Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிந்து, ஜெர்சி, காரி, சிம்மி, காங்கயம்.... களைகட்டிய அந்தியூர் சந்தை!

அந்தியூர் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

ந்தியூர் மாட்டுச்சந்தை என்னதான் பல நூறு  வருடங்கள் தொடர்ந்து நடந்தாலும், ஒவ்வொரு வருடமும் அதே புதுப் பொலிவோடும் ஆராவாரத்துடனும் நடப்பதே இதன் சிறப்பு. ஈரோடு மாவட்டம்,  அந்தியூர் குருநாத சுவாமி கோவில் ஆடித்திருவிழாவை ஒட்டி நடைபெறும் இந்த சந்தை,  கடந்த புதன்கிழமை தொடங்கி இன்று வரை நான்கு நாட்கள் நடைபெறுகின்றது.

கொஞ்சம் வரலாறு:

திப்பு சுல்தானின் முக்கியமான படைத்தளம் அந்தியூர். இங்கு முன்னர் இருந்த கோட்டையில்தான் தனது குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். இவரின் குதிரைகளை விற்கவும் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுக்குதிரைகளை வாங்கவும் அந்தியூரை தேர்ந்தெடுத்து சந்தையை உருவாக்கினர். குதிரைகளுக்கான லாடம், சாரம் வண்டி அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இந்த சந்தை உருவாக்கப்பட்டது.

அந்தியூர் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

சந்தை தனியாக இருப்பதை விட,  கோயில் திருவிழாவின் போது நடந்தால் சிறப்பாக இருக்குமென்பதால்   அன்று தொடங்கிய இந்த சந்தை, அந்தியூர் குருநாத சுவாமி கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக,  நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இன்று வரை நடைபெற்று வருகிறது. எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஓர் காரணத்தால் தடைபடும். ஆனால் மைசூர் மன்னர் திப்புசுல்தான் காலத்தில் துவங்கிய இந்த சந்தை,  சுதந்திரத்திற்கு முன்பும் அதற்கு பின்பும் இன்று வரையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

2016 ஸ்பெஷல் :

வரலாறு எல்லாம் சரிதான், இந்த வருட சந்தையில் என்ன ஸ்பெஷல் என்று என்று கேட்பவர்களுக்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என ஆஜராகுகின்றன அதிக பால் கறக்கும் வெளிநாட்டு மாட்டு இனங்களான  சிந்து, ஜெர்சி இனப் பசுக்கள், காரி, சிம்மி, காங்கயம் காளைகள், நாட்டு மாடுகள், மூக்கணாங்கயிறுகள் இல்லாமல் பட்டிப் போட்டு மேய்க்கப்படும் பர்கூர் மலையின் பாரம்பரிய இனமான செம்மறை மாடுகள் போன்றவை...

அந்தியூர் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...


உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் பயன்படும் காரி மாடுகள், சிம்மி, காங்கயம் மற்றும் நாட்டின மாடுகள் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை விலைபேசப்பட்டன.

எங்கேயும் நான் ராஜா (கத்தியவார் குதிரைகள்)

இந்த வருட சந்தையில்  வட இந்திய குதிரைகளான கத்தியவார், மார்வார் ஆகிய இனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கம் போலவே நான்தான் ராஜா என்பதைபோல கோவையை சேர்ந்த நொக்ரா இன கருப்பு கத்தியவார் குதிரை, 20 லட்சம் ரூபாய்க்கு விலை வைக்கப்பட்டது. அடுத்து அதே இனத்தை சேர்ந்த வெள்ளை நிற குதிரை 15 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. குதிரைகளின் விலையை,  அவைகளின் தரம், அழகு, கம்பீரம் போன்றவற்றை கொண்டு முடிவு செய்தனர்

அந்தியூர் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

காளை... காளை... முரட்டுக்காளை:
 
முரட்டுக் காளைன்னு சொன்னா இரண்டு விஷயம் கண்முன்னாடி வந்து நிற்கும். ஒன்று நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னொன்று கொங்குநாட்டை பூர்வீகமாகக் கொண்ட காங்கேயம் காளைகள். இங்கு கொண்டுவரப்பட்ட அந்த கம்பீர காளைகள்,  ஜோடி 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஆந்திர இன மாடான ஓங்கோல் இனமாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை ஜோடி 12 லட்சத்திற்கு விற்பனையாகின்றன.மேலும் விற்பனைக்கு இல்லாமல் ஆண்டுதோறும் கண்காட்சிக்காகவும் பாரம்பர்யத்திற்காகவும் ஏராளமானோர் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்திருந்தனர்.

ஆட்டம் ஆடும் அழகு குதிரைகள்

பார்வையாளர்களை பெரிதும் கவர்வது என்றால் அது இசைக்கேற்ப நடனமாடும் குதிரைகள்தான்.  கோபியை அடுத்த மேவானியை சேர்ந்த தேச குமார், அண்ணாதுரை கொண்டு வந்திருந்த குதிரைகள்,  இசைக்கு ஏற்ப நடனமாடி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தக் குதிரையை ஒன்றரை வயதில்  புதுக்கோட்டையில் இருந்து வாங்கி வந்து, 3 மாதங்களிலேயே பயிற்சி அளித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது,  "ஒரு குதிரையை பழக்கும் போது முதலில் நாம் அதற்கு சேவகனாய் அடிமைபோல மாறவேண்டும். பின்னர் அந்த குதிரை நாம் சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டு நமக்கு அடிமை போல செயல்படும் " என்றார்கள் . திருமண விழாக்கள்,கோயில் விழாக்களில் பெரும்பாலும் முன்னே அணிவகுத்து செல்வது இந்த குதிரைகள்தான்.

அந்தியூர் சந்தை சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 3 1/2 அடி மட்டுமே வளரக்கூடிய கொங்கனர் இன குட்டை மாடுகளும், கர்நாடகத்திலிருந்து ஒன்றரை அடி உயரம் வளரக்கூடிய ஹசன், நாந்தாலி ஆடுகளும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் பாரி,போயர்,ஜமுனா போன்ற ஆட்டினங்கள் அதிகமாய் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றில் போயர் ஆடுகள், ஜோடி ஒரு லட்சத்திற்கு விற்பனையானது.மேலும் அந்தியூர் புகழ் பிரம்பு குச்சிகளும் அதிகமாக விற்பனையாகின.

ஆடி கார், பி எம் டபிள்யூ கார்களை வாங்கத் துடிக்கும் மக்களுக்கு மத்தியில், குதிரைகளை வாங்கி, மன்னர்களை போல செல்கின்ற மக்களை பார்ப்பது அழகிய காட்சிதான். கார் ரேஸ், பைக் ரேஸ்கள் நடந்தாலும்,  இங்கு நடைபெறும் குதிரை பந்தயத்தை பார்க்கும் அனுபவம் ஓர் தனி சுகம்தான்.

நவீன கருவிகள் வந்த பின்னும் இதுபோன்ற திருவிழாக்கள்தான்,  கால்நடைகள் வளர்க்கும் பழக்கத்தை இன்றும் உயிர்ப்போடு வைத்துள்ளது. இங்கு புதிதாய் வருபவர்கள் மண்வாசனையோடு சேர்ந்து உயிரின் சுவாசத்தையும் உணரலாம். மொத்தத்தில் இந்த குதிரை சந்தை டக்கரு டக்கரு.

 
 - ச.செந்தமிழ் செல்வன்  (மாணவப்பத்திரிகையாளர்)
 படங்கள்:  ரமேஷ் கந்தசாமி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