Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழனி ராஜாஜி சாலையைச் சேர்ந்த பரசிவம் மகன் முத்துக்குமார். தலித் மாணவரான இவர், எம்.எஸ்.சி. முடித்து விட்டு தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். இவரும், விருப்பாட்சியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த உமாவும் (பெயர் மாற்றம்) காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி உமாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல சென்ற முத்துக்குமார், உமாவின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். முத்துக்குமாரின் உயிரற்ற உடலை பார்த்ததும் மயங்கி விழுந்த அவரது சித்தப்பாவும் அங்கேயே இறந்து விட்டார். முத்துக்குமாரின் இறப்பை சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவும், ‘இது திட்டமிட்ட கொலை. எனவே கொலை வழக்காக பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்’ என்ற கோரிக்கையுடன் முத்துக்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நான்கு நாட்களாக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை பிணவறையில் இருக்கிறது இறந்துபோன முத்துக்குமாரின் உடல்.

மகனை பறிகொடுத்த சோகத்தில் இருந்த முத்துகுமாரின் தாய் மாரியம்மாள் கூறுகையில், "எம்புள்ள எந்த தப்பு தண்டாவுக்கும் போகாதுய்யா. படிப்புல எப்பவும் மொத இடம்தான். தங்க பதக்கமெல்லாம் வாங்கியிருந்துச்சு. அரசு வேலைக்கு பரீட்சை (குரூப் 2) எழுதி அதுலயும் பாசாயிடுச்சு. வர்ற 20 ஆம் தேதி வேலைக்கு சேர்றதுக்கு ஆர்டர் வந்துடுச்சு. இந்த நேரத்துல எம் மகனை இப்படி பண்ணிட்டாங்களே.

தம்பி, எங்க போனாலும் என்கிட்ட சொல்லாம போகாது. அன்னிக்கு ஒட்டன்சத்திரத்துக்கு போயிட்டு வர்றேனு சொல்லிட்டுப் போச்சு, சாயங்காலமா போன் போட்டேன். சுரேசு கூடதாம்மா இருக்கேன்னு சொல்லிச்சு. சரி வெரசா வந்துடுய்யானு சொல்லிட்டு நானும் வீட்டு வேலையில மும்முரமாயிட்டேன். நைட் 9 மணியாகியும் தம்பி வரலைன்னதும் திரும்பவும் போன் போட்டேன். போன் ஆப் ஆகி இருந்துச்சு. அப்பறம் இன்னொரு பையன் மூலமா, சுரேசு நம்பரை வாங்கி போன் போட்டோம். ‘நான் விருப்பாட்சிகிட்டயே இறக்கி விட்டுட்டுப் போயிட்டேன். அதுக்கு பிறகு எனக்கு ஒண்ணும் தெரியாது’னு அந்த தம்பி சொல்லுச்சு. விருப்பாட்சியில இருக்க அந்த பிள்ளை வீட்டுக்கு எம் பையன் அப்பப்ப போவான்..ரெண்டு பேரும் பிரண்டாதான் பழகுறோம்னு தம்பி, ஏற்கனவே என்கிட்ட சொல்லிருந்துச்சு. அங்கனதான் தம்பியை இறக்கி விட்டேன்னு சுரேசு சொல்லவும், எங்களுக்கு மனசு பொறுக்காம, நானும், என் வீட்டுக்காரரும் ஒரு ஆட்டோ பிடிச்சு விருப்பாட்சிக்கு போனோம். அங்க போயி என் பிள்ளைய தேடிகிட்டு இருந்தோம். அப்ப, அந்த வழியா வந்த ஒருத்தரு, ‘அங்க கிணத்துல யாரோ விழுந்துட்டாங்க, பயர் சர்வீஸ்காரங்க, பாடியை எடுத்திட்டு இருக்காங்க’னு சொன்னாரு, உடனே பதறியடிச்சுட்டு போயி பாத்தா, என் பிள்ளை பிணமா கெடந்துச்சுய்யா"  என்றபடியே கதறி அழுதார்.

முத்துக்குமாரின் தந்தை பரமசிவம் கூறுகையில், "அந்த பிள்ளை எம் பையன்கூட பழகுறது அவங்க ஆளுங்களுக்கு பிடிக்கல. ஆனா, அதை வெளிகாட்டிக்காம, நல்லவங்க மாதிரி நடிச்சு, இப்படி பண்ணிட்டாங்க. அந்த சுரேஷ் பயலும் அந்த புள்ளை ஜாதிக்கார பையன்தான். ஏதோ திட்டம் போட்டு எம் பையனை வரவழைச்சு, இப்படி செஞ்சிட்டாங்க. போலீஸ் இதுல உண்மையான கொலைகாரங்கள கண்டுபிடிக்கணும். நாங்களும் மனுசங்கதான்யா. தலித் பையன்கிட்ட பாடத்துல சந்தேகம் கேக்கலாம். பிராஜக்ட் செஞ்சித் தந்தா வாங்கிக்கலாம். ஆனா, பழகுனா மட்டும் குத்தமா? என்றார் ஆவேசமாக.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராசு, "முத்துக்குமார் நல்ல பிரிலியண்டான பையன். எம்.எஸ்.சி.யில கோல்ட் மெடல் வாங்குனவன். அரசு தேர்வுகள் எழுதுறவங்களை தயார்படுத்த ஆயக்குடியில நடக்குற இலவச பயிற்சியில கலந்துகிட்டு, சக மாணவர்களுக்கு ஏற்படுற சந்தேகங்களை தீர்த்து வைப்பான். அங்கதான் இவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம். சுரேஷும் அந்த பிள்ளையோட ஜாதிக்காரப் பையன்தான். அவனுக்கு தேவையான புராஜக்ட், சார்ட் எல்லாம் முத்துக்குமார் தான் வரைச்சு தருவான். முத்துக்குமார் கூட நட்பா இருந்தாலும், நம்ம சமூகத்தைச் சