Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மனிதர்களுக்கு முன்பே இருந்த விஷயம் இசை!’ - ‘மகுடம்’ சௌரிராஜன்

மகுடம் என்கிற தமிழ் இசை அமைப்பைத் தொடங்கி, கடந்த 12-ம் தேதி ஞாயிறு அன்று சென்னை காமராஜர் அரங்கில் ‘தமிழர்-வல்லிசை’ என்கிற இசை நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்தியவர் ‘மாணவர் நகலக’த்தின் உரிமையாளர் திரு.ச.அ.சௌரிராசன். அவரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

ச.அ.சௌரிராசன்

 ‘மகுடம்’ அமைப்பு மற்றொரு தமிழிசை அமைப்பு என்று சொல்லலாமா? 

“அப்படி ஒரு வார்த்தையில் குறுக்கி விட முடியாது. மகுடத்தின் நோக்கம் தமிழ் இசை என்பதைத்தாண்டி 'தமிழரின் இசை'யை தேடி அரங்கேற்றுவதுதான். இப்போது ‘தமிழ் இசை என்றால் என்ன?’என்கிற கேள்வி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், ‘தமிழரின் இசை எல்லாம் கலந்ததுதான் தமிழ் இசை’ இதுதான் விடையாக இருக்க முடியும். ஆனால் பம்பை என்பது தமிழர் இசையின் ஒரு பகுதி என்று சொல்வோம். பறையும் தமிழர் இசையில் ஒருபகுதி என்று சொல்வோம். மகுடத்தின் இசையும் தமிழரின் இசையில் ஒரு பகுதி . இது மாதிரி 16 இசை வடிவங்கள் நம்மிடம் உள்ளது.

இந்த இசை மாவட்டத்திற்கு மாவட்டம், ஏரியாவுக்கு  ஏற்ற மாதிரி மாறும். கன்னியாகுமரிக்குச் செண்டை, திருநெல்வேலி பகுதியில் மகுடம், இராமநாதபுரத்தில் எருதுகட்டு மேளம். மதுரையில் பறை மற்றும் நையாண்டி மேளம். தஞ்சாவூரில் நையாண்டி மேளம். திருச்சி, கோயம்புத்தூர்ப் பகுதிகளில் துடும்பு, திருவண்ணாமலையில் பெரிய மேளம், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, தருமபுரி, என ஊருக்கு ஊர் விதவித வாத்தியங்கள். தமிழ்நாடு முழுவதும் பறை இல்லாத பகுதிகள் இல்லை. இப்படி எல்லாமே தனித் தனி வடிவங்களாகப் பல வாத்தியங்களாகத் தமிழரின் இசை இருக்கிறது. இந்த அனைத்து வடிவங்களும் சேர்ந்ததுதான் தமிழர்களின் இசை.  இந்த இசைக்கருவிகள் அனைத்தும் ஒலிப்பது வல்லிசை. அந்த வல்லிசையை ‘பில்ஹார்மோனிக்’ என ஆங்கிலத்தில் சொல்லும் ஒத்திசைவு வடிவில் தமிழ் இசையை மேடை ஏற்றுவதே மகுடத்தின் பணி. இதை வேறு யாரும் செய்யவும் இல்லை.முயலவும் இல்லை. அதை மகுடம் செய்யும்.

மகுடம் இசை 

மற்றொரு பக்கத்தில், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டு  அடங்கி இருக்கிறது இன்றைய தமிழ் இசை. ஒடுக்கி ஒடுக்கி தமிழரின் கலைகளை நாம் தொலைத்துவிட்டோம். ஆதியில் மனிதனுக்குச் சாதி இல்லை. வெயிலில் எடுத்து தோலைப் போட்டான். காய்ந்தது அதை எடுத்துத் தட்டினான்.  மூங்கிலை வெட்டினான் சத்தம் வந்தது புல்லாங்குழல் ஆனது. அப்படியே நடந்துபோய்க் கொண்டிருந்தான் கடற்கரையில் சங்கு எடுத்து ஊதிப் பார்த்தான் சத்தம் வந்தது. சங்கு சத்தம் வந்தது. ஆகவே இசை மனிதர்களின் சாதி மதம் கடந்து வந்தது. தமிழர்களுக்கு முன்னாடியே, மனிதர்களுக்கு முன்பே இருந்த விஷயம் இசை. அங்குச் சாதி எல்லாம் இல்லை. மகுடத்தின் மற்றொரு நோக்கம் “தமிழ் இசையால் தமிழர்கள் நாம் ஒன்றுபடுவோம்” என்பதுதான்”.  


