Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவைப் பிடித்த 'இருபத்தியிரண்டரை சனி'!

நாடு மிக மோசமானதொரு பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. 'இதன் காரணமாக, இந்தியாவின் நிலை எத்தியோப்பியா போலாகிவிடுமோ?' என்கிற கவலைக்குரல்கள் ஒலித்தபடி இருக்கின்றன.

இந்த நிலையில், 'திருப்பதி போன்ற கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை வாங்கி, அரசாங்கம் பயன்படுத்தும்', 'கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தாலே... இதிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்பதால், இரவு நேரங்களில் இந்தியா முழுக்க பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும்,' இப்படியெல்லாம் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. 'திருப்பதி' விஷயத்தை ரிசர்வ் வங்கி மறுக்கிறது. 'பெட்ரோல் பங்குகள் மூடப்படும்' விஷயத்தை மத்திய அரசு ஆமோதிக்கிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் என்று பல தரப்பலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பின்னே... காங்கிரஸ்காரர்களேகூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே! நாட்டிலிருக்கும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தானே!

'மக்கள் எதற்காக அவதிப்பட வேண்டும். நாடு நாசமாகப் போனதற்கு காங்கிரஸே காரணம்... மன்மோகன் சிங்தான் முக்கிய காரணம்... எனவே அவர்கள் ஆட்சியைவிட்டு ஓடினாலே, இந்தப் பிரச்னைக்கு தீர்வு வந்துவிடும்.?' என்று சாடுகின்றன எதிர்க்கட்சிகள்.

இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையே! நாடு இப்படி நாசமாகப் போய்க் கொண்டிருப்பதற்கு காங்கிரஸும், மன்மோகன் சிங்கும்தான் காரணம். ஆனால், இவர்கள் ஆட்சியிலிருந்து போய்விட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?

மன்மோகன் சிங் இங்கே அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் உலக பொருளாதரம்... தாராள மயம் எல்லாம் இன்று, நேற்று வந்ததல்ல. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த அவரை திடுதிப்பென்று தூக்கி மத்திய நிதி அமைச்சராக 1991-ல் உட்கார வைத்தார்களே... அன்றே ஆரம்பமானதுதான். இந்த 'இருபத்தியிரண்டரை சனி...' இன்று வரை விலகவே இல்லை. இடையில் ஐந்தாறு ஆண்டுகள் ஆட்சியைக் கையில் வைத்திருந்த பிஜேபி-யும் சரி... சில ஆண்டுகள் காங்கிரஸ் தயவோடு ஆட்சியில் உட்கார்ந்திருந்த உதிரிக்கட்சிகளும் சரி... மன்மோகன் சிங் போட்டு வைத்த பொருளாதார 'போதை'யிலிருந்து... விலகவில்லை... விலகவும் நினைக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் மட்டும்தான்... அன்றிலிருந்தே எச்சரிக்கை குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதுபோல, எம்.பி.க்கள் இல்லாத கம்யூனிஸ்டுகளின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை. விளைவு... தற்போதைய கொடுமையான சூழலுக்குத் தள்ளிக் கொண்டு வந்துவிட்டது.

'விரலுக்கேத்த வீக்கம்' என்பதை மறந்து, தாறுமாறாக செலவு செய்யும் பழக்கத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுத்ததே... இந்த புதிய பொருளதார போதைதான்! கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், கார் கடன், வீட்டுக் கடன், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடன்... என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை எல்லாம் மக்கள் தலையில் கட்டி சம்பாதிக்க துணைபோய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசு. வங்கிகளும் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக... இஷ்டம்போல கடன்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம், 'ஓவர்' என்று சொல்லி யாருமே தடுக்கவில்லை. நேற்று வரை. ஆனால் இன்று... நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில்... பெட்ரோல் பங்குகளை மூடுவோம் என்கிறார்கள். இந்த நிலையிலும்கூட, 'பொருளாதார சோதனையில்... இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்' என்று 'புதிய பொருளாதார ஜோஸியர்' கருணாநிதி, பாய்ந்து கொண்டு காமெடி பண்ணுகிறார்.

கூடவே, 'பழைய பொருளாதார கொள்கைகள் (1991-ல் வந்தவை) பலனிக்கவில்லை என்றால், புதிய பொருளாதார கொள்கைகளை (2013-க்காக) யோசியுங்கள்' என்று வேறு மன்மோகன் சிங்குக்கு ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார் கருணாநிதி.

அடுத்தக்கட்டமாக காங்கிரஸோடு கைகோத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டார். பேரன், பேத்தி மகன், மகள் என எல்லோருக்கும் நாளைக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் (இந்தி தெரியும் என்பதால் மந்திரி பதவி என்றும் சொல்வார்). ஆனால், மக்களுக்கு?! இன்றைக்கு பெட்ரோல் பங்க்குகளை மூடச்சொல்பவர்கள்... நாளைக்கு, 'வாயை மூன்று வேளையும் திறக்காமல், ஒருவேளை மட்டுமே திறக்க வேண்டும். ஒரு பருக்கை மட்டுமே உண்ண வேண்டும்' என்றும்கூட கட்டளை போடுவார்கள்!

'நம் வீடு எரியும்போது, நீதானே பற்ற வைத்தாய்... நீயே அணை' என்று அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா... நம்முடைய சொத்தும்தான் சேர்ந்தே பஸ்மமாகும்! எனவே, பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதற்கு நாமும் துணை நிற்பதுதான் சரியாக இருக்கும். உண்மையிலேயே 'நடந்தது நடந்துவிட்டது. இனியாவது நாட்டைக் காப்பாற்றுவோம்' என்கிற நல்லெண்ணம் இருக்குமானால், மக்களுக்கு கட்டளை போடும் இந்த 'மாமேதை'கள்... அதற்கு முன்பாக தாங்கள் அல்லவா செயலில் காட்ட வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று மக்கள் வரிப்பணத்தில் வாழும் அத்தனை பேருமே அல்லவா... முன்னுதாரணமாக இறங்கி வரவேண்டும்!

##~~##
அரசாங்க வாகனங்களில்... பொண்டாட்டி- பிள்ளை குட்டிகளோடு ஷாப்பிங், சினிமா, பீச் என்று போகிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? அரசாங்க நிலங்களை வளைத்து ரியல் எஸ்டேட் போட்டு, கோடிகளில் புரளுகிறீர்களே... அதை எப்போது நிறுத்துவதாக உத்தேசம்? 'அரசு முறைப்பயணம்' என்கிற பெயரில் வெட்டியாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? எதற்கெடுத்தாலும் லட்சங்களிலும் கோடிகளிலும் கமிஷன் எதிர்பார்க்கிறீர்களே... அதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?


திருப்பதியிலிருக்கும் தங்கத்துக்கு குறி வைக்கிறீர்களே... கோடி கோடியாக கொள்ளையடித்து, ஸ்விஸ் உள்ளிட்ட வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கிறீர்களே... அதை எப்போது எடுக்கப் போகிறீர்கள்?

-காட்டுவாசி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close