Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கியூபாவில் நடந்த இயற்கை புரட்சி...காஸ்ட்ரோவை பாராட்டிய  நம்மாழ்வார்! 

 

கியூபா

இயற்கை விவசாயத்தில் கியூபா நாட்டை உலகிற்கே முன்னுதாரணமாக மாற்றியவர் மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகின் சிறியதொரு நாட்டில் அவர் நடத்திய மாபெரும் இயற்கை புரட்சி பற்றிய அந்த வரலாறை பசுமை விகடனில் பகிர்ந்திருந்தார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய, அந்த வரலாறு இதுதான்.

மெரிக்காவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாடு கியூபா. அந்த குட்டி நாடு வேளாண்மையில் கடந்து வந்துள்ள பாதையை கொஞ்சம் உற்று நோக்கினால், அது நமக்கு ஒரு பாடமாக அமைய முடியும்.

1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு, கியூபா நாட்டில் பதவி ஏற்றது. கம்யூனிஸ சோவியத் ரஷ்யாவின் கூட்டுக்கார நாடான கியூபா மீது, அமெரிக்காவுக்கு ஏக எரிச்சல். 'நமக்கு அருகாமையில் ஒரு குட்டித் தீவு கியூபா. ஆனால், நமக்கு அடிபணியாமல் கம்யூனிஸம் பேசிக் கொண்டிருக்கிறதே?' என்று பொருமிய அமெரிக்கா, கடும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது.

'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' என்று அழைக்கப்பட்ட கியூபாவின் ஏற்றுமதி வணிகம் அடிவாங்கியது. அப்போது ரஷ்யா உதவிக்கரம் நீட்டியது. கியூபாவின் சர்க்கரையை வாங்கிக்கொண்டு, உணவு தானியத்தை வழங்கியது சோவியத் ரஷ்யா. அந்த நாட்டின் உணவுத் தேவையில் 60% சோவியத் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி ஆனது. வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு என்று ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், டீசல் எண்ணெய், எந்திரங்கள் எல்லாமும் கூட சோவியத்திலிருந்தே வந்தன. தொழில்மயமாகிய நாடுகளின் கருத்து (நவீன விவசாயம்) கியூபாவையும் பாதித்தது.

ஆண்டொன்றுக்கு 13 லட்சம் டன் ரசாயன உரம் மற்றும் எட்டு கோடி டாலர் விலை மதிப்புள்ள பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. 90,000 டிராக்டர்கள் ஓடின. விளைவு... விபரீதமானது. சமூக- பொருளாதார-சுற்று சூழல் சிக்கல்களை கியூபா சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கியூபா


ஒற்றைப் பயிர் சாகுபடி என்கிற கொள்கையால் உற்பத்தித் திறன் குறைந்தது; ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், கால்நடைத் தீவனம், எந்திரங்கள், நீர்ப்பாசனக் கருவிகளுக்கு அந்நிய நாடுகளைச் சார்ந்திருக்க நேர்ந்தது; காடுகள் பெருமளவு அழிந்தன; நிலம் களர் நிலமாகி வளமிழந்தது; பறவை, பன்றி, கால்நடை வளர்ப்பு முடங்கிப் போனது; கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தார்கள். 1956-ம் ஆண்டில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் 56%. 1989-ல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் 28%. தீமைகள் இதோடு நிற்கவில்லை.

ஒட்டு வித்துகளும் ரசாயன உரங்களும் களைக்கொல்லிகளும் பூச்சிக் கொல்லிகளும் மண்ணின் உயிரோட்டத்தைச் சிதைத்து மலடாக்கின. பயிர் விளைச்சல் குன்றியது. அது மட்டுமல்ல பசுமைப் புரட்சி வேறு மோசமான விளைவுகளையும் உண்டாக்கியது. புற்றுநோய், ரத்த சோகை போன்ற தீராத நோய்களை ஏற்படுத்தியது. பிறவிக் குறைபாடுகள் உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்தது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பது அதிகரித்தது.

இத்தகைய மோசமானச் சூழலில் 1989-ம் ஆண்டு சோவியத் ரஷ்யா சிதறுண்டது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய சோசலிச முகாமும் சிதறியது. இதனால் கியூபாவுக்கு நெருக்கடி. 'அது நொறுங்கிப் போகும்' என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், கணக்குப் பிழையாகிப் போனது. கியூபா தனது பாதையை மாற்றியமைத்துக் கொண்டது.


உள்கட்டுமானத்திலும் வேளாண்மை உத்திகளிலும் பல மாற்றங்கள் அதிரடியாகப் புகுத்தபட்டன. நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு பயிர்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றபடி நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது; ஒற்றைப் பயிர் சாகுபடி முறை கைவிடப்பட்டது; உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டன; உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டது; மாடுகளை ஏரில் பூட்டினார்கள்; குடும்பத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன; நகர்ப்புறத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன; உழவர்கள் நேரடியாகப் பண்டங்களை விற்க உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன இத்தகைய சீர்திருத்தங்கள் செலவு குறைந்த, நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கு வழிகோலின.

அரிசி.. கியூபா மக்களின் முக்கிய உணவு 1990-ம் ஆண்டு தனது அரிசி தேவையில் 50% அளவுக்கு தானே உற்பத்தி செய்தது. இன்று அரிசி உற்பத்தி மும்மடங்கானது. கிழங்கு உற்பத்தியில் தென்அமெரிக்காவில் கியூபா இரண்டாவது இடத்தில் உள்ளது. மாட்டிறைச்சி உற்பத்திதான் பாதிக்கப் பட்டது. 1989-ம் ஆண்டில் 2,89,000 டன் என்று இருந்தது... 1998-ம் ஆண்டில் 1,37,300 டன் என்று குறைந்தது. காரணம், காளைகள் உழவு வேலைகளுக்காக மறுபடியும் கலப்பையில் பூட்டப்பட்டுவிட்டன.

'மனிதனின் சரசாரி காய்கறித் தேவை ஒரு நாளைக்கு 300 கிராம்' என்கிறது சுகாதார அமைப்பு. அதேசமயம், கியூபாவைப் பொறுத்தவரை 469 கிராம். அந்த மக்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக உண்கிறார்கள்.

உற்பத்தியைப் பெருக்கத் திட்டம் தயாரித்தார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு 50 சென்ட் நிலம் கொடுத்தார்கள். வீட்டுத் தேவை போக எஞ்சியதை விற்க உரிமையும் கொடுத்தார்கள்.

பல்வேறு நிறுவனங்கள், தொழிற் சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான காலி இடங்கள் பயிர் சாகுபடி நிலங்களாயின. 2000-ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவு 12 லட்சம் டன். இது ஏதோ பட்டிக்காட்டான்கள் செய்த உற்பத்தியல்ல. கியூபா மக்களில் கல்வி கற்றவர்கள் 95%. சராசரி கல்வித்தரம் 9-ம் வகுப்பு. மக்கள் தொகை 1.1 கோடி கொண்ட சின்னஞ்சிறு கியூபா, தலை உயர்த்தி நடைபோடுவதற்கு அடிப்படையாக அமைந்தது எது?

‘‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள்.

மக்களை அல்ல - பசியை எதிர்த்துப் போராடுங்கள்'' என்று காஸ்ட்ரோ சொல்லியிருப்பதை நாம் மறந்துவிட வேண்டாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close