Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழகாய் ஆட்டமாடும் ஆவணத்துக் குதிரைகள்.

காதணி விழா, திருமண விழா, கோவில் திருவீதி ஊர்வலங்களில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் நாட்டியத்தை பார்த்திருப்பீர்கள். மணமகனோ, காதணிச் செல்வனோ குதிரையில் அமர்ந்திருக்க, அதிரும் இசைக்கேற்ப நாட்டியமாடியபடி வரும் குதிரையைப் பார்க்க ஊரே கூடி நிற்கும். இந்த நாட்டியக் குதிரைகளின் பூர்வீகம் ஆவணம். புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் ஆவணத்திலும், அதையொட்டிள்ள காசிம்புதுப்பேட்டை கிராமத்திலும் பல குடும்பங்கள் தலைமுறைத் தொழிலாக நாட்டியக் குதிரைகளை வளர்க்கிறார்கள். முறையாக நாட்டியமும், சாகசங்களும் பயிற்றுவிக்கப்பட்ட இருபது குதிரைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன..

அப்லாக், சஞ்சாப், குமைத், நொக்காரா என குதிரைகளில் பலவகை உண்டு. நொக்காரா தான் ஆட்டத்துக்குத் தகுந்தது. வெள்ளை நிறத்தில், உயரமாகவும் மிடுக்காகவும் இருக்கும். மனிதர்களுடன் இணக்கமாகப் பழகும். 4 வயது குட்டிகளை வாங்கி வந்து நாட்டியம் பழக்குகிறார்கள். ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடக்கும் குதிரைச் சந்தைகளில் குதிரைகளை வாங்குகிறார்கள். இதற்கென, ஆவணத்தில் இருந்து ஒவ்வோராண்டும் ஒரு குழு அம்மாநிலங்களுக்குச் செல்கிறது.

ஆட்டத்துக்கு ஆண் குதிரைகள் தான் பொருத்தமாக இருக்கும். ஆட்டக் குதிரைகளுக்கென்று சில தகுதிகள் உண்டு. உடம்பில் கருப்பு நிறமே இருக்கக்கூடாது. காது இரண்டும் ஒட்டினாற் போல் இருக்க வேண்டும். 9 சுழிகள் இருக்க வேண்டும். 1 சுழி குறைந்தாலும் அது ஆட்டத்துக்குத் தகாது. நல்ல நொக்காரா குதிரை 5 லட்சம் வரை விலை போகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் புகழ்பெற்ற அக்குலிஜ் கால்நடை சந்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் புஜ்கர் கால்நடைச் சந்தைகளுக்குப் போய் குதிரைகளை வாங்கி வருகிறார்கள். 

 

குதிரைக்கு பயிற்சி அளிப்பதற்கென்று மூத்த பயிற்சியாளர்கள் இங்கு உண்டு. வடமொழிக்குப் பழக்கப்பட்ட குதிரைகளுக்கு முதலில் தமிழ் பழக்குகிறார்கள். பிறகு நாட்டியப் பயிற்சி அளிக்கிறார்கள். நடைப் பயிற்சி, ஓட்டப்பயிற்சி, முன்காலை தூக்கிக்கொண்டு நிற்கும் பயிற்சி, காலை மடக்கி வணக்கம் சொல்லும் பயிற்சி, உரல் மேல் நான்கு கால்களையும் தூக்கிவைத்து நிற்கும் பயிற்சி என ஏகப்பட்ட பயிற்சி முறைகள் உண்டு. காலில் சலங்கையை கட்டி விட்டவுடன் மிரண்டு கால்களை அங்கும் இங்கும் எடுத்து வைக்கும். அதுதான் முதல் ஸ்டெப். படிப்படியாக இசைக்கருவிகளுக்கு பழக்குகிறார்கள். 6 முதல் 7 மாத பயிற்சியில் குதிரை நாட்டியக்குதிரை ஆகிவிடும். 

ஆவணத்தில் இருக்கும் குதிரைகள், அந்தக்கால விட்டலாச்சார்யா எடுத்த வீரத்திலகம், ராஜா தேசிங்கு முதல், இந்தக்கால, டும் டும் டும், தரையில் வாழும் மீன்கள், முதலிடம், மாப்பிள்ளை மனசு பூப்போல, காவலன் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளன. 

குதிரைகளை பிள்ளைகள் போல பராமரிக்கிறார்கள் இம்மக்கள். காற்றாடி, புல் மெத்தை என குதிரைக்கு ராஜ உபசாரம் நடக்கிறது. உணவும் அப்படித்தான். அவித்த கானப்பயிர், கோதுமை-கம்பு-சோள மாவுகள், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, இஞ்சி சேர்ந்த உணவு உருண்டை, பசும்புல், சோளத்தட்டை... தவிர, காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு சாக்கு புல். வாரத்துக்கு ஒருமுறை, 80 வகையான நாட்டு மருந்துகளை கருப்பட்டி சேர்த்து அரைத்து, அரிசி சாதம் சேர்த்து உருண்டை உருட்டி கொடுக்கிறார்கள். வாரம் ஒருமுறை, கணுக்கால், மூக்கு, நெற்றி, வாலில் உள்ள முடிகளைக் கத்தரித்து அழகு செய்கிறார்கள்.

-வெ.நீலகண்டன்

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