தமிழரின் வாத்தியங்கள் வல்லிசையை மட்டுமே ஒலிக்கிறது என்கிற போது அவற்றை இணைத்து இசைக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? 

“என் அப்பா ‘நந்தன்’ அருணாசலம் அவர்கள் தொடர்ந்து 10 வருடமாகக்  கர்நாடக இசை என்பது தமிழிசையே எனச் சான்றுகளுடன் நிறுவி ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ மூலம் இசை நிகழ்வுகளை நடத்தி வந்தார். அதில் மெல்லிசை வடிவத்தில் தமிழ்ப்பண்ணுடன் கூடிய பாடல்களும் சிலவேளை பறை போன்ற நிகழ்வுகளையும் சேர்த்து பண்ணுவார்கள். 

நம் நாட்டில் மிகச் சிறந்த இசைக்கருவிகள் உள்ளன இதை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என எண்ணினோம். அப்பா வழக்கமாக நிகழ்ச்சி நடத்தும்  ஜனவரியில் பண்ண வேண்டும் என நவம்பரில் பயிற்சி ஆரம்பித்தோம். 3 நாட்கள் நடத்த முதலில் திட்டமிட்டோம். அப்புறம் வேண்டாம் ஒரு நிகழ்ச்சியே பெரியதாக பண்ணலாம் என்று முடிவு எடுத்தோம்.

அந்த காலத்தில் மீடியா எதுவும் கிடையாது. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொல்வது கலைஞர்களின் பணியாக இருந்தது. கலைஞர்கள் மக்களோடு மக்கள் இணைந்து வாழ்ந்தார்கள். ஊருக்கு வெளியே இருந்தவர்கள் கிடையாது. ஆனால் காலகட்டத்தில் சாதியைப் போல் இசையும் ஒதுக்கப்பட்டதாக மாறி விட்டது. தொடரும் ஒடுக்கு முறையால் ‘பறையை அடிக்க மாட்டோம்’ என்று பறையைத் திருப்பிக் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்கத்துவங்கிவிட்டன. சில கலைகள் எல்லாம் கிட்டத்தட்ட அழியும் நிலை உள்ளது. மாயக்குழல் என்பதை ஒரே ஒருத்தர் தான் வாசிக்கிறார். மகுடம் எல்லாம் ஒரு சிலரே வாசிக்கிறார்கள். வாசிப்பவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருக்கிறார்கள்.

55 வயது 60 வயது தாண்டியவர்களாக இருக்கிறார்கள். 1000 வருடங்களுக்கு முன்னாடி என்ன வடிவத்தில் இருந்ததோ அதே வடிவம் இன்றும் எருதுகட்டு மேளத்தில் இருக்கிறது. 3000 வருஷத்திற்கு முந்திய கலையை மக்கள் இன்றும் பாதுகாத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இசை மனிதர்களுக்கானது. தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் இசை என்று கூறுகிறோம்.  உலகத்தில் பார்த்தோம் என்றால் ஒரு நாட்டிற்கு என 4, 5 கருவிகள்தான் இருக்கிறது. நம்மிடம் இருந்து தொலைந்த கருவிகளைத் தவிர்த்துப்பார்த்தால் மாவட்டத்திற்கு 10 கருவிகள் இருக்கிறது. எல்லாவற்றையும் சேர்க்க முடியுமா. பம்பையும் பறையையும் ஒன்றாகச் சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விதான் மகுடம் -தமிழர் வல்லிசை அமைப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளம்.

“இப்படி அதிரும் வாத்தியங்களை இணைத்து வாசித்த சோதனை முயற்சி வெற்றியாக இருந்ததா?” 

“ஆம். முதலில் சில தயக்கம் இருந்தாலும் வெற்றிதான். காரணம் அந்த இழை நம் கருவிகளிடம் இருக்கிறது. மேலை நாடுகளில் ஹார்மோனி, சிம்பொனி என்று இரண்டு வகை இருக்கு. சிம்பொனி என்பது ஒருவகையான இசை ஹார்மொனி என்பது ஒருவகையான இசை ஒத்திசை. இந்த ஒத்திசை நம் கருவிகளிடம் இருக்கிறதா என்ற தயக்கம் துவக்கத்தில் இருந்தது. பம்பை வேறு ஓசை கேட்கும். செண்டை வேறு ஓசை கேட்கும். பறை வேறு மாதிரி இருக்கும் கேட்பதற்கே. நையாண்டி மேளம், தவில், வேறு மாதிரி இருக்கும். முதலில் சின்ன ரிகர்சல் செய்து பார்த்தோம். கேட்பதற்கே நிறையவே கொடூரமாக இருந்தது. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் போராடி பார்த்தோம். அப்புறம் ‘நீ ஒன்று மட்டும் வாசி’ அப்புறம், ‘நீ சேர்ந்து வாசி’ என்று தனித் தனியாக வாத்தியங்களை இசைத்து வழிக்குக் கொண்டு வந்தோம். அப்படியே அவற்றை எல்லாமே ஒரே நேரத்தில் இசைக்கச் செய்து இணைத்தோம். இணைவதற்கான தளம் இயற்கையிலேயே தமிழிசைக் கருவிகளிடம் இருந்தது. அதன் ஊடே ஒரு இழை இருந்து இருக்கிறது”. 

மகுடம், இசை

இதற்குக் தனியாகக் குறிப்பிட்ட நோட்ஸ் எதுவும் தனியாக எழுதப்பட்டதா? 

“நோட்ஸ் வைத்து வாசிப்பது வெஸ்டன் மியூசிக்.  திரை இசை போன்ற நோட்ஸ்கள் எதுவும் அவர்களிடம் கிடையாது. ஆனால் காதால் கேட்டு வாசிப்பார்கள். 100 பேர்கள் சேர்ந்து இந்த இசையை வாசித்தால் மிகப் பிரமாண்டமாக இருந்தது. அந்த இசையில் ஒரு வடிவம் தெரிந்தது. செண்டை, பறை, துடும்பு, மேளம், பெரிய மேளம் எல்லாம் இருந்தது. ஒரு நோட்ஸ் கிடையாது.தங்கள் கருவியின் இசையுடன் மற்றொன்று இணையும் போது வரும் இசையைப் பார்த்து ஒவ்வொரு வாத்தியக்காரர்களுமே மிரண்டு போனார்கள்.

ஒரு வாத்திய நடையைக் காதால் கேட்டு மற்றொரு வாத்தியக்காரர் வாசிக்கிறார் அவ்வளவுதான். ஆகவே எளிமையாக இணைந்து அருமையான இசையைக் கொடுத்தார்கள். தமிழர் இசையில் இது வல்லிசை பகுதி, மெல்லிசைப் பகுதி இல்லை. யாழ், புல்லாங்குழல் இல்லை. இது முழுவதும் அடி பட்டையை கிளப்புற விஷயம்.”

இத்தனை கருவிகள் கொண்டு மேடையில் இசை நிகழ்த்தியது எப்படி இருந்தது? 

