Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீரை உறிஞ்சும் என வைகோ குற்றம்சாட்டும் யூகலிப்டஸ் மரம்..! உண்மை என்ன?

யூகலிப்டஸ் மரங்கள்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோமீது விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் கொடுத்த ஜாமீனை மறுத்து சிறையில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக வைகோ தமிழகத்தில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றத் தானே நேரடியாகக் களத்தில் இறங்கினார். சிறையிலிருக்கும் வைகோ, மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றைச் சீர்குலைக்கக் கூடிய 'யூகலிப்டஸ்' மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், 'யூகலிப்டஸ் மரங்களை அகற்றிவிட்டு மீண்டும் நாட்டு மரங்களை நட வேண்டும்' எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதம் எழுதி அகற்றும் அளவுக்கு யூகலிப்டஸ் மரங்கள் மண் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்குமா?  பார்ப்போம்.

யூகலிப்டஸ் மரங்களுக்கு பாயும் தண்ணீர்

தைலமரம் என்று சொல்லப்படும் யூகலிப்டஸ் மிர்டேசியே குடும்பத்தைச் சேர்த்தது. இதனுடைய தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா ஆகும். ஆங்கிலேயர்களால் இந்தியாவில் புகுத்தப்பட்ட தாவரங்களில் யூகலிப்டஸ் மரமும் ஒன்று. முதலில் எரிபொருளுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைகளுக்கும், காகிதம் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்காகவும் தைல மரங்கள் விரும்பிப் பயிரிடப்பட்டன. தைல மரங்களில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த இனங்களில் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக வளரும். யூகலிப்டஸ் மரங்கள் 200 அடி உயரம் வரை வளரக்கூடியன. மற்ற மரங்களைப் போல இந்த மரம் அளவுக்கதிகமான தண்ணீரை எடுத்துக்கொள்ளாது. இது பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ப வளரக்கூடியது.

யூகலிப்டஸ் தோட்டம்

மற்ற மரங்களுக்கு இருக்கும் பண்புகள்தானே இந்த யூகலிப்டஸ் மரத்துக்கும் உள்ளது, இதை ஏன் வைகோ அகற்றச் சொல்கிறார் என்பதை ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர், 'மரம்' ராஜசேகரனிடம் பேசினோம். "யூகலிப்டஸ் மரங்கள் நெடுநெடுவென வேகமாக வளரும். சமவெளிப்பகுதிகளில் மானாவாரியில் விளையும் பூமியில் சிறிது விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு யூகலிப்டஸ் ஏற்றது. இப்போது தேவையான மழைப்பொழிவும் இல்லை. அதனால், மானாவாரி நிலத்தில் இந்த மரங்களை விவசாயம் செய்தால் கணிசமான வருமானம் பார்க்கலாம். வெறுமனே நிலத்தை வைத்துக்கொண்டு விவசாயி என்ன செய்ய முடியும். மேலும் யூகலிப்டஸ் கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும். இப்படியே நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற காரணத்திற்காக இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டினால், பலவகையான மரங்களை வெட்டிச் சாய்க்க வேண்டியதுதான்.

இம்மரங்கள் வளர்ப்பது நல்லதல்ல, சமவெளிகளில் வளர்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்வது சரியல்ல. சமவெளிப்பகுதிகளில் தண்ணீர் இல்லாத வறட்சியான இடங்களில் இம்மரங்களை விவசாயம் செய்வது இயல்புதான். யூகலிப்டஸ் மரங்களால் 70 சதவீதம் நன்மைதான் நடக்கிறது. இந்த மரமும் மற்ற மரங்களைப்போல இலைகளின் மூலம் ஒளிச்சேர்க்கை நடத்தி நீரை ஆவியாக்குகிறது. தற்போது இம்மரங்கள் காகிதம், காகிதக்கூழ், அட்டைகள் ஆகியவை தயாரிக்கும் பணிகளுக்கும் ஏற்ற மரம். இதுதவிர, இம்மரம் கட்டடப்பொருட்கள், எரிபொருள், வீட்டு உபயோகப்பொருட்கள் எனப் பல்வேறு உபயோகங்களுக்காகவும் பயன்படுகிறது. இதேபோல நிலத்தடிநீரை உறிஞ்சும் பிறமரங்களும் இங்கு அதிகமாக உள்ளன. யூகலிப்டஸ் இலை உதிர்வால் மரங்களுக்குக் கீழே பயிரிட்டுள்ள கடலை போன்ற பயிர்களின் மகசூலைப் பாதிக்கும். யூகலிப்டஸ் அருகே உள்ள தாவரத்தை வளரவிடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, மண்ணின் ஈரப்பதத்தையும் இம்மரங்கள் அதிகமாக கெடுப்பதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சும் என்ற காரணத்துக்காக மரங்களை வெட்டாமல், நிலத்தடி நீரை மேம்படுத்த வழிகளை ஏற்படுத்த வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நிலத்தடிநீரை உறிஞ்சும் மரங்கள் அகற்றப்பட வேண்டுமானால் நிலத்தடிநீரை உறிஞ்சி நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளையும்தான் அகற்ற வேண்டும். மரங்கள் எப்போதுமே காக்கப்பட வேண்டியவைதாம்" என்றார்.

-துரை.நாகராஜன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close