Latest News
மக்களைக் காத்தருளும் சிங்கப்பூர் காளி!

  வெளிநாட்டில் உள்ள வாசகர்களே...! நீங்களும் இதுபோலவே உங்கள் நாட்டில் உள்ள கோயில்கள்,  ஆன்மிகத் தலங்கள் பற்றி புகைப்படங்களுடன் எழுதி அனுப்பலாம்.கூடவே விழாக்களின் விடியோ  பதிவு இருப்பின், அதையும் worldsakthi@vikatan.com என்ற இமெயில் முகவரிக்கு உடனே அனுப்பலாம்.

  உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக அன்பர்கள் அதனை ரசித்து சிலிர்க்கட்டும்!

 

-சிங்கப்பூரில் இருந்து வாசகி தீபா சாரதி

‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், முற்காலத்தில் தாங்கள் குடியேறிய தேசமெங்கிலும் கோயில்களை நிர்மாணித்து வழிபட்டு வந்தார்கள். இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், பர்மா முதலான பல நாடுகளில் இன்றைக்கும் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு திகழும் ஆலயங்களே இதற்கு உதாரணம்! 

இந்த அடிப்படையில், நவீன சிங்கப்பூரின் ஆதிகாலத்தில் இருந்தே, இந்துக்களால், குறிப்பாக தமிழர்களால் ஆலயங்கள் பலவும் கட்டப்பட்டன. அந்த வகையில், சிங்கப்பூரின் மிகப் பழைமையான ஆலயங்களில், ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலும் ஒன்று!

சுமார் 1835&ஆம் வருடம், மிகச் சிறியதொரு கோயிலாக உருவாக்கப்பட்டதாம் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில். இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்றும் ‘குட்டி இந்தியா’ என்றும் சொல்லப்படுகிற இந்தப் பகுதி அந்தக் காலத்தில், சுண்ணாம்புக் கம்பம், புதுக்கம்பம் என்றெல்லாம் சொல்லப்பட்டன. இங்கே, தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில், தமிழகத்தில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவர்கள், தங்களின் காவல்தெய்வமாகத் திகழும் ஸ்ரீகாளிதேவிக்கு ஒரு கோயில் கட்டி, வழிபடவேண்டும் என விரும்பினர். தங்களின் பூர்வீக ஊரில் உள்ள கிராமத்துத் தெய்வங்களின் திருவுருவப் படங்களையும் ஸ்ரீகாளியம்மனின் படத்தையும் வைத்து வழிபட்டவர்கள், அம்மனுக்குக் கோயில் எழுப்பவேண்டும் என முடிவு செய்ததும்... மளமளவென சிங்கப்பூரின் பல பகுதிகளில் வசித்து வரும் தமிழர்கள், ஒன்று கூடி, தங்கள் கருத்தும் அதுவே என வலியுறுத்தினார்கள்.

பிறகு, படிப்படியாக வளர்ந்த ஆலயம், கடந்த 1983-ஆம் வருடம், அழகிய ஆலயமாக திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கோயிலைச் சுற்றியுள்ள இடங்களை, கோயிலின் பெயரிலேயே வாங்கி, இன்னும் விரிவாக்கினார்கள் பக்தர்கள். பின்னர், 8.2.1987 அன்று பிரமாண்டமான ஆலயத்துக்கு, ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர். அப்போது ஆலய நிர்வாகக் குழுத் தலைவராக பொறுப்பேற்றிருந்த எஸ்.ஆர்.கிருஷ்ணன், ஏராளமான திருப்பணிகளைச் செய்தாராம்!

அப்போது நடைபெற்ற சம்பவம் ஒன்றைச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
கோயில் திருப்பணி நடப்பதற்கு முன்னதாக, தற்காலிமாக ஓரிடத்தில் விக்கிரகங்களை வைத்து, பாலாலயம் செய்தனர். அப்போது மந்திரங்களை ஓதி, கும்பத்தில் ஆவாஹனம் செய்யும் வேளையில், ஸ்ரீவீரமாகாளியம்மனின் கழுத்தில் இருந்த மலர்மாலை, திடீரென கழன்று, ஆவாஹனம் செய்யப்பட்ட கும்பத்தில் விழுந்தது. கூடி நின்ற பக்தர்கள் அதிர்ந்து, அதிசயித்துப் போனார்கள்.

