Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மீத்தேன் வேண்டாம்...கெயில் இருக்கலாம்!' தமிழக விவசாயிகள்

கெயில்


     கேரளா மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில், மொத்தம் 310 கிலோமீட்டர் தூரம் குழாய் பதிக்கத் திட்டமிடப்பட்டு, விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணி ஆரம்பமானது. இதையடுத்து, விவசாயிகள் தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடிக்கவே... குழாய் பதிக்கும் திட்டம் தடைபட்டு நிற்கிறது.

முழுக்க முழுக்க விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் இத்திட்டத்துக்காக நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக நில உரிமையாளர்கள் அனைவருக்கும் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், "கெயில் நிறுவனம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகை மட்டும்தான் வழங்கப்படும். எரிவாயு குழாய்கள் சேதாரம் அடைந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்தான் அதற்கு பொறுப்பு" என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கவே, விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அத்தோடு, குழாய்கள் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்களில் இருந்த மரங்கள் தாறுமாறாக வெட்டப்பட்டதும், இஷ்டம்போல குழிகள் தோண்டப்பட்டதும் விவசாயிகளை கோபம் கொள்ள வைத்தது.


 


     இதையடுத்து, "விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய விவசாயிகள், விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கக் கூடாது, நெடுஞ்சாலை வழியாக குழாய்களைப் பதிக்க வேண்டும். இதன் மூலமாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்" என்று சொல்லி பல்வேறு போராட்டங்களிலும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். குழாய் பதிக்கும் பணிகளையும் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஏவிவிடப்பட, பல இடங்களில் விவசாயிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. பிரச்னை தமிழகம் முழுக்க எதிரொலிக்கவே, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டார். இதையடுத்து தமிழக அரசே, விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியது.

      இதைப் பற்றி பேசும் "விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு" ஒருங்கிணைப்பாளர் பொன்.கந்தசாமி, “விவசாயிகளின் போராட்டத்தில் இருக்கும் உண்மைகளை உணர்ந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து, குழாய் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை கொடுக்க உத்தரவிட்டது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைப்படிதான் குழாய்கள் பதிக்கப்படும். விவசாயிகள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கெயில் வாதம் செய்தது. இதற்கிடையே விவசாயிகள் செய்த போராட்டங்களின் விளைவாக, பதிக்கப்படும் 7 மாவட்ட விவசாயிகளை சென்னைக்கு அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது. குடும்பத்துடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் மனக்குமுறல் கண்ட தமிழக அரசு, கெயில் நிறுவனம் தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்கள் பதிக்க தடை விதித்தது. தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான காவல் துறை நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது.

          

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கெயில். அந்த வழக்கில், 'கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை தொடரலாம். இத்திட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகளிடம் சமாதானம் பேசி மாநில அரசு சம்மதிக்க வைக்கவேண்டும். அதேசமயம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்' என நீதி மன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும், விவசாய சங்கங்களும் உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அப்போதும் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும், விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்றுவரை தமிழ்நாட்டில் கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க முடியாமல் பரிதவிக்கிறது" என்று சொன்னவரிடம்,
"மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பேசும்போது, தமிழக அரசு கெயில் திட்டத்துக்கு உதவ வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?" எனக் கேட்டோம். அதற்கு, "மீத்தேன் திட்டத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறிய அமைச்சர், கெயில் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இங்கே யாரும் கெயில் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. மீத்தேனும், கெயிலும் வேறு வேறு பிரச்னைகள். கெயில் நிறுவனம் பதிக்கும் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களைத் தவிர்த்து, நெடுஞ்சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்கள் வழியாகவும் கொண்டு செல்லுங்கள் என்பதுதான் தமிழக அரசு மற்றும் விவசாயிகளின் கோரிக்கை. இதைச் செயல்படுத்த கெயில் நிறுவனத்துக்கு மனம் இல்லை. இதைப் பற்றி அந்த நிறுவனத்திடம் பேசி, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்கச் செய்ய வேண்டியது மத்திய அமைச்சரின் கடமை. அதைவிடுத்து, தேவையில்லாமல் இரண்டு விஷயங்களையும் போட்டுக் குழப்பக்கூடாது. இனியும்கூட விவசாய நிலங்களில் குழாய்களைப் பதிக்கும் வேலையை கெயில் தொடங்கினால், விவசாயிகள் விரட்டி அடிப்பார்கள்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

-ஜி.பழனிச்சாமி.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close