Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருகிய நாற்றுகளுடன் விவசாயிகள் தர்ணா..!

ன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் முக்கிய ஆதாரமாக இருப்பது பேச்சிப்பாறை அணை. ஒவ்வொரு வருடமும் கன்னி பூ பருவமான ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் இன்னும் திறக்கப்படாததால் தண்ணீர் இன்றி நாற்றுகள் கருகிப்போனது. உடனடியாக தண்ணீர் திறக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய நாற்றுகளுடன் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோவிடம் பேசினோம், ''கன்னிப்பூ பருவம், சம்பா பூ பருவம்னு ரெண்டு பருவங்கள் இருக்கு. ஜூன் மாதம் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது கன்னிப்பூ பருவம், அக்டோபர் மாதம் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது சம்பா பூ பருவம். ஒவ்வொரு வருடமும் கன்னிப்பூ பருவத்தில் சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிக்குள் தண்ணீர் திறப்பது வழக்கம். ஒவ்வொரு  வருடமும் ஜூன் மாதம் தண்ணீர் திறப்பை முன்னிட்டு மே மாதத்திலேயே அணை மூலம் பாசன வசதி பெறும் அனைத்து கால்வாய்களையும் பொதுப்பணித்துறையினர் தூர் வாருவார்கள். ஆனால், இந்த வருடம் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. வழக்கம் போல ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நாற்று நட்டுவிட்டோம்.

தண்ணீர் திறக்கப்படாததால் பேரூர், பறக்கை ஆகிய இடங்களில் நடவு செய்த நாற்று நாற்றாங்காலிலேயே தண்ணீர் இன்றி கருகிவிட்டது. பல இடங்களில் நாற்று வளர்ச்சி முற்றிவிட்டது. இனி அதை நடவு செய்தாலும் பயனில்லை. குமரி மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் நடவு செய்ய வேண்டிய நாற்றுகள் நாற்றாங்காலிலேயே கருகியும், முற்றியும் விட்டது.

தூர்வாராவிட்டாலும் பரவாவில்லை, சாகுபடிக்காக தண்ணீரையாவது திறங்கள் என்று கூறினால் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் கண்டுகொள்ளவில்லை. அதனால் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய மற்றும் முற்றிய நாற்றுகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஜமாபந்தி நடப்பதால் ஆட்சியர் இன்று வரவில்லை. அவரது உதவியாளரிடம் மனு கொடுத்துள்ளோம். இன்னும் இரண்டு நாட்கள் வரை  காத்திருப்போம். அதன் பின்னரும் தண்ணீர் திறக்காவிட்டால் பேச்சிப்பாறை அணை முன்பு பெரிய அளவில் போரட்டத்தில் ஈடு பட இருக்கிறோம்’’ என்றார்.

இதேபோல், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விட இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