திரம் திரும்பிடணும்கிறதால பலரும் எங்களுக்கு வேலை கொடுக்கிறது இல்லை. மாசத்துக்கு 10 நாள் வேலை கிடைச் சாலே பெரிய விசயம். வேற வருமானம் கிடையாதுங்கிறதால அரசாங்கம் கொடுக்கிற ரேஷனை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு காலத் தைக் கழிக்கிறோம்.

எங்களைவிட எங்க பெண்கள் அனுபவிக்கிற கஷ்டம் அதிகம். அவங்க உடம்புக்கு வர்ற எந்தப் பிரச்னையையும் சரியாக் கவனிக்கிறது இல்லை. ஆரோக்கியமான சாப்பாடு இல்லை. குளிக்கிறதுக்கு மறைவான இடம் இல்லை. ஓலை, சாக்கு வைத்து மூடிய, ஆனால் கதவு இல்லாத மறைவுக்குள் இருந்துதான் குளிக்கிறாங்க. வயசான விதவைப் பெண்களுக்கு சம்பாதிச்சுக் கொடுக்க ஆரும் இல்ல. உசிரை மட்டும் வெச்சுக்கிட்டு இருக்கோம்...'' என்று அவர்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க, கண்களில் நீர் முட்டுகிறது.

''உங்களுக்கான பெரிய திட்டங்களை அரசாங்கம்தான் செய்து தர வேண்டும். உடனடியாக என்ன வேண்டும்? அதை நாங்கள் செய்து கொடுக்கிறோம்'' என்று அவர்களிடமே நாம் கோரிக்கையை வைத்தோம். ''இன்ன கொடுங்க என்று கேட்கிற நிலைமையில நாங்க இல்லை. ஆனா, நீங்களே கேட்கிறதுனால சொல்றோம்...'' என்று தயக்கத்துடன் தர்மலிங்கம் என்பவர் போட்ட பட்டியல் இது...

அரிசி, பருப்பு, மிளகாய்த் தூள், சமையல் எண்ணெய், குளியல் சோப், சலவை சோப், லுங்கி, நைட்டி, போர்வை... ஆகியவை இவர் களது அன்றாட வாழ்க்கைக்கு மிக மிக அத்தியாவசியப் பொருட்கள். ''எது முடியுமோ அதைக் கொடுங்கள். சந்தோஷமா வாங்கிப்போம்!'' என்றார்கள். 'அனைத்தையும் தருகிறோம்’ என்றதும் அவர்களுக்கு அப்படி ஓர் ஆனந்தம். 'செய்வன திருந்தச் செய்’ என, அந்த இரண்டு முகாம்களுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கு வதற்கு விகடன் முடிவெடுத்தது.

'தானே’ துயர் துடைக்க நீளட்டும் நம் கரங்கள் என்ற கோரிக்கையுடன் 'விகடன்’ விடுத்த அழைப்பை ஏற்று, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வழங்கிய லட்சக்கணக்கான பணத்தின் முதல் தொண்டாகத் தொடங்கப்பட்டது இந்த நிகழ்வு.

அம்பலவாணன்பேட்டை முகாமில் மொத்தம் 128 வீடுகள்.குறிஞ்சிப்பாடி முகாமில் மொத்தம் 182 வீடுகள். அம்பலவாணன் பேட்டை முகாமில் மொத்தம் 153 ஆண்கள், 142 பெண்கள், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 148 பேர். இதில் 15 பேர் சிறு குழந்தைகள். இதேபோல் குறிஞ்சிப்பாடி முகாமில் ஆண் கள் 215, பெண்கள் 205, 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தை கள் 58, சிறு குழந்தைகள் 33. இவை அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் கணக்கு. அட்டை இல்லாதவர்களுக்கும் உதவ முடிவெடுத்தோம். அதனால், மொத்தம் 1,099 பேர் இதன் பயனாளிகள்.  

