Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்துப்பாண்டி, ராசாப் பாண்டி, எதிர்பாண்டி... இதெல்லாம் என்ன தெரியுமா?- மறந்து போன மரபு விளையாட்டுகள்!

 

ல்லிக்கட்டை மீண்டும் நடத்தி விடுவதற்காக பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டைப் போல நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் முன்னோர்களின் வாழ்வில் இருந்திருக்கின்றன.

நகர்ப்புறங்களில் கிரிக்கெட்டை தாண்டி வேறு விளையாட்டே இல்லை என்ற மனநிலையில் தான் பெரும்பாலான குழந்தைகள் வளர்கின்றனர். சப்வே சர்ஃபும், கேண்டி கிரஷ் சாகவும் மட்டும் தான் அவர்களின் ஒரே பொழுதுபோக்காக இருக்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பல பெற்றோர்கள் குழந்தைக்கு நடை பழக்கவே ஸ்மார்ட் போனை காட்டித்தான் அழைக்கிறார்கள்..! நாம் மறந்துவிட்ட சில விளையாட்டுகளை பற்றிய சிறிய தொகுப்பு இது.   

மற்போர்: 

மதராசபட்டிணம் படத்தில் ஆர்யாவும் ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் எந்த ஆயுதங்களும் இல்லாமல் மணலில் மோதிக் கொள்வார்களே அதுதான் மற்போர். இந்த விளையாட்டுக்கு 'மல்லாடல்' என்ற பெயரும் இருக்கிறது. சாதாரணமாக எந்த இடத்திலும் இதை விளையாடிவிட முடியாது. அந்தக் களத்தில் எண்ணெய், பால், நெய் போன்றவற்றை ஊற்றி மணல் பரப்பை மென்மையாக்கி முறையாக தயார் செய்த பின்னரே விளையாட முடியும். வீரர்கள் மோதிக் கொள்ளும் களத்திற்கு 'கோதா' என்று பெயர். பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மனை தெரியும் தானே..!?, இந்த மற்போரில் சிறந்து விளங்கியதால் அவனுக்கு 'மாமல்லன்' என்ற பெயரும் அவன் உருவாக்கியதால்  'மாமல்லபுரம்' என்ற பெயரும் வழங்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன.       
   

பல்லாங்குழி :

விளையாட்டுகள்
 

இரண்டு பக்கமும் ஏழு ஏழு குழிகள் கொண்ட மரத்தாலான கட்டையில் புளியங்கொட்டைகளை வைத்துக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு இது. இன்றும் திண்ணைகளிலும், களத்து மேடுகளிலும் பல்லாங்குழிகளை காண முடியும். இது 'பன்னாங்குழி' என்றும் சில பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது. முத்துப்பாண்டி, ராசாப் பாண்டி, எதிர்பாண்டி, காசிப்பாண்டி, கட்டுப்பாண்டி, சீதைப்பாண்டி, தள்ளுப்பாண்டி என ஏழு வகைகள் இந்த விளையாட்டில் இருக்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது கை மூட்டுகளில் ஏற்படும் வலியை தவிர்க்க முடியுமாம். மனக்கணக்கை எளிமையாக பயில பல்லாங்குழி ஒரு சிறந்த விளையாட்டு.

ஆபியம் (பச்சைக் குதிரை) :

விளையாட்டுகள்

"ஆபியம்"
"மணியாபியம்"
"கிருஷ்ணாபியம்"
"நாகனார் மண்ணைத் தொடு"
"ராஜா பின்னால உதை கொடு"

எனச் சொல்லி உயரம் தாண்டி விளையாடிய அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு!?.  
இந்த விளையாட்டில் ஒருவனை குனியவைத்து மற்றவர்கள் அவன் முதுகில் கைவைத்து தாண்டவேண்டும். அப்படி தாண்டுபவனின் கால், குனிந்திருப்பவனின் உடல் மீது படாமல் தாண்ட வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் பாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பான் குனிந்திருப்பவன். இது தான் விளையாட்டு. 'டெம்பிள் ரன்னில்' அந்த ஓட்டம் ஓடும் குழந்தைகளுக்கு குனிந்து தங்கள் பெருவிரலைத் தொடும் அளவுக்காவது ஆற்றல் அவசியம்தானே!?. 
 

 ஏழாங்காய் :

விளையாட்டுகள்

இந்த விளையாட்டை விளையாடாத பெண் குழந்தைகளே இருக்கமாட்டார்கள் எனச் சொல்லலாம். 'கழங்காடுதல்' இதன் பழங்காலப் பெயர். பல்வேறு ஊர்களில் 'தட்டாங்கல்' என்ற பெயரிலும் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. கூழாங்கற்கள், கருங்கற்கள், புளியங்கொட்டை போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாட முடியும். ஒரு கல்லை மட்டும் பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்துக் கொண்டு தரையில் மீதி கற்களை பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் கல்லை மேலே வீசி கீழே இருக்கும் கற்களில் ஒன்றை எடுக்க வேண்டும். அதே நேரம் மேலிருந்து வரும் கல்லையும் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் எடுத்ததும் அடுத்த சுற்றுக்கு போகலாம். இதில் மொத்தம் பத்து சுற்றுகள் வரை விளையாட வேண்டும், சில இடங்களில் எடுத்துக் கொள்ளும் காய்களின் எண்ணிக்கையை பொறுத்து அதன் சுற்றுகளின் எண்ணிக்கை வகுக்கப்படுகின்றன. 

இந்த விளையாட்டில் சிறுமிகள் பாடும் பாடல் வரிகள் இவை.., 

"முக்கூட்டு சிக்குட்டு பாவக்கா 
முள்ளில்லாத ஏலக்கா,
நாங்கு சீங்கு 
மரவள்ளி கிழங்கு, 
ஐவார் அரக்கு 
சம்பா சிலுக்கு,
அஞ்சு குத்து நாத்தனா 
அழுவுறாண்டி மாப்புள, 
ஏழுண்ணா என்கண்ண 
எழுத்தபடியண்ண
கருத்த சொல்லண்ணே. "

சடுகுடு:

"நாந்தான் வீரன்டா 
நல்லமுத்துக்கோன் பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு."

இந்தப் பாடலை பாடிக் கொண்டு எத்தனை முறை ரைடு(ride) போயிருப்போம். கால், கை என உடம்பெல்லாம் காயம்பட்டு சட்டைகளை கிழித்துக் கொண்டு போய் வீட்டில் செமத்தியாக திட்டு வாங்கியவர்கள் நம்மில் நிறைய பேர் உண்டு. சடுகுடு, கபடி என்ற பெயரிலேயே புழக்கத்தில் இருக்கிறது. கபடிக்கு சப்ளாங்குழி, சப்ளான், சப்ளாஞ்சி என்ற பெயர்களும் இருக்கிறது. நம் முன்னோர்கள் ஏறு தழுவச் செல்வதற்கு முன்னர் பயிற்சியாக 'சடுகுடு' விளையாடிவிட்டு சென்றதாகவும் தகவல்கள் இருக்கின்றன. தற்பொழுது யாரும் இது போன்ற பாடல்களை பாடுவதில்லை என்பதே உண்மை. ஆனால் விளையாட்டின் பொழுது இப்படி பாடிச் செல்வது மக்களின் பண்பாட்டையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தவும் பயன்பட்டு இருக்கிறது.    

இப்படி கிட்டிப்புல், ஓரி (நீரில் ஒளிந்து விளையாடுதல்), அம்புலி, கண்ணாமூச்சி, கோலி குண்டு, சங்கிலி புங்கிலி, நொண்டி, பம்பரம், பட்டம் விடுதல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி, எட்டுக்கோடு, கயிறு இழுத்தல் என இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத விளையாட்டுகள் ஏராளம்.

விளையாட்டுகள்
 

மிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் 'விளையாட்டு' என்ற சொல்லுக்கு 'விழைந்து(விரும்பி) ஆடும் ஆட்டம்' என்கிறார். ஆனால் குழந்தைகள் விரும்பிய விளையாட்டையா விளையாடுகிறார்கள். அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்கும், அம்மாவுக்கு டென்னிஸ் பிடிக்கும் என விளையாடும் குழந்தைகள் தான் அதிகம். நம் மரபு விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்குக்காக  மட்டுமல்லாது தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்வதற்கும் அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொள்ளவும் இது போன்ற விளையாட்டுகளை தங்கள் வாழ்வியலோடு இணைத்திருந்தார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளியில் கிடைக்கும் விளையாட்டு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் விளையாடும் வாய்ப்பு அரிதாகத்தான் கிடைக்கிறது. 

ஆனால், குழந்தைகள் விளையாடத் தயாராகத்தான் இருக்கிறார்கள்!!

 

- க. பாலாஜி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close