Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முடங்கிக் கிடக்கும் வங்கிகள்: பயிர் காப்பீட்டை தமிழக அரசே ஏற்க வேண்டும்!

பயிர்

பயிர் இன்ஷுரன்ஸ் பிரிமியம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள். 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் உள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முடங்கி கிடக்கின்றன. பெரும்பாலும் இவ்வங்கிகளையே நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். குறிப்பாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவிரிநீர் வராததால் ஏற்கெனவே வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இருக்கும் நிலத்தடி நீரை வைத்து பயிர் வைப்பதற்காக பயிர்க் கடன், விதை, உரம் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்தால், அதுவும் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், ரயில் நிலையம், தபால் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கிக் கொள்வதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கிகள் இந்த பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தது. பயிர் காப்பீட்டுக்கான பிரிமியத்தை இங்குதான் இவர்கள் செலுத்தியாக வேண்டும். தற்போது விவசாயிகளிடம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்தான் அதிகம் உள்ளன. இதன் காரணமாக இவர்களால் பிரிமியம் செலுத்த முடியாத நிலை உருவாகிவுள்ளது. இது ஒருபுறமிருக்க, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2000 ரூபாய் நோட்டு வைத்திருக்கக்கூடிய விவசாயிகளும்கூட பிரிமியம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. காரணம் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கிக் கிடப்பதுதான். பெரும்பாலான விவசாயிகள் வறட்சியினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் பயிர் காப்பீடும் செய்யமுடியவில்லையென்றால், நாளைக்கு ஏதாவது பாதிப்பு என்றால் இழப்பீடு பெற முடியாது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 

தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான சூழலில், அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசே பிரிமியம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியபோது பிரிமியம் தொகையைக்கூட செலுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு உருவானது. அப்போது தமிழக அரசுதான் அனைத்து விவசாயிகளுக்கும் பிரிமியம் செலுத்தியது. அதுபோல் தற்போதும் அரசே பிரிமியம் செலுத்த வேண்டும்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு, மின்னணு பணபரிமாற்ற முறையில் இந்த பிரிமியத்தை தமிழக அரசு செலுத்தலாம். தமிழக அரசுக்கு இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. ஏக்கருக்கு 375 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 லட்சம் ஏக்கருக்கு 37.5 கோடி ரூபாய்தான் செலவாகும். தமிழக அரசுக்கு ஒருவேளை இது சாத்தியமில்லையென்றால் மத்திய அரசு இதனை ஏற்க வேண்டும். பணம் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பினால்தான் விவசாயிகளுக்கு தற்போது நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது என்பதால், இந்தப் பிரச்னையில் மத்திய அரசே தலையிட்டு தீர்வு காணலாம் என்கிறார்கள் விவசாயிகள். 

-கு. ராமகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