Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக்... சீமைக்கருவேல மரம்... அடுத்து கழிப்பறை! - அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

 

 

 

இலையுதிர்க்காலம் போல், இது சீமைக்கருவேல மரம் அழிப்பு' காலம். அரசு தொடங்கி தன்னார்வலர்கள் வரை சீமைக்கருவேல மர அழிப்பு மேளாவில் கைகோத்திருக்கிறார்கள். உயிருக்கும், மண்ணுக்கும் கேடு தரும் சீமைக்கருவேல மர அழிப்பில் எட்டுத்திக்கும் ஆதரவுக் கரங்கள் நீண்டுக் கொண்டிருக்கின்றன.

சீமைக்கருவேல மரங்களை அழிப்பதோடு மட்டும் பலரும் இயங்க,கரூரைச் சேர்ந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் உதவியோடு எண்ணற்ற சீமைக்கருவேலமரங்களை அழித்ததோடு, அடுத்த பாய்ச்சலாக கையோடு அந்த இடங்களில் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள். அதோடு, சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் பிளாஸ்டிக் பொருட்களும் முகாமிட்டிருக்கும் என்பதால், அந்த பிளாஸ்டிக்குகளையும் சேர்த்து அப்புறப்படுத்தியதோடு, மாறாக தங்கள் செலவில் 1000 துணிப்பைகள் தயாரித்து மக்களிடம் கொடுத்து,'பிளாஸ்டிக் வேண்டாம். துணிப்பை போதும்' என்று விழிப்புஉணர்வும் பண்ணி வருகிறார்கள். கூடவே, சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த காட்டைத்தான் கிராம மக்கள் இயற்கை உபாதைகள் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வந்ததால், மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு தனித்தனி வீடுகளுக்கும், பொதுவாகவும் கழிப்பறை கட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களான மனோகரும், வெங்கடேசனும்தான் இந்த அசத்தல் விஷயங்களை செய்து வருகிறார்கள்.

பிளாஸ்டிக்

 வாராவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சீமைக்கருவேல மரம் அழிப்பில்  இறங்கிவிடுகிறார்கள். பள்ளி மாணவர்கள் இருநூறு பேர் மற்றும் முகநூல் மூலமாக இந்த நல்ல காரியத்தில் கைகோத்த 56 இளைஞர்கள் ஆகியவர்களைக் கொண்டு, பரபரவென சீமைக்கருவேல மரங்களை அழிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். டீம் டீமாக பிரிந்து செயல்படுகிறார்கள். ஒரு டீம் அரிவாள், கோடரி, அலக்கு, மண்வெட்டி ஆகியவற்றைக் கொண்டு சீமைக்கருவேல மரத்தை அழிக்க, மற்றொரு டீம் கையோடு அணைத்து வைத்திருக்கும் பூவரசு, வேம்பு, புங்கை போன்ற நாட்டு மரக்கன்றுகளை சீமைக்கருவேல மரங்கள் பெயர்க்கப்பட்ட இடங்களில் நடுகிறார்கள். மற்றொரு டீம் எற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் காரியத்தில் இறங்குகிறது. மாணவர்கள் அடங்கிய டீம் அந்த வழியாக போகும் மக்களிடம், தாங்கள் தயாரித்த துணிப்பைகளைக் கொடுத்து,'பிளாஸ்டிக்கினால் என்ன தீமை. துணி பையினால் என்ன நன்மை' என்று விளக்குவதோடு, ஆளுக்கொரு பையை விநியோகிக்கிறது. மற்றொரு டீம், எந்தெந்த வீடுகளில் கழிப்பறை இல்லை, அவர்களின் வீடுகளில் கழிப்பறை கட்ட இடவசதி இருக்கிறதா, இடமில்லை என்றால் பத்து வீடுகளுக்கு ஒரு இடத்தில் பொதுக்கழிப்பறை கட்ட இடம் தோதாக இருக்கிறதா என்ற புள்ளிவிபரம் சேகரிக்கிறது. 

இவற்றை எல்லாம் மலைப்பாக பார்த்துக் கொண்டிருந்த நாம், முதலில் 'எப்படிங்க இப்படி?!' என்று ஆச்சர்யம் விலகாமல் ஆசிரியர் மனோகரிடம் பேசினோம்.

