Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட... மண் பானைக்குள் வைத்து மரங்களைக் காக்கும் கருப்பையா!

 மண் பானை

அதிக வெயில் அடிக்கும் வெப்பமான பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும்போது... போதுமான தண்ணீர் வீட்டு வளர்த்தாலும் மண்ணுக்கடியில் உள்ள வெப்பத்தால் கன்றுகள் பட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. இதைத்தடுக்கும் வகையில்,  'தாய்க்கூடு குறுநீர் பாசனம்' என்ற முறையில் மண் பானைகளுக்குள் மரங்களை வளர்த்து வருகிறார், மதுரையைச் சேர்ந்த கருப்பையா.

இவர், வேளாண்மைப் பொறியியல் துறையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, மதுரையில் வசித்து வரும் இவர், காந்தி மியூசியம் அருகிலுள்ள 'சங்கத்தமிழ் காட்சிக்கூட வளாக'த்தில் சொந்தச் செலவில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறார். 

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கருப்பையாவிடம் பேசினோம். "2015-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். ரேஸ்கோர்ஸ் காலனியில வீட்டுவசதி வாரிய குடியிருப்புல இருக்கும்போது, சில மரக்கன்றுகளை நட்டு வெச்சேன். சரியான அளவு தண்ணி கொடுத்தும், ஒரு வாரத்துலயே அந்த கன்றுகள் பட்டுப் போயிடுச்சு. கன்றைப் பிடுங்கிப் பார்த்தப்போ, வேர் பகுதி வெப்பத்தால வெம்பி இருந்துச்சு. அப்போதான், எனக்கு மண் பானையில் செடி வளர்க்குற யோசனை தோணுச்சு. 

ஒரு மண்பானையில் அடியில துளை போட்டு நிலத்துல ஒரு அடி ஆழத்துல புதைச்சு அதுல சில முறைகளைக் கடைபிடிச்சு 'புளூமா ரெட்'ங்கிற மரக்கன்றை நட்டேன். அது நல்லா வளர்ந்து வந்தது. இப்போ மரமாகிடுச்சு. அது வளர்றதைப்பார்த்ததும்... சங்கத்தமிழ் காட்சி கூட இயக்குநர்கிட்ட அனுமதி வாங்கி, 10 மகிழம் கன்றுகளை மண் பானையில் நட்டு வெச்சிருக்கேன். 9 மாசமா பிரச்னையில்லாம கன்றுகள் நல்லா வளர்ந்து வந்திருக்கு" என்ற கருப்பையா மண் பானையில் கன்று நடவு செய்யும் முறை குறித்துச் சொன்னார்.

"15 லிட்டர் தண்ணீர் பிடிக்கிற அளவு மண் பானை எடுத்துக்கணும். அதோட அடிப்பகுதியில் ஆறு அங்குல விட்டத்துக்கு துளை போடணும். அப்புறம், கன்று வைக்கப்போற இடத்துல, ஒரு அடி ஆழம், ஒரு அடி விட்டத்தில் குழி எடுத்து இரண்டு நாள் ஆற விடணும். பிறகு குழிக்குள்ள ஒரு சட்டி மணலைப் போட்டு, ஒரு கிலோ மண் புழு உரம் போட்டு குழியை மூடிடணும். இப்போ குழி இருந்த இடத்துல மண் குவியலால மேடு உருவாகியிருக்கும். அந்த மண் குவியல் நடுவில் லேசா பள்ளம் பறிச்சு மண் பானையை வெச்சு வெளிய மண் அணைச்சு விடணும். பானைக்குள்ள மரக்கன்றை நடவு செய்யணும். கன்றோட ஆணி வேர், குழிக்குள் இருக்குற மாதிரி வெச்சுட்டு... மணல், செம்மண், கரிசல் மண், மண்புழு உரம் எல்லாத்தையும் கலந்து பானைக்குள்ள முக்கால் பாகம் அளவுக்கு நிரப்பி 20 லிட்டர் தண்ணீர் விடணும். 

தொடர்ந்து தினமும் காலையில 2 லிட்டர் தண்ணீர் விடணும். கன்று நல்லா வளர்ந்துட்டா இன்னமும் தண்ணீரை குறைச்சுக்கலாம். பானைக்குள்ள இருக்குறதால செடியோட வேர்ல எப்பவும் ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். இந்த மாதிரி நடுறப்போ, 3 மாச வயசுக்கு மேல இருக்குற கன்றுகளை நடணும். மரம் பெரிசா ஆக, ஆக ஒரு கட்டத்துல பானை விரிவு விட்டு உடைஞ்சுடும். இப்படி வளர்க்குறப்போ கன்று நேரா வளரும்" என்ற கருப்பையா, நிறைவாக, 


"மாடித்தோட்டம் போல இந்த முறையில், வேம்பு, பூவரசு, ஆல், அரசு, புங்கன், கொய்யா, மாதுளை, சீத்தா, சப்போட்டா, மா, நெல்லி, பப்பாளி, திராட்சை...னு எல்லா தாவரங்களையும் வளர்க்கலாம். காய்கறிகளைக் கூட வளர்க்கலாம். குறிப்பா இந்த முறை, வறட்சிப்பகுதிகளுக்கு ஏற்ற முறை. வயித்துக்குள்ள கரு வளர்ந்து வெளி வர்ற மாதிரி பானைக்குள்ள செடி வளர்ந்து ஒரு கட்டத்துல பானையை உடைச்சுட்டு வர்றதாலதான் இதுக்கு தாய்கூடு குறுநீர் பாசனம்னு பேர்" என்றார். 

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