Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூமிக்கடியில் 2,500 மீட்டர் ஆழத்தில் நியூட்ரினோ ஆய்வகம் ஏன்? #HowNeutrinoLabWorks

நியூட்ரினோ

கூடங்குளம் அணு உலைகள், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், கெயில் திட்டம் என பல திட்டங்களுக்கு தமிழ்நாடு டெமோ பீஸ் ஆகிவிட்டது. அதனுடன் நியூட்ரினோ ஆய்வுத் திட்டமும் இணைந்து பல மாதங்கள் தமிழ்நாட்டை வாட்டி வதைத்தது என்றே சொல்லலாம்.

நியூட்ரினோ என்றால் என்ன?

நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்கள் இருந்தும் வெளிப்படும் துகள். ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். இந்த நியூட்ரினோ துகள், ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. பொதுவாக, ஒரு பொருளை ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், அது மற்ற பொருளுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால், நியூட்ரினோ வேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாத மின் காந்த சக்தியற்ற துகள்கள் ஆகும். அதனாலேயே, நியூட்ரினோ பற்றி அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் மத்தியில் ஆய்வு செய்ய மோகம் அதிகரித்தது.

1956ல் ஃபெடரிக் ரெய்ன்ஸென்னும் அறிவியலாளார், நியூட்ரினோ துகள் என்று ஒன்று இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அதன் பிறகு, நியூட்ரினோ ஆய்வுகள் சூடுபிடிக்கவில்லை. நியூட்ரினோ ஆய்வில் பெரும் சவலாக இருப்பது பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள்தான். நியூட்ரினோ ஆய்வின்போது, காஸ்மிக் கதிர்களும் வினைபுரிகின்றன. இதனால், சோதனையின் முடிவில் குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே, இந்த சவாலை எதிர்கொள்ள 1985ல் ஜப்பானில் 1000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியை தொடங்கினார்கள். கனடாவில் சட்பரி என்னும் இடத்தில் 2000 மீட்டர் ஆழத்திலும், ஃப்ரான்ஸில் 2500 மீட்டர் ஆழத்திலும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில் 1965ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த சுரங்கங்கள் மூடப்பட்டு 15 ஆன்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர, இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியற்கூடத்தை அமைக்க முன் வந்தனர்.

பின், பல தேடல்களுக்கு பிறகு, தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நிலைக்கொண்டது இந்த ஆய்வு மையம். தேனி மாவட்டம் தேவாரம் அருகேவுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்பட்டது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கிமீ., அடிவாரத்தில் 2.5 கிமீ தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டி அதனையெடுத்து பெரிய ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி அமைக்கப்படும். இதைச் சுற்றி, 4 திசைகளிலும் மேலேயும் கீழேயும் ஒரு கிமீ பரிணாமமுள்ள பாறை இருந்தால்தான், ஆராய்ச்சி நடத்தமுடியும். அதன்பிறகு, நியூட்ரினோவைக் காண முடியும் என்று ஐ.என்.ஓ முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டியது.

நியூட்ரினோ

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் இந்த அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியைச் சேர்ந்த டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணபுரம், பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆய்வு மையத்தினால், எங்கள் ஊர்களை காலி செய்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என இந்த திட்டத்திற்கு எதிராக மனு அளித்து அவ்வப்போது சில பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இந்த திட்டத்திற்கு எதிராக வைகோ கண்டனம் தெரிவித்து மத்திய அரசிடம் வலியுறுத்தினார். விவசாயமும், இயற்கையும் இந்த திட்டத்தினால் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் தமிழகத்தை வஞ்சிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக்கோரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இதனையெடுத்து, நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை மாசுக்கட்டுபாட்டு வாரியம் நியமித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொகுப்பு – உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள் – வீ.சக்தி அருணகிரி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close