“கிணை முரசு என்பது நம் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ஆறடி உயரத்திற்கு இருக்கிறது. காரைக்குடியில் இருந்து வந்தவர்கள் செய்து கொடுத்தார்கள். ஒவ்வொரு கருவியாக தேட ஆரம்பித்து சின்ன சின்ன கருவிகள் எல்லாம் செய்து ஒன்று சேர்த்தோம். 14 அடி நீளம் கொண்ட நெட்டுத் தாரை. திருவண்ணாமலையின் அருகே மலைப்பகுதிகளில் வாசிக்கக் கூடிய மூங்கில் குழாய் அது ஆஸ்திரேலியா பழங்குடியினரிடமும் இருக்கிறது. இங்கேயும் இருக்கிறது. சின்ன கருவிகள் ஆரம்பித்துத் தாள கருவிகள், தோல் கருவிகள் இயற்கையாக ஊதக்கூடிய சங்கு இப்படி பலவகையான 52 வகையான இசைக்கருவிகளையும் மேடையில் 115 கலைஞர்களுக்கான மேடை ஒன்றாக வந்தது. அடித்த உடன் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் முதல் எழுந்து ஆடினார்கள். நிறையப் பேர்கள் உணர்ச்சி அடக்க முடியாமல் அழுதார்கள். அப்படி ஓர் உணர்ச்சி எல்லோருக்கும். அப்படி உணர்வு. நம்மலால் இணைய முடிகிறது என்றால் அது நம்முடையது. ரசிப்பது என்பது வேறு நம்மை ஆட்கொள்வது வேறு. நம்மை ஆட்கொண்ட இசை என்பதுதான் சிறப்பு.”

“இத்தனை வாத்தியங்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றைச் சொல்லுங்களேன்?” 

“மாயக்குழல் என்பது அருமையான வாத்தியம். கோயில் திருவிழாக்களில் வாசிப்பது இல்லை. குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு வாசிப்பது. கீழே ஒரு புல்லாங்குழல் மேலே ஒரு புல்லாங்குழல் நடுவில் ஓட்டை. வாசிக்கும் போது ஒரு ஓட்டையில் காற்று போய் மறு ஓட்டையில் வருகிறது. மேலே உள்ள புல்லாங்குழலில் ஒரு காற்று போகும், அதிலும் வாசிப்பார்கள். அதாவது நாதஸ்வரமும் ஒத்தும் சேர்ந்து வாசிப்பது போல. இரண்டு புல்லாங்குழல் சேர்ந்து வாசிப்பது போல. அல்லது ஓர் ராகத்தின் மேல் இன்னொரு ராகம் வாசிப்பது. உலகத்தில் உள்ள கருவிகளின் ஆரம்ப வடிவம் நம்மிடம் உள்ளது. இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம் ஒன்று தமிழர்கள் உலகம் முழுவதும் போனார்கள். அதனால் நம் கருவிகள் உலகம் முழுக்க கொண்டு செல்லப்பட்டது. அல்லது உலகத்தினரின் வருகை இங்கு நிகழ்ந்து இருக்க வேண்டும். கட்டகுழல் என்பது ரஷ்யாவில் உள்ளது. நம்மூரில் இருப்பது உலகம் முழுக்க இருக்கிறது. தவில், நாதஸ்வரம் இரண்டும் நம்மிடம் இருக்கிறது.”

இது மாதிரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பண்ணுகிற எண்ணம் இருக்கிறதா?

மகுடம்

“மகுடம் - தமிழர் வல்லிசை ஆண்டு முழுவதும் நிகழ்ச்சி செய்யக்கூடிய அமைப்புதான். அதாவது இயக்கம் மாதிரி செயல்படும். இதற்கு எல்லா வகையிலும் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். ‘நீங்கள் எவ்வளவு பெரிய விஷயம் செய்கிறீர்கள் எங்களை ஏன் அழைக்கவில்லை’ என்று சொன்னார்கள். கல்லூரி நடத்துபவர்கள் எல்லாம் இதை எடுத்து நடத்தினால் நம் கலைகள் இளைஞர்களிடையே பரவும். வல்லிசை ஒலிக்க வேண்டிய இடங்கள் அதுதான் ” என்றவர்,

"தமிழால் ஒன்றுபடுவோம் என்பது போல் தமிழிசையால் ஒன்றுபடுவோம். இது தனிமனித முயற்சி கிடையாது. என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரின் முயற்சி இது. கினை முரசின் அதிர்வோடு எங்கள் பயணம் தொடரும்" என்றார். 

- வரவனை செந்தில்
படங்கள்-பா.காளிமுத்து

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close