Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook
பஞ்ச துவாரகை
Posted Date : 11:01 (10/01/2014)Last updated : 17:08 (25/08/2014)

 'எவனொருவன் எனது அவதாரங்களின் மேன்மையை அறிகிறானோ, அவன் மீண்டும் பிறப்பதில்லை. அதாவது, முக்தியை அடைவது உறுதி’

- ஸ்ரீமத் பகவத் கீதை

து, இறை அவதாரங்களுக்கு மிகவும் பிற்பட்ட காலம். அவன் அவதரித்த காலத்தில், அவனது திருவடியைப் பணியும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதிகாசங்களும் புராணங்களும் பரம்பொருளை அறிவதற்கான வழிகளை நமக்குச் சொல்கின்றன.

ஸ்ரீராமன் எனில் அயோத்தியும், ஸ்ரீகிருஷ்ணர் எனில் வட மதுரையும் பிருந்தாவனமும் நம் நினைவுக்கு வரும். ஆம்... இறை வனுக்கு நிகரானவை திருத்தலங்கள்!

ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யர் எனும் மகான், ஆச்சரியமான சேதி ஒன்றைத் தருகிறார். அதாவது, ஏதோ ஒரு நினைவுடன், ஏதோ ஒரு காரணத்துக்காக, இறை நினைப்பே சிறிதும் இல்லாமல் அவனது தலத்தின் பெயரை நாம் உச்சரித்தாலும், அந்த ஒரு காரணத் துக்காகவே நம் மீது அன்பைப் பொழிவானாம், ஆண்டவன். எனில், தெய்வத்தின்மீது பற்றுகொண்டு, அவனைத் தவிர வேறெதையும் நினையாமல், அவனது திருநாமத்தையும் அவனது திருத்தலப் பெயர்களையும் உச்சரித்தால், நம் மீது கருணை மழை பொழியமாட்டானோ?! அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசித்தால், இன்னும் இன்னும் எவ்வளவு பலன்கள் கிடைக்கும்?!

இறைவனுடனான தொடர்பால், முக்தி தரும் வல்லமை சில தலங்களுக்கு உண்டு. அவற்றை 'மோட்சத் தலங்கள்’ என்பர். அயோத்தி, வடமதுரை, ஹரித்வாரம், காசி, காஞ்சி, உஜ்ஜயினி, துவாரகை ஆகிய 7 மோட்சத் தலங்களில், துவாரகை தனிச்சிறப்பு கொண்டது.

பகவான் கண்ணன், ஆட்சி செய்த தலம். 'அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என கண்ணனாலேயே கொண்டாடப்பட்ட க்ஷேத்திரம்! துவாரகையின் பிரபாவத்தால் புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள்கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையுமாம். எனில், அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு முக்தி உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுமட்டுமா? துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும்கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடையும். இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவி களுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

துவாரகையின் எண்ணற்ற மகிமைகளில் சில துளிகளே இவ்வளவு தித்திப்பு எனில், சற்றே விரிவாக அனுபவித்தால்... அதுவும், பஞ்ச துவாரகைகளையும் சேர்த்து தரிசித்தால்... அது, எத்தகைய புண்ணியம்!

துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் குறிக்கும். பஞ்ச துவாரகை தரிசனம் என்பது நெடுங்காலத்து வழக்கம் அல்ல. எனினும், கிருஷ்ணானுபவத்தின் பெருமையை அறிந்து, துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில தலங்களையும் சேர்த்து 'பஞ்ச துவாரகைகள்’ என்றனர் பெரியோர். அவை:  கோமதி துவாரகா, பேட் துவாரகா, டாகோர் துவாரகா, ஸ்ரீநாத துவாரகா மற்றும் காங்க்ரொலி துவாரகா. இவற்றில் முதல் மூன்று தலங்கள் குஜராத்திலும், மற்றவை ராஜஸ்தானிலும் அமைந்துள்ளன.

##~##

வேப்பிலையும் இனிக்கும்... டாகோர் துவாரகாவில்!

தமிழகத்தில் இருந்து பஞ்ச துவாரகை யாத்திரை மேற்கொள்வோர், நேராக குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரை அடைவதே உத்தமம். அங்கிருந்து பரோடா செல்லும் வழியில், நடியாத் (ழிகிஞிமிகிஞி) எனும் ஊருக்கு முன்னதாக அமைந்துள்ளது, டாகோர் நகரம். இங்கு அருள்புரியும் இறைவனின் திருநாமம் ரணசோட் ராய்; 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்’ என்று அர்த்தம்.