பூஜை மற்றும் விழாவை வீடியோ எடுப்பதற்காக வந்திருந்த எஸ்.வி.நாதன் என்பவர் நாத்திகராம். இதைக் கண்டு சிலிர்த்துப் போன நாதன். பிறகு கடவுள் மீது மாறா பக்தி கொண்டு, எப்போதும் நெற்றியில் திருச்சின்னங்கள் அணிந்து காட்சி தந்தார். தவிர, இதை தன் எழுத்திலும் பதிவு செய்திருப்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றனர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள்!

இதேபோல், சூன் ஹு வாட் எனும் நகைக்கடை உரிமையாளரான கென்னி ஃபேன், பக்தியில் அதிக ஈடுபாடு இல்லாதவராக  இருந்திருக்கிறார். 90 - ஆம் வருடம், யதார்த்தமாக ஸ்ரீவீரமாகாளியம்மனை வந்து தரிசித்துச் செல்ல... வியாபாரம் மற்றும் மனரீதியாக நல்ல வளர்ச்சியும் மாற்றமும் ஏற்பட... அவ்வளவுதான், அன்று துவங்கி இன்று வரை, தினமும் ஸ்ரீவீரமாகாளியைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
‘‘சக்தி வாய்ந்த அன்னை இவள். இன்னிக்கி குடும்பம், வியாபாரம்னு நல்லா இருக்கேன்னா, வீரமாகாளிதான் காரணம். ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வந்து, அம்மனைத் தரிசனம் பண்ணிட்ட பிறகுதான், கடையைத் திறப்பேன். ‘

அம்மா தாயே... உன்னை நம்பி நானும் என்னை நம்பி சில ஊழியர்களும் இருக்கோம். எங்களைக் காப்பாதும்மா’ன்னு அவகிட்ட ஒப்படைச்சிட்டுத்தான் வியாபாரத்தை ஆரம்பிப்பேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் கென்னி ஃபேன், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு வந்து, பிள்ளையார்பட்டி தலத்துக்குச் சென்று, விநாயகரை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அம்மன் மீது கொண்ட பக்தியால், கோயில் திருப்பணிக்காக, பல ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? இங்கே ஸ்ரீவீரமாகாளியைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வாரம் ஒருமுறை, எப்போதும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைக் காலங்களில், ஆயிரம் கிலோ அரிசியைக் கொண்டு, எல்லோர்க்கும் உணவு அளிப்பது வழக்கம். கார்த்திகை, பிரதோஷம் முதலான நாட்களிலும் பக்தர்களுக்கு நம்மூரைப் போலவே சுடச்சுடப் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

மாசி மாதத்தில் மகா மகத்தையொட்டி பிரம்மோத்ஸவ விழா இங்கே சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது ஸ்ரீசண்டி ஹோமமும் விசேஷமாக நடைபெறும்.சிங்கப்பூரில் முதன்முறையாக, கடந்த 2010 ஆம் வருடம், மிகப்பெரிய அளவில் சகஸ்ர சண்டி யாகம் நடைபெற்றது. சிங்கப்பூர், மலேசியா, கோலாலம்பூர் என பல நாடுகளில் இருந்தும் தமிழர்களும் மற்ற நாட்டவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.

ஸ்ரீவீரமாகாளி அம்மன் கோயிலில் ஸ்ரீலக்ஷ்மி துர்கைக்கும்  பெரியாச்சி அம்மனுக்கும் சந்நிதி அமைந்துள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீலக்ஷ்மி துர்கைக்கு நெய்விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு என்கின்றனர், பக்தர்கள். திருமணத் தடை மற்றும் குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்குவோர், தொடர்ந்து ஒன்பது செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீலக்ஷ்மி துர்கைக்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும் என்று பெருமைபடக் கூறுகின்றனர், பெண்கள்! தவிர, ஸ்ரீவீரமாகாளியின் பெண்பக்தர்கள், ஒரு குழுவாக இருந்து, அடிக்கடி கூட்டு வழிபாடு, சிறப்பு பூஜை எனச் செய்து வருகின்றனர்.