 "மாணவர்களைக் கொண்டு எங்க பள்ளி வளாகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழித்து, அந்த இடங்களில் நாட்டு மரங்களை நட்டு வளர்த்தோம். இந்த சூழலில்தான்,சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றமே சீமைக்கருவேல மரங்களை அழிக்க ஆர்டர் போட்டது. இதனால் அரசும், தன்னார்வலர்களும் அழிப்பு காரியத்தில் இறங்கினார்கள். இதனால், ஆரம்பமான நாங்க எங்க பள்ளி மாணவர்களைக் கொண்டு கடந்த ஜனவரி பன்னிரண்டு முதல் வாரவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளியணை கிராமம் முழுக்க உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்கத் தொடங்கினோம். மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் வந்து,'சீமைக்கருவேல மரத்தை அழிக்க உறுதியேற்கிறேன்' என்று எங்கள் பள்ளியில் வைத்திருக்கும் உறுதியேற்பு போர்டில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் அந்த போர்டில் உறுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை, லைப்ரரி, காவல்நிலையம், அங்கன்வாடி கட்டடம் என்று அரசு அலுவலக வளாகத்தில் மண்டிக் கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அழித்தோம். நல்ல மரமோ, கெட்ட மரமோ மரங்களை அழித்தால், பதிலுக்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மாணவர்களும், ஊர் மக்களும் உணரும் வகையில் உடனே உடனே வேம்பு, புங்கை, பூவரசு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டோம். நடுவதோடு மட்டுமல்லாது தொடர்ச்சியாக அதற்குத் தண்ணீர் பாய்ச்சினோம். இந்தத் தகவல்களை எல்லாம் 'பசுமையால் நிரப்புவோம்'ங்கிற பேர்ல பேஸ்புக்குல அப்லோடு பண்ணினோம். அதைப் பார்த்துட்டு, இந்தப் பகுதியைச் சேர்ந்த 56 இளைஞர்கள் எங்களோடு கைகோத்தாங்க. அவங்களும் கடந்த மூன்று வாரங்களாக எங்களோடு சீமைக்கருவேல மர அழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். 

இதுவரை, 5000 சீமைக்கருவேல கன்றுகளையும்,1000 சீமைக்கருவேல மரங்களையும் அழித்திருக்கிறோம். மாற்றாக 500 நாட்டு மரக்கன்றுகளை அந்த இடங்களில் நட்டிருக்கிறோம். அந்த சீமைக்கருவேல மரங்கள் இருந்த இடத்தில் பெருங்குப்பையா பிளாஸ்டிக் பொருட்கள் சிதறிக் கிடந்தன. அவற்றையும் அப்புறப்படுத்தினோம். மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக எங்க பள்ளி சாரணர் இயக்கம் சார்பில் முதல்கட்டமாக 1000 துணிப்பைகளை தயாரித்து மக்களிடம் கொடுத்து விழிப்புஉணர்வு பண்ணி வருகிறோம். இந்தப் பகுதி முழுக்க அரவே பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் இல்லாமல் செய்யும் இலக்கோடு செயல்பட்டுக்கிட்டு வருகிறோம்" என்றார்.

 அடுத்து பேசிய, மற்றொரு ஆசிரியரான வெங்கடேசன்,

 "வெள்ளியணை கிராம மக்கள் பெரும்பாலோனோர் நாங்க வெட்டி அப்புறப்படுத்திய சீமைக் கருவேலக்காட்டைத்தான் டாய்லெட்டாக பயன்படுத்தி வந்தார்கள். அதை நாங்க அப்புறப்படுத்த முனைந்தபோது பலரும் சண்டைக்கு வந்துவிட்டார்கள். உடனே, அவர்களிடம் நிலவரத்தை புரிய வைத்ததோடு, அவர்களின் கஷ்டத்தை தீர்க்க என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சோம். அப்பதான், மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் சார், டி.ஆர்.ஓ சூரியபிரகாஷ் சாரையும் சந்தித்து பிரச்னையைச் சொன்னோம். எங்க பணிகளை பாராட்டியதோடு,'அந்த மக்களுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுக்கலாம். யார் யாருக்கு டாய்லெட் தேவைப்படுகிறது என்ற லிஸ்டை கேட்டார்கள். அதனால், என் தலைமையில் மாணவர்களைக் கொண்டு வீடு வீடாக சென்று யார் யார் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று லிஸ்ட் எடுத்து வருகிறோம். டாய்லெட் இல்லாதவர்கள் வீடுகளில் டாய்லெட் கட்ட இடவசதி இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்கிறோம். இடவசதி இல்லாதவர்களுக்கு பத்து வீடுகளுக்கு ஒரு இடத்தில் பொதுக்கழிப்பறை கட்டவும் இடம் இருக்கிறதா என்றும் கணக்கு எடுத்து வருகிறோம். அந்த லிஸ்ட்டை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து, 'திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தாத ஊர்' என்று மாற்ற இருக்கிறோம். இந்த அனைத்து விசயங்களையும் அடுத்தடுத்து தாந்தோணிமலை ஒன்றியம், கரூர் மாவட்டம் என்று விரிவுப்படுத்துவதுதான் எங்களின் அடுத்த இலக்கு" என்றார்.

சூப்பரோ சூப்பர்!.

  - துரை.வேம்பையன்,
 படங்கள்: நா.ராஜமுருகன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close