ஸ்ரீகண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், அந்த நகரின் மீது 18 முறை படையெடுத் தான் ஜராசந்தன். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்ததுதான் மிச்சம்! 17 மற்றும் 18வது யுத்தத்துக்கு இடையில், கால யவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான். உடனே, பலராமனுடன் ஆலோசித்த கண்ணன், கடலின் நடுவே 12 யோசனை அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்தார் (1 யோசனை= 10 மைல்). பிறகு, தமது வல்லமையால், மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார்.

பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட் டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!

வெகுதூரம் சென்ற கண்ணன், இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார். அவரைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த கால யவனன், அங்கே படுத்திருந்த நபரைக் கண்ணன் என்று கருதி, கோபத்துடன் உதைத்தான். அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும், கால யவனன் எரிந்து சாம்பல னான். அந்த நபர்... முசுகுந்தன்; இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன்.

போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவிய தால், அவர்களிடம் இருந்து ஒரு வரம் பெற்றிருந்தார் முசுகுந்தன். வெகுகாலம் உறங்காமல் இருந்த முசுகுந்தன், நன்கு உறங்குவதற்கு ஏற்றவாறு ஆள் அரவமற்ற ஓர் இடத்தைக் காட்டும்படி வேண்டினார். தேவர்களும் இந்தக் குகையைக் காட்டி, '’நீங்கள் இங்கே படுத்துக்கொள்ளலாம். உங்களை எவரேனும் எழுப்பினால், நீங்கள் எழுந்து பார்த்ததும், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள்'' என வரமளித்தனர். முசுகுந்தன் பெற்ற அந்த வரத்தை, கால யவனனை அழிக்கப் பயன்படுத்திக்கொண்டார் பகவான். ஆக, கால யவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்ததாம்!

கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறாராம். இதற்குக் காரணம், போடானா எனும் பக்தர்!

துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.

எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம். வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போடானாவுக்காக மாட்டுவண்டியை ஓட்டினான். அதுதான், இறை அன்பு!

டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக் கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!

இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, 'எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோ’ என்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியுமவனான’ என கண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போடானாவிடம் பேசினான். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!’ என்றார் பகவான்.

ஆனால், போடானாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தன் இல்லை! அவன் மனைவி, கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். என்ன ஆச்சர்யம்! மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி கிளம்பிச் சென்றனர். பக்தியானது, எதையும் சாதிக்க வல்லது என்பதற்கான சாட்சி இது!

சரி... துவாரகை நாயகனே டாகோரில் தரிசனம் தருகிறார் எனில், துவாரகையில் நாம் வணங்கும் கிருஷ்ண விக்கிரகம் எப்போது, யாரால் நிறுவப்பட்டது?

ருக்மிணி பூஜித்த கண்ணன்!

கோமதி துவாரகையும், பேட் துவாரகையும் சேர்ந்து துவாரகாபுரி எனப்படும்.

இரண்டுக்கும் நடுவே இன்றைக்கும் கடல் அமைந்துள்ளது. கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!

கோமதி துவாரகையின் மூல மூர்த்தியை, டாகோருக்கு போடானா எடுத்து வந்த பிறகு, ருக்மிணிதேவி பூஜித்த மூர்த்தமானது, லாட்வா கிராமத்தின் குளத்தில் கிடைத்தது. துர்வாச முனிவர் துவாரகைக்கு வந்தபோது, காரணமே இல்லாமல், 'கண்ணனைப் பிரிவாய்’ என ருக்மிணிக்குச் சாபம் கொடுத்தாராம். அப்போது, 'இந்த மூர்த்தத்தில் நான் உறைந்துள்ளேன். இதனை அனுதினமும் பூஜித்து வா’ என மூர்த்தம் ஒன்றைக் கொடுத்தாராம் ஸ்ரீகிருஷ்ணர். அந்த மூர்த்தமே, குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனை, துவாரகையில் இன்றைக்கும் தரிசிக்கலாம்! இந்த ஆலயத்தை, கிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன் அமைத்ததாகச் சொல்வர். துர்வாசரின் சாபம் காரணமாக, துவாரகையில் இருந்து ஓகா செல்லும் வழியில், தனிக்கோயிலில் காட்சி தருகிறாள் ஸ்ரீருக்மிணிதேவி. துவாரகைக் கோயிலின் துவஜஸ்தம்பம் (கொடிமரம்), உலகின் மிகப் பெரியது. ஒருகாலத்தில், 'குசஸ் தலீ’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், கண்ணனின் பேரருளால் மோட்ச துவாரமாகச் சொல்லப்பட்டு, துவாரகை என்றானது!

 பேட் துவாரகையில்... தேவகி தரிசனம்!

கடலுக்கு நடுவில், தீவு போன்ற விசாலமான இடத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் உள்ளது. முதலில், ப்ரத்யும் சந்நிதி; நடுவில் கண்ணனின் ஆலயம். தேவகி, மாதவன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்குதான்! இங்கே ரணசோட்ஸாகர், ரத்ன தலாப் (குளம்), கசாரி தலாப் முதலான குளங்கள் உள்ளன.

தவிர, ஸ்ரீமுரளிமனோகர் மற்றும் ஸ்ரீஅனுமனுக்கு ஆலயங்கள் உள்ளன.

இங்கே தரிசித்துவிட்டு, ப்ரபாஸ தீர்த்தத்துக்குச் செல்வது அவசியம். இந்தத் தீர்த்தக்கரையில்தான், யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்ட னர். இதை அடுத்து, ப்ராசீ த்ரிவேணி. இங்கு செல்லும் வழியில், பிரம்ம குண்டம் எனும் குளமும், பிரம்ம கமண்டலு எனும் கிணறும் உள்ளன. இவற்றுக்கு முன்னே ஆதிப்ரபாஸம், ஜலப் பிரபாஸம் என இரண்டு குண்டங்கள் உண்டு. ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா எனும் நதிகள் கடலில் கலக்கின்றன. இதனால் 'ப்ராசி த்ரிவேணி’ எனப்படுகிறது. இந்த ஊர், குஜராத் சௌராஷ்டிரத்தின் மேற்கு ரயில்வேயின் ராஜ்கோட் வேராவல் ரயில்பாதையில் உள்ளது. சோம் நாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம்.

இங்கே, பால(கா) தீர்த்தம் என்பது வெகு பிரசித்தம். வேராவல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், பாலுபூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இங்குதான், கண்ணன் தனது அவதா ரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுந்தம் எழுந்தருளினாராம். இங்கு பால குண்டம் எனும் குளமும், அருகில் பத்மகுண்டமும், அடுத்து அரச மரமும் அமைந்துள்ளது. இதனை 'மோட்ச பீபல்’ என்கின்றனர். இங்கே, வைகுண்டம் செல்லக் காத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நாத துவாரகாவும் காங்க்ரோலி துவாரகாவும்

'நாத துவாரா’ என்றால், நாதன் இருக்கு மிடத்தின் வாயில், அல்லது நாதனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வாயில் என்று பொருள். ராஜஸ்தானில், உதய் பூருக்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீநாத்ஜி.

துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை, வைணவ ஆச்சார்யர்களில் முக்கிய மானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது, பூஜித்து வந்ததாகச் சொல்வர். இதையடுத்து, அந்நியப் படையெடுப்பின்போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர், ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு (1762ல்) இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது, சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுக்கவே, 'இந்த இடமே இறைவனுக்கு விருப்பம் போலும்' என உணர்ந்த தாவோஜி, அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.

இடது கையால் கோவர்த்தனகிரியைச் சுமந்தபடியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்தபடியும் அழகு தரிசனம் தருகிறார் ஸ்ரீநாத்ஜி. கறுப்பு சலவைக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியனவும் உள்ளன. இங்கே, எம்பெருமாளை குழந்தைக் கண்ணனாகவே பாவித்து, வணங்குகின்றனர். குழந்தையால் நீண்ட நேரம் நிற்கமுடியாது அல்லவா?! எனவே, ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார் இறைவன்.

ஸ்ரீகண்ணனுக்கு இங்கு விதம்விதமான பிரசாதங்கள்! ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் அன்னக்கூட உத்ஸவம் விசேஷம்! பக்த மீராவுக்கு, ஸ்ரீகண்ணன் அடைக்கலம் அளித்த தலமும் இதுவே!

ஸ்ரீநாத துவாரகாவிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது காங்க்ரோலி துவாரகா. இங்கும் சிறிய மூர்த்தமாகக் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார் கண்ணன். இதுவும், அவசியம் வணங்க வேண்டிய தலம்!

Comments

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்