‘‘கோயிலுக்கு வந்து விளக்கேத்தறதும் இங்கே உள்ள தமிழர்களைப் பாத்துக் கொஞ்சம் பேசுறதும் தனிசுகம். வீட்டிலிருந்து ஏதேனும் சமைத்து எடுத்து வந்து, எல்லாருக்கும் தர்றது என் வழக்கம். பூஜையெல்லாம் முடிச்சிட்டு, ஒருத்தருக்கொருத்தர் தங்களோட அனுபவங்களையும் வாழ்க்கைச் சூழல்களையும் பகிர்ந்துக்கறது, மிகப்பெரிய பாக்கியம்’’ என்று சொல்லும் விசாலாட்சி அம்மாவுக்கு வயது 62.
 
‘‘எங்களுக்கு தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற மன்னார்குடிதான் பூர்வீகம். எனக்கும் சரி, கணவர், குழந்தைகளுக்கும் சரி... ஸ்ரீவீரமாகாளிதான் எல்லாமே! இந்தக் கோயிலுக்கு வந்து வீரமாகாளியையும் ஸ்ரீதுர்கையையும் தரிசனம் பண்ணிட்டு அப்படிக் கொஞ்சம் உக்கார்ந்தாப் போதும்... ஏதோ தஞ்சாவூர்ப் பக்கத்துல ஒரு கோயில்ல உக்காந்தது போல அப்படியொரு நிம்மதியும் மனநிறைவும் கிடைச்சிரும்!’’ என்று பூரிப்புடன் தெரிவிக்கிறார் வைரம் எனும் 59 வயதுப் பெண்மணி.

செவ்வாய்க் கிழமை ராகுகால வேளையில் பூஜையின் போது சிறிய அளவில் பஜனையும் நடைபெறும். இதில் ‘டோலக்’ எனும் இசைக்கருவியை வாசிப்பவர்... இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று! ‘‘எல்லாக் கடவுளரையும் மதிக்கிறேன். நான் கற்றுக் கொண்ட வாத்தியத்தை எங்கே வாசித்தால் என்ன... கேட்பவர்களுக்கும் வாசிப்பவருக்கும் நிறைவைத் தந்தாலே போதும்!’’ என்கிறார் இவர்.

கோயிலே உலகம்; ஸ்ரீவீரமாகாளியே தெய்வம் என்று கடந்த அறுபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார் அய்யாக்கண்ணு பண்டாரம். கோயிலில் நாகஸ்வரம் வாசிக்கும் பத்மநாபனும் தவில் வாசிக்கும் சம்பந்தம் ரமேஷும் கோயிலையும் அம்மனையும் அவளின் பெருமைகளையும் விழிகள் விரிய விவரிக்கின்றனர். ‘‘எங்களுக்கு மயிலாடுதுறைப் பக்கத்துல, தேரழுந்தூர்தான் பூர்வீகம். பல தலைமுறைகளா சிங்கப்பூர் அம்மனுக்கு தவில் வாசிச்சுக்கிட்டு வரோம்.

ஆலயத்தில், இடும்பர், மதுரைவீரன், பெரியகருப்பர், சின்னக்கருப்பர் ஆகியோருடன் ஸ்ரீராமரும் ஸ்ரீஅனுமனும் காட்சி தருகிறார்கள். இங்கே உள்ள சிவலிங்கம், காஞ்சி மகா பெரியவா வழங்கியது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர், கோயில் நிர்வாகத்தினர்! பெரியவா அளித்த மற்றொரு சிவலிங்கம், மலேசியாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

உத்ஸவத்தின் போது, வெள்ளிரதத்தில் பவனி அரும் அம்மனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பல இனத்தவர்களும் வசித்து வரும் சிங்கப்பூரில், பிற இனத்தவரும் அன்னையின் அருளால் கவரப்பட்டு, கோயிலுக்கு வருகின்றனர். நம் பாரம்பரிய உடைகளான புடவை, பட்டுப்பாவாடை போன்றவற்றை அணிந்தபடி அவர்கள் வரும் அழகே அழகு!

கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட என்.ஆர்.கிருஷ்ணன் என்பவர் கோயில் நிர்வாகத்தின் தலைவராக இருந்து கோயிலைப் பராமரித்து வந்தார். இப்போது இவரின் மகன் செல்வகுமார் செயலாளர் பொறுப்பில் இருந்து, கோயிலை நிர்வகித்து வருகிறார். தற்போது, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான் மற்றும் ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆகியோரின் திருச்சந்நிதிகளில் வெள்ளிக்கவசம் அமைக்கப்பட்டுள்ளது.

‘‘இப்போது நவீன வசதிகளுடன் கூடிய மடப்பள்ளி, திருமண அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு, இந்த வருடம் 2013-ல், கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் கோயில் நிர்வாகக் கமிட்டியின் பொருளாளர் சிவகடாட்சம். தவிர, பல்நோக்கு மண்டபமும் தியான மண்டபமும் ஒரேசமயத்தில் 250 பேருக்கு மேல் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான மண்டபமும் கட்டப்பட்டு வருகின்றன!
கும்பாபிஷேகத்துக்காக கோல்டன் வில்லா நகைக்கடை உரிமையாளர் கென்னி ஃபேன், பத்தாயிரம் வெள்ளிகளைக் கும்பாபிஷேகப் பணிகளுக்காக வழங்கி உள்ளார்.

எந்த நாடாக இருந்தால் என்ன... மக்களைக் காத்தருளும் ஸ்ரீவீரமாகாளி எங்கிருந்தும் அருள்பாலிப்பாள்!
 

COMMENT(S): 14

மற்ற மதங்கள் குறிப்பாக இஸ்லாம், கிறித்துவ ஆலயங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாமா?

இன்னுமொரு சிறப்பு செய்தி. நமது தமிழ் மக்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களில், காலையோ, மதியமோ இரவோ தங்கள் வசதிக்கேற்ப அனைத்து ஆன்மிக பக்தர்களுக்கும், அன்னதானம் இடுவது ஆச்சரியமான செய்தி அல்லவா?
தினந்தோறும் திருமண வீடுபோலவே இந்த திருக்கோயில் காட்சி அளிப்பது கண்கொள்ளாக்க் காட்சி! சிங்கப்பூர் செல்லும் தமிழ் மக்கள் தவறாது ஒரு முறை இங்கு சென்று தரிசித்து வாருங்கள்.மகிழ்ச்சியோடு வாழுங்கள்!

எனக்கும் என் குடும்பத்துக்கும் இந்த காளி அன்னையாய் நிற்கிறாள்

100%உண்மை , இந்த அம்மாவை நான் கடந்த 13 வருஷங்கலா சேவிக்கிரேன் . அம்ம இருக்குமிடம் செரஙகூன் என்ரு சொல்ராக ஆனால் செல்லமா சீரங்கம் என்ரெ சொல்ரேன் .அம்மாவின் அருகிலேயே அன்னன் சினிவாசப்பெருமாலுக்கும் கோயில் இருக்கு .அதை தான்டினால் ருத்திரகாளி அம்மன் இருக்காங்க.வீரம்மாகோயிலுக்கு அடுச்த பஸ்நிருத்தம்
பெருமால் கோயில் பஸ் நிருத்தம் அதர்க்கும் அடுத்து ருத்திர காளி கோயில் . மூன்ருமே நடக்கும் தொலைவுதான் . அடிக்கடி நான்ய்ம் என் மருமகளும் போய்வருவோம் இந்தம்மா வை பார்த்தால் எனக்கு அவ்ளோ மனது நிம்மதி கிடைக்குது

உன்மை தான் இஙகு தமிழர்கல் வாழ்கயில் கோயில்கல் முக்கிய பஙுகு உன்டு,,அதிக கோவில் உல்லது.

when i landed in singapore (15 years back), the first place i visited in the morning was this temple. frankly i did not know much about the temple at the time. Believe me .... some 7 years after coming here, our family learnt that our kula dheivam is Kaliamman. Amazing. i visit the temple in the morning of every important day and SHE never lets me down. the Durgai there is a visual treat. can sit and see her for hours together.

Wow really useful information.......Thanks Vikatan.

சிங்கப்பூர் காளி கோயில் பற்றிய கட்டுரை வெகு அற்புதம்! புகைப்படங்களையும் சேகரித்து வெளியிட்டுள்ளீர்கள். எனினும், என் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு அந்தக் கோயிலின் வெளிப்புறத் தோற்றம் எப்படி இருக்கும், கோபுரம் என்ன அமைப்பில் இருக்கும் என்று அறிய ஆவலாக இருக்கும். எனவே, இனி வரும் கட்டுரைகளில் கோயிலின் வெளிப்புறத் தோற்றங்களையும் புகைப்படங்களாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

க்

Thamizhkathilrunthu vanthu ingu pani puriyum ennai pondra palarukku kaliamman kovilil vanthu vananginaal antha vaarame niraivu petrathu pole

Displaying 1 - 10 of 10
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook