Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளவரசியின் சம்பந்தி வீட்டு சர்ச்சை!

இறந்துபோனவருக்குச் சிகிச்சையா?கலைந்துபோன காவலர்கள்..

ஒரு மரணம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான இளவரசியின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி கே.கே.நகர். பகுதியில் வசிப்பவர் கலியபெருமாள். நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இன்ஜினீயர், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணி இளவரசிக்கு சம்பந்தி. இதனால், கடந்த சில வருடங்களாக திருச்சி, புதுக்கோட்டை மாவட் டங்களில் 'பவர்’ சென்டராக விளங்கியவர். ஜி.கே. என அழைக்கப்படும் இவரால் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் ஏராளம்.

கலியபெருமாளுக்கு மூன்று மகன்கள், மூத்த மகன் கார்த்திக் என்பவர்தான் இளவரசியின் மகள் பிரியாவை திருமணம் செய்தவர். அடுத்தவர் ராஜேஷ். டாக்டரான இவர், திருச்சியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். மூன்றாவது மகனான விஜய் பிரபு, இன்ஜினீயரிங் முடித்து பிசினஸ் செய்தாலும், குடும்பத்தில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செல்லப்பிள்ளை. அப்பாவைப்போல் விஜய் பிரபு வருவார் என பலராலும் பேசப்பட்ட நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை 3.35 மணிக்கு திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள எடமலைப்பட்டி ரயில்வே மேம்பாலத்துக்கு அருகே நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரின் மரணம் திருச்சியில் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அவர் ஓட்டிவந்த 'சவர்லே குரூஸ்’ கார் பாலத்துக்குக் கீழேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்த தகவல் கிடைத்த கொஞ்ச நேரத்தில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது '108’ ஆம்புலன்ஸ். அதில் வந்தவர்கள் விஜய் பிரபுவை பரிசோதித்துவிட்டு, விஜய் இறந்துவிட்டார் என்ற தகவலை உறவினர்களுக்குச் சொல்லிவிட்டு உடனே சென்றுவிட்டனர். இந்தத் தகவல் போலீஸாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இறந்தது ஜி.கே-யின் மகன் என்பது தெரியவர பரபரப்பானது திருச்சி. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாருக்கு ஏதோ தகவல் வர, அனைத்து காக்கிகளும் சுவற்றில் மோதிய பந்துபோல திரும்பிவிட்டனர்.

பிறகு, விஜய் பிரபுவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினர். சிகிச்சைக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லி தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு எடுத்துச் சென்றனர். கொஞ்ச நேரத்தில் விஜய் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். இறுதியில், விஜய்யின் உடல், பிரேதப்பரிசோதனை செய் யப்படாமல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்​பட்டது. இந்த நடவடிக்கைகள்தான் விஜய்யின் மரணத்தை விவாதத்துக்குள்ளாக்கியது. அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த கலியபெருமாள் வீட்டுக்கு பத்திரிகை​யாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில், சனிக்கிழமை காலை சம் பந்தியின் வீட்டில் வைக்கப்பட்ட விஜய்யின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இறுதிச்சடங்கு முடியும் வரை அங்கேயே இருந்தார் இளவரசி. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மன்னார்குடி திவாகரன், தனது ஆதரவாளர்​களுடன் அஞ்சலி செலுத்த வந்ததும் பரபரக்கத் தொடங்கியது ஏரியா. அஞ்சலி செலுத்திய திவாகரன் உடல் எடுக்கும்​வரை அங்கேயே இருந்தார். அதன்பிறகுதான் கூட்டம் கூடியது.

இதையெல்லாம் நேரில் பார்த்த சிலர் நம்மிடம், ''108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள், பரிசோதித்துவிட்டு விஜய் இறந்துவிட்டதாக கூறிவிட்டுச்சென்ற பிறகு, விஜய்யின் உடலை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது ஏன்? விபத்து ஏற்பட்டது எப்படி? ஏன் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை? மொத்தத்தில், விஜய்யின் மரணம் மர்மமாகவே இருக்கிறது'' என்றனர்.

கலியபெருமாளின் ஆதரவாளர்களோ, ''பிராட்டியூர் பகுதியில், சர்வீஸுக்கு விட்டிருந்த காரை எடுப்பதற்காக போனார் விஜய் பிரபு. 'திருவண்ணாமலை கிரி வலத்துக்கு போக வேண்டும்’ என்று அவரை வேகமாக வரச் சொல்லியிருக்கிறார் கலியபெருமாள். அதனால் வேகமாகக் காரை ஓட்டியிருக்கிறார் விஜய். அப்போது முன் டயர் வெடித்ததில், காரின் வேகத்தை கன்ட்ரோல் செய்ய முடியாததால் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலப் பள்ளத்துக்குள் கவிழ, சீட் பெல்ட் போடாத விஜய் பிரபு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார். அவர் மீதே கார் உருண்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜய்யை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். விஜய்யின் மரணத்துக்கான காரணத்தைப் பெற்றோர் ஆட்சேபனை செய்யாததால் விஜய் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதுதான் உண்மை'' என்றனர்.

பெரிய இடத்து சம்பந்தம் என்றால் சந்தேகம் ஏற்படுவது இயல்புதான்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கூப்பிட்டா வர மாட்டியா? கொளுத்திடுவேன்!
ராகிங்கை எதிர்த்தால், பி.சி.ஆர். வழக்கா?

எடிட்டர் சாய்ஸ்