அவர்கள் கேட்ட அனைத்துப் பொருட்களும் முதல் தரத்தில் வாங்கப்பட்டன. 'விகடன் வாங்குகிறது. அதுவும் சேவை மனப்பான்மையுடன் செய்கிறது’ என்றதும், அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் தங்கள் பங்களிப்பு என்று சொல்லி கணிசமான தொகையைக் கழிவாகக் கொடுக்க முன்வந்தார்கள். முகாமில் இருப்பவர்களைக் கணக்கிடும் பணியின்போதுதான் குழந்தைகளுக்கான அவசியத் தேவையான பால் பவுடரும் வாங்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. குழந்தைகளுக்குத் தேவையான துணிகளை இலவசமாகக் கொடுப்பதற்கு காரமடையைச் சேர்ந்த காளிமுத்து என்ற நமது வாசகர் முன்வந்தார். அவரிடம் இருந்து அதனைப் பெற்றோம்.

3,300 கிலோ அரிசி, 330 கிலோ பருப்பு, 330 பாக்கெட் எண்ணெய், 330 பாக்கெட் மிளகாய்த் தூள், 660 துணி சோப்புகள், 1,000 குளியல் சோப்புகள், 160 பால் பவுடர் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. 400 லுங்கிகள், 350 நைட்டிகளுக்கான துணி, 500 போர்வைகள் வாங்கப்பட்டன. இவை அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான அளவுக்குப் பிரித்து இதற்கெனத் தயாரிக்கப்பட்ட 'தானே’ பைகளில் போடப்பட்டன. இந்த மூட்டைகளைத் தாங்கிய லாரி கடந்த 10-ம் தேதி காலையில் அம்பலவாணன்பேட்டை முகாமுக்குள் சென்றபோது, அந்த மக்களின் முகத்தில் மலர்ந்தது மகிழ்ச்சி. ஒவ்வொரு குடும்பத் துக்கும் அவை பிரித்து அளிக்கப்பட்டன. வறண்ட மண்ணில் மழைத் துளி பட்டதும் உறிஞ்சி உயிர் பெறுவதுபோல, அந்த மனித மனங்கள் இந்த உதவியை உணர்ந்ததை அவர்களின் மலர்ந்த முகங்கள் உணர்த்தின. அதே தினம், மதியம் குறிஞ்சிப்பாடி முகாம் மக்களுக்கும் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. கேரம்போர்டு, செஸ் போர்டு, கிரிக்கெட் கிட், வாலிபால் பந்துகளும் வாங்கித் தரப்பட்டன. ''விகடனுக்கும் விகடன் வாசகர்களுக்கும் ரொம்ப நன்றி'' என்று சொல்லிக் கண்கள் கலங்கி விட்டனர்.

''எங்களுக்கு அவசியத் தேவையான பொருட்களைக் கொடுத்துட்டீங்க. இன்னொரு புயலைத் தாங்குற அளவுக்கு எங்களுக்குச் சக்தி இல்லை. அதனால, நிரந்தரக் குடியிருப்பு எங்களுக்குத் தேவை. அரசாங்கம் இதுக்காக 44 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறதாகச் சொல்றாங்க. இதை முதலமைச்சர் அம்மா விரைவில் வீடுகளாக் கட்டித் தரணும்!'' என்று அம்பலவாணன் பேட்டை முகாம் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதுபோன்ற நிதி ஒதுக்கீடு குறிஞ்சிப்பாடி முகாம் மக்களுக்கு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கான முயற்சியை முதல்வர் எடுக்க வேண்டும் என்பதும் இவர்களது வேண்டுகோளாக அமைந்தது.

இந்த இரண்டு முகாம்களுக்கு மட்டும் அல்ல; தமிழகம் முழுக்க உள்ள அனைத்து அகதிகள் முகாம்களுக்கும் அடிப்படை வசதிகள் முதல் நிரந்தர நிம்மதிக்குத் தேவையான விஷயங்கள் வரை செய்துகொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்துக்கு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மனதளவிலும் உடல் ஆரோக் கியத்திலும் பலவீனமாக இருக்கிறார்கள்.

''நாங்க இங்க தப்பிச்சு வந்து வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம். எங்க சொந்தபந்தம் எங்கேயோ இருக்கு. ஆனா, விகடன் வாசகர்கள்தான் இப்ப எங்க சொந்தக்காரங்களா ஆகிட்டாங்க!'' என்று கை கூப்பி நம்மை வழி அனுப்பிவைத்தார்கள் மக்கள்.

வாருங்கள் வாசகர்களே... இன்னும் இன்னும் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது. நாமும் கை கொடுப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

ஆனந்த விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook