Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது வெறும் கானா இல்லே... போட்டி கானா!

கானா

சென்னை மெரினா கடற்கரை. அதிகாலைக் காற்றில் மெல்லிய ஈரம் படர்ந்திருக்கிறது. வாக்கிங், ஜாக்கிங் என கடலோரச் சாலை பரபரத்துக் கிடக்கிறது. அலைதொடும்  மணற்பரப்பில் இருந்து அமைதியைக் கிழித்துக் கொண்டு எழுகிறது அந்தப் பாடல்.

“நண்பா... நண்பா பாட்டை நீயும் கேளுய்யா...

டோலாக்கை தலையில நீ நைட்டு வச்சுனு தூங்குய்யா...

 

தப்பா எதுனா பாடினாக்கா தலையில விழுந்துடும் கொட்டு

அய்யா புள்ளை பாட வந்தா பெஷலு மைக்கு செட்டு

புதுப்புது பாட்டுகளை திறமையால கட்டு

அய்யாகிட்ட இருக்கிறதுல சின்னதான பிட்டு

கானான்னா வூட்டுக் கதவைத் தட்டு

 

நண்பா... நண்பா பாட்டை நீயும் கேளுய்யா...

டோலாக்கை தலையில நைட்டு வச்சுனு தூங்குய்யா...!

 

பாடலின் ஊடாக ஒலிக்கும் டோலக் இசை சூழலை கொண்டாட்டமாக்க, கூடுகிறது கூட்டம்.அடுத்த நொடி, கம்பீரமாக குரலில் ஒலிக்கிறது எதிர்பாட்டு.  

 

“கானா மச்சி... கானா மச்சி... கானா மச்சி...

சோ.... 

காதலுன்னா ரோஜா வோணுன்டா

கானான்னா கரிகாலன்டா...

சொந்தமா நீ எழுதிப்பாடுடா... 

இல்லேன்னா 

பாடுறவன் வாயை மூடுடா..

 

சொல்லாதே...

நீ பாடகன்னு ஊருக்குள்ள சொல்லாதே

சொல்லாதே...

நீ பாடகன்னு ஊருக்குள்ள சொல்லாதே

 

மைக்கை கையில பிடிச்சதும் கண்டபடி உளறுது...

எவனோ எழுதிக் கொடுத்தபாட்டை தவிலை தட்டினு பாடுது.

சிங்கம் சிங்கிளா 

பாடுது பார் கலக்கலா...

தெரியுமா... 

நான் எடுத்துச் சொன்னா மச்சான் உனக்குப் புரியுமா...?"

 

வேடிக்கை பார்த்தவர்கள் ரசிகர்களாக மாற, கைதட்டல் சூழலை மாற்றுகிறது. அந்த உற்சாகத்தில் போட்டி தீவிரமாகிறது. அடுத்த பாடல் ஒலிக்கிறது. 

 

“ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா..

ஏ.ஆர்.ரகுமான் போல நீயும் தலையை ஆட்டாதே

என்னை பாட்டுல மிரட்டாதே

அய்யாவை பாட்டுல மிரட்டாதே

 

குச்சியால அடிப்பேண்டா உன்னை

வாயில போடுவேன் மண்ணை

அசிங்கமா எதுனா சொன்னே

சொந்தப் பாட்டைக் கேள்றா வெண்ணை

 

ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா..

 

கருப்புக் கலருச் சட்டை

அய்யா போடுவேன் மொட்டை

நான் கழுகு முட்டை

தாங்க மாட்டே

வராதே என்கிட்ட ஏய்

வராதே என்கிட்டே

 

ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா..

 

கரியாங்கொட்டை கலரு

ஏன் பாட்டைக் கேட்டு அலறு

கைமாலு போடுவேன்

கத்தியில அமுக்குவேன்

ராகமா நான் பாடுவேன்

உதவின்னு வந்து

யார் கூப்பிட்டாலும் நான் ஓடுவேன்.."

 

ரசிகர்கள் மேலும் உற்சாகமாகிறார்கள். கூட்டம் நிறைகிறது. கைதட்டல் காதைப் பிளக்கிறது. 

“மாமு... போதும்யா... இப்படியே போனா, கடைசியா அடிதடியில தாம் முடியும்... இதோட முடிச்சுக்குவோம்..."

கானா கணேசன், சமானாதக் கொடி காட்ட, சூழல் இயல்பாகிறது.

“நாங்கள்லாம் கானாப் பாட்டுக்காரங்க. இவம்பேரு, அய்யா... பெரிய பாட்டுக்காரன். எம்எம்டிஏவுல இருக்கான். இதோ இவன்பேரு பாட்ஷா... அவன் டோலக் பார்த்திபன்... ரெண்டு பேரும் அய்யாவோட சிஷ்யப் புள்ளேங்க. இந்தத் தாடிக்காரு பேரு கரிகாலன்... இவங்க அப்பா வியாசர்பாடி நாகலிங்கம் தான் கானாவுக்கே முன்னோடி. இன்னிக்கு சினிமாவுல இருக்கிற பல கானாப் பாடகருங்க, இவுரு கையப் புடிச்சு கானா பழகுனவங்க. நாகலிங்கம் பாடுன "அழகு ராணிப் பொண்ணு" இன்னைக்கும் பேமஸ். எம்பேரு கானா கணேசன். நம்ப ஏரியா வியாசர்பாடி. மாதத்துக்கு ஒருமுறை இப்படி கடற்கரையில கூடி கானா பாடுவோம். முன்னல்லாம் கானான்னா, அவனவனோட வார்த்தையைப் போட்டு சுயமா எழுதுன பாட்டை பாடுவான். இப்போ, போட்டி கானா வந்திடுச்சு. ஒருத்தன் பாட்டை ஒருத்தன் கேலி பேசுறது, திட்டுறது, நிறத்தை வச்சு கிண்டல் பண்றதுன்னு வம்படியா ஆயிப்போச்சு. போட்டி கானாவால, வெட்டுக் குத்தாகி, பல சாவு வீடுகள்ல கூடுதலா பொணம் விழுந்த கதையெல்லாம் இருக்கு..."- "கானா" கணேசன் போட்டி கானா பற்றி முன்னுரை வாசிக்கிறார்.

கானா, சாலையோரங்களிலும், குடிசைப்பகுதிகளிலும் வசிக்கும் சென்னையின் அடித்தட்டு மக்களின் பிறப்பிலும் இறப்பிலும் கலந்த கலை. எவ்வித வரையறையும் இல்லாமல், கிடைத்த வார்த்தைகளைக் கோர்த்து, கிடைத்த பாத்திரங்களை இசைத்து, வார்த்தைகளில் போதை ததும்ப சோகத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவது தான் கானா. ஒப்பாரியின் இன்னொரு வடிவமாக உயிர்த்த இந்தக் கலை, இடைக்காலத்தில் பொழுதுபோக்குக்கானதாக மாறியது. கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள், சுப காரியங்களிலும் இடம்பெற்றது. காலப்போக்கில், திரையிசையின் ஆதிக்கம் மேலோங்கியபிறகு, பிரதான மேடைகளில் இருந்து இக்கலை விலக்கப்பட்டதோடு, அதன் முகமும் மாறியது.  

“சினிமா பாட்டை மாத்தி, நம்ம வார்த்தைகளைப் போட்டு பாடுறதை "மட்டை கானா"ன்னு சொல்லுவாங்க. இப்போ பல பேரு மட்டை கானா தான் பாடுறாங்க. கானாவுக்கு டியூன், சரணம், பல்லவின்னு எதுவுமே இல்லை. ஒருத்தர் இறந்து போயிட்டா, உறவுக்காரங்கள்லாம் சோகமா இருப்பாங்க. அந்த சோகத்தை பகிர்ந்துக்கிற மாதிரி, நல்ல விதமா நமக்குத் தோன்ற வார்த்தைகளைப் போட்டு அந்த இடத்துலயே கட்டுற பாட்டு தான் ஒரிஜினல் கானா. சென்னையில இன்னைக்கு ஒரிஜினல் கானா பாடுறவங்க ரொம்ப கம்மி. அன்னக்கூடை, குடம், கும்பான்னு எது கிடைக்குதோ அதைத் தட்டிக்கிட்டு பாடுவோம். இன்னைக்கு எல்லாம் மாறிப்போச்சு. மட்டை கானா வந்தபிறகு பலபேரு பாட்டுக்காரன்னு சொல்லிக்கிறாங்க. கலையா இருந்த கானா இன்னைக்கு தொழிலா மாறிடுச்சு.."- வருத்தமாகப் பேசுகிறார் கரிகாலன்.

கானாவின் தாயகம் வடசென்னை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறப்பின் வலியோடு, உழைப்பின் வலியையும் பாடிய கானாவை சினிமா சுவீகரித்து கொண்ட பிறகு, நிறைய இளைஞர்கள் கானா பாட வந்து விட்டார்கள். கலாய்க்க, காதலிக்க, கொண்டாட என சென்னை இளைஞர்களின் வாழ்க்கையை தளும்பத் தளும்ப நிறைத்திருக்கிறது கானா. 

“இன்னைக்கு கானா பாடுறதை மட்டுமே தொழிலா வச்சுக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க. ஒரு இடத்துக்குப் பாடப்போனா சாதாரணமா ஏழாயிரத்துல இருந்து பத்தாயிரம் வரைக்கும் வாங்குறாங்க. கானான்னாவே போதைன்னு வெளியில ஒரு பார்வை இருக்கு. அதை மறுக்க முடியாது. கொஞ்சம் போதை உள்ளே போனாத்தான் வார்த்தை சிதைவில்லாம வந்து விழும். உணர்ச்சியாட பாடவும் முடியும். இன்னைக்கு உள்ள புள்ளைங்க வேறு போதைக்கெல்லாம் போறாங்க. அந்தக் காலத்துல அன்னக்கூடை தான் கானாவுக்கு இசைக்கருவி. இப்போ டோலக் வாசிக்கிறாங்க. மைக்கெல்லாம் கூட வைக்கிறாங்க. காலத்துக்கு ஏத்தமாதிரி கானாவும் மாறிக்கினே வருது. அப்படியான ஒரு மாற்றம் தான் போட்டி கானா. விளையாட்டா ஆரம்பிச்சது, இப்போ ரணகளமா மாறிடுச்சு..." என்கிறார் அய்யா. அய்யாவின் கானாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. 

“கானா பாடுறவனுக்கு பணமெல்லாம் பெரிசில்லைங்க. மரியாதையும் கௌரவமும் தான் முக்கியம். எப்படி கூட்டிட்டுப் போறாங்களோ அப்படி கொண்டு வந்து விடனும். கௌரவத்துக்காக நாங்க என்ன வேணுன்னாலும் செய்வோம். சில ஏரியாக்கள்ல வேணுன்னே சிக்கல் பண்ணுவாங்க. இறப்புக்கோ, காரியத்துக்கோ நம்மை ஒரு ஏரியாவுக்கு கானா பாட கூப்பிட்டுப் போறாங்கன்னு வச்சுக்கோங்க. அந்த ஏரியாவுல ஒரு கானாக்காரன் இருப்பான். ஒரு கூட்டத்தைச் சேத்து வச்சுக்கினு "இவன் பெரிய இவனா?"-ங்கிற மாதிரியே நம்மை சீண்டிக்கினே இருப்பான். நாம பாடிக்கிட்டிருக்கும் போது, இடையில அவன் ஒரு பாட்டுப் பாடுவான். உள்ளூர்காரனுக்கு எப்பவுமே மரியாதையும் கைதட்டலும் அதிகமாத்தானே இருக்கும். அது நமக்குப் பொறுக்காது. பதிலுக்கு நாம ஒரு பாட்டுப் பாடுவோம். அதுக்குப் போட்டியா அவன் ஒரு பாட்டு பாடுவான். கலாயா தொடங்குற போட்டி, தனிமனித தாக்குதல்ல வந்து நிக்கும். மூக்கைப் பத்தி, நிறத்தைப் பத்தி, உயரத்தைப் பத்தியெல்லாம் கிண்டல் பண்ணி பாடத் தொடங்குவாங்க. ஒரு கட்டத்துல எவனாவது உள்ளே புகுந்து கை வச்சிருவான். அவ்வளவு தான்... அப்புறம் எங்கே கானா பாடுறது... அடிதடி. உதை வெட்டுன்னு களேபரமாகி டோலக்கை தூக்கிக்கினு ஓடியார வேண்டியது தான். 

ஒருமுறை ரெட்ஹில்ஸ் பக்கத்துல ஒரு கானாவுக்கு கூப்புட்டுப் போனாங்க. நான், பாட்ஷா, பார்த்திபன் மூணுபேரும் போனோம். நிறைய ரவுடிப்பசங்க இருந்தானுங்கோ... நமக்கென்ன காசு தானேன்னு நாங்களும் அமைதியா பாடிக்கினு இருந்தோம். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு பையனும் பாடுனான். நான், வார்த்தையை விடாம ரொம்பவே அடக்கமா பாடிக்கிட்டிருந்தேன். என்னை ரொம்ப சீண்டிக்கிட்டே இருந்தான். நான் போட்டிருக்கிற சட்டை, தலை, வாயி, மூக்கெல்லாம் கிண்டல் பண்ணி கலாய்க்கிறான். கோவில்ல தேங்காய் பொறுக்கி திங்கிறேன்னு பாடுனான். பொறுக்க மாட்டாம, "கானாவுல நீ குழந்தைடா"ன்னு நான் பாடுனேன். ரவுடிப்பசங்கள்லாம் கைதட்டி ரசிக்கிறாங்க. அவனுக்கு ஆதரவு அமோகமா இருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல கெட்ட வார்த்தையெல்லாம் சேத்துப் பாட ஆரம்பிச்சுட்டான். இப்படியே போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்ன்னு போதையில இருந்த ஒரு ரவுடிப்பய எழுந்து, டோலக் வாசிச்சவனை அடிச்சுட்டான். கூடவந்தவனை அடிவாங்கவிட்டு பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? நானும் கைய வச்சேன். அவனவனும் கைய நீட்ட ஆரம்பிச்சுட்டான். டோலக்கை தூக்கிக்கிட்டு ஓடி வந்தோம். இதுமாதிரி நிறைய நடந்திருக்கு. இப்போ பத்து கானாவுக்குப் போனா, எட்டு கானா போட்டியாத்தான் இருக்கு... என்கிறார் அய்யா.

இப்போது கானா பாட அழைப்பவர்களே, சுவாரஸ்யத்துக்காக இரண்டு கானாக்காரர்களை அழைத்து போட்டி கானா பாடச் செய்கிறார்கள். புரிதலோடு பாடும்போது பிரச்னையில்லை. எல்லை மீறும்போது கைகலப்பாகி விடும். 

"லாவணின்னு ஒரு கிராமிய கலை இருந்துச்சு. ஒரு ஆணும் பெண்ணும் பறையைத் தட்டிக்கினு ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சு பாடுவாங்க. அதோட இன்னொரு வடிவம் தான் போட்டி கானா. ஆனா, இது கொஞ்சம் எல்லை மீறிப் போயிடுச்சு. வழக்கமா ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டா பாக்குறவங்களுக்கு சுவாரஸ்யமாத் தானே இருக்கும். ஆனா, சம்பந்தமே இல்லாம, Ôநம்ம ஏரியாக்காரனை கலாய்க்கிறான்டாÕன்னு எவனாவது ஒருத்தன் உள்ளே புகுந்து வம்பை இழுத்து உட்ருவான். நான் அப்படித்தான் பெரம்பூருக்கு ஒரு கானாவுக்குப் போயிருந்தேன். நம்மகூட டோலக்கு வாசிக்க வந்த பையனுக்கு அந்த ஏரியாவுல ஒரு லவ்வரு இருந்திருக்கு. நமக்கு அந்தக் கதை தெரியாது. நாம் பாடும்போது ஒருத்தன் கலாய்ச்சுக்கினே இருந்தான். நான் ஒன்னு பாட, அவன் ஒன்னு பாட வார்த்தை பெரிசாயிருச்சு. இடையில நம்ம டோலக்கு பையன் ஒரு பிகரு பாட்டை எடுத்துவுட்டான். உற்சாகம் மிகுதியில அந்தப் பொண்ணு பேரச் சொல்லிப்புட்டான். ஏற்கனவே கடுப்புல இருந்த அந்த கலாய் பார்ட்டி, நம்ப ஏரியாவுக்கே வந்து நம்ப பொண்ணையே கலாய்க்கிறாண்டான்னு சொல்லி அடிச்சுட்டான். திரும்ப நான் அடிக்க, பிரச்னையாயிடுச்சு. இப்பல்லாம் வெளியில கானாப் பாட கூப்டாலே பேஜாரா இருக்கு சார்..." என்கிறார் பாட்ஷா. 

“இழப்பை ஏத்துக்க முடியாம சோகத்துல தவிக்கிற உறவுக்காரங்களை ஆறுதல் படுத்துறது, இறந்தவரைப் பத்தி நல்லவிதமா நாலு வார்த்தை பாடி பெருமைப்படுத்துறதுன்னு இறப்பு வீடுகள்ல கானாக்காரனைக் கூப்பிட சில காரணங்கள் இருக்கு. சோகம், அழுகை, கண்ணீர், இரங்கல்ன்னு பல உணர்ச்சிகள் கானாவுல இருக்கும். ஆனா, போட்டி கானாவுல வெறும் வக்கிரமான கோபமும் வரட்டு கௌரவமும் தான் இருக்கு. யாரோ காசு கொடுத்து கானாப்பாட கூப்டா, சம்பந்தமே இல்லாம ஒருத்தன் வந்து உக்காந்துக்கினு வம்பை வளக்குறான். இந்தமாதிரி பிரச்னைகளால கானாக்காரன்னாவே சண்டைக்காரணா பாக்குற நிலை வந்துடுச்சு. எந்த விஷயத்திலயும் போட்டி இருக்கிறது நியாயம்... பொறாமை இருக்கக்கூடாது. ஜாலி இருக்கலாம். கேலி இருக்ககூடாது. இதெல்லாம் மாறினாத்தான் கானாக்காரனுக்கு மரியாதை கிடைக்கும்..." என்கிறார் "டோலக்" பார்த்திபன். 

“நாங்களும் போட்டி கானா பாடுவோம் சார்... ஆனா, எங்களுக்கு துளியும் பொறாமை இல்லை. ஜாலி இருக்கும். கேலியே இருக்காது. கானா முடிஞ்சவுடனே தோள் மேல கைபோட்டுக்கிட்டுப் போய் டீ குடிப்போம்..." -என்றபடி டோலக்கை வார்பிடித்துக்கொண்டு பாடத் தொடங்குகிறார் அய்யா. 

 

“மனசை தானே புண்படுத்தி பாக்குறது பாவம்

நாங்கள்லாம் பாபா புள்ள வராதுப்பா கோவம்

சொல்லுறதைக் கேக்காலன்னா மூலைக்கு தான் போவும்

அது முந்திரிக்கொட்டை போலத்தானே மட்டைக் கானாவுல முந்திக்கினு சாவும்

 

அமுக்கு குமுக்கு பத்தினி

உனுக்கு சிஷ்யப் புள்ளீங்க எத்தினி

போட்டி போட்டு கரைய

அய்யாவுக்கு சிஷ்ய புள்ளீங்கோ நிறைய...!

 

பதிலுக்கு எதிர்பாட்டு கட்டுகிறார் கரிகாலன். 

 

“ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டை நீயும் பாத்தியா

சுயமா உனக்கு எழுதத் தெரிலே எங்கக்கிட்ட போட்டியா

டோலாக்கு உருளைங்க

நாங்க பாடவந்தா பெறளுங்க...

தெரியுமா... நாங்க எடுத்துச் சொன்னா மச்சான் உனக்குப் புரியுமா?

 

மண்ணை நீயி தின்னாலும் மறைவாப் போயி துன்னுடா

பாட்டு உனக்கு வேணுமுன்னா எனக்கு போனு பண்ணுடா

அழகு ராணிப் பொண்ணுடா 

பாடுன நாகலிங்கம் புள்ளைடா

தெரியுமா... இப்போ நாங்க தானே யாரு உனக்குப் புரியுமா?

 

கானா மச்சி... கானா மச்சி... கானா மச்சி...

கானான்னா கரிகாலன்டா..!

 

-வெ.நீலகண்டன்

படங்கள்: கிரண்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close