Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூரை வீடு இப்போ கீரை வீடு! அசத்தும் விருதுநகர் பால்சாமி!

கூரை வீடு

மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம். கூரைவீட்டின் மேல் கீரை வளர்ப்பவரை பார்த்திருப்போமா?... ஆம், வீட்டின் தகரக்கூரைக்கு மேல் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் 'சிறுகுறிஞ்சான்' கீரையை படர விட்டு வளர்த்து வருகிறார் கீரை விவசாயி பால்சாமி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா அத்திகுளம் கிராமத்தில் 'கீரை வீடு' எங்கிருக்கிறது? என யாரைக்கேட்டாலும் வழிகாட்டுவார்கள். வீட்டுக்கூரையின் மேல் நின்று சிறுகுறிஞ்சான்கீரை இலைகளை பறித்துக் கொண்டிருந்த பால்சாமியை சந்தித்து பேசினோம்.

 "20 வருஷமா கீரை விவசாயம் செய்துட்டு வர்றேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தை பயன்படுத்தான் கீரை விவசாயம் செய்துட்டு இருந்தேன். இப்போ நாலுவருஷமாத்தான் இயற்கை முறையில அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னி, சிறுகீரைனு சாகுபடி செய்துட்டு இருக்கேன். வீட்டுக்கு தகரத்தால கூரை போட்டிருக்கேன். தகரத்தை மறைக்க ஏதாவது கொடி மாதிரி படரவிட்டா அழகா இருக்கும்னு தோணுச்சு. அதனால ஒரு நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து இந்த கீரையை வாங்கிட்டு வந்து நட்டேன். ஒரு வருஷத்துலயே வேகமாகப் படர ஆரம்பிச்சது. எங்கப் பகுதியில உள்ள ஒரு பாட்டியம்மா, "இது என்ன கொடி, வீடு கூரையில படர விட்டுருக்க"னு கேட்டாங்க. தெரியலை பாட்டி கூரையை மறைக்க அழகுக்காக படர விட்டிருக்கேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "இது ஒரு மூலிகைக் கீரைடா, இதுக்கு சிறு குறிஞ்சான்னு பெயர். அயகம், அமுதடிசுப்பம், ஆதிகம், குரித்தைன்னு வேற பெயர்களும் இருக்கு. இது சர்க்கரை நோயைக் குணப்படுத்துற சர்க்கரைக்கொல்லி"னு விவரமாச் சொன்னாங்க. இவ்வளவு நாள் மூலிகையை அழகுச்செடியா நினைச்சுட்டோமேன்னு சிறு குறிஞ்சான் கீரையின் மருத்துவகுணம் பற்றி முழுமையாத் தெரிஞ்சுக்கிட்டேன்" என்றவர் தொடர்ந்தார்.

யார் வேண்டுமானாலும் பறித்துக்கொள்லலாம்:

    "இதை பயிரிட்டு 10 வருஷம் ஆச்சு. விவசாய நிலங்கள்ல, வேலி ஓரங்கள்ல தானாகவே இந்தக்கொடி முளைச்சு படர்ந்து இருக்கும். அதை களைன்னு நினைச்சு பிடுங்கிப் போட்டுருவாங்க. இதோட இலை சிறியதாகவும், முனை கூர்மையாகவும் பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி இலை போலவே இருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்துலயும், காய்கள் காய்ந்ததும் பஞ்சு மாதிரி நார்கள் வெளிவந்து பறந்து தானாகவே முளைச்சுடும். இலை, தண்டு, வேர் எல்லாமே மருத்துவ குணமுடையதுதான். முக்கியமா உடம்புல இருக்குற சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துறதுதான் இந்த இலையோட முக்கிய சிறப்பு. இதன் ஒரு இலையை வாயில் போட்டு மென்னுட்டு இனிப்பா எதைச் சாப்பிட்டாலும், இனிப்புத்தன்மையை உணர முடியாது. என்றவர் நிறைவாக, "மாதம் ஒரு தடவை அடியுரமா மண் புழு உரம் வச்சிடுவேன். ஊர் மக்கள் பறிச்சுட்டுப் போறதுனால, ஏதும் பூச்சிகள் தாக்காமால் இருக்குறதுக்காக வாரம் ஒரு முறை இஞ்சி-பூண்டுக் கரைசலையும், வேப்பிலைக் கசாயத்தையும் 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி என்ற கணக்குல சுழற்சி முறை கூரை மேல தெளிச்சுட்டு வர்றேன். என்னோட அனுமதி இல்லாம யாரு வேணுனாலும் இந்தக் கீரையை கூரை மேல ஏறி பறிச்சுக்கலாம். ஒரு நோயைக் கட்டுப்படுத்துற மூலிகையை வச்சு வியாபாரம் செஞ்சா அதை விடக் கொடுமை எதுவுமில்லை. கீரைக்காரர் வீடுன்னு அடையாளம் சொன்ன என் 'கூரை வீடு இப்போ கீரை வீடா' மாறிடுச்சு’’ என்றார்.

சிறுகுறிஞ்சானின் மருத்துவ குணம்:

மருத்துவ குணம் பற்றி பேசிய பால்சாமி, "இந்த இலையைப் பறித்து நிழலில் காயவச்சு பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்தச் சிறுகுறிஞ்சான் கீரையை தண்ணீரில் அலசிவிட்டு பொடியாக நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கியும் வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரலாம். உடலில் வரும் பத்து, படை, தடிப்புக்கும், இந்த இலையை அரைச்சுப் பூசி 5 நாட்கள் தொடர்ந்து இந்த இலையைக் கஷாயமாகக் குடிச்சு வந்தாலே சரியாயிடும். இந்த இலை கசப்புச் சுவையுடையதால் அதிகம் யாடும் சாப்பிட மாட்டாங்க. சர்க்கரையை நோயைக் கட்டுப்படுத்துறதோட விஷக்கடி, தோல்நோய், வயிற்றுப்புண், குடல்புண்ணையும் சரி படுத்துற மூலிகைக் கீரையா இருக்கு. ஒரு வீட்டுல அவசியம் இருக்க வேண்டிய மூலிகைகளான கண்டங்கத்தரி, தூதுவளை, துளசி, ஓமவள்ளி மூலிகைங்ககூட இந்தக் சிறுகுறிஞ்சான் கொடியும் கண்டிப்பா இருக்கணும்" என்றார்.

- இ.கார்த்திகேயன்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close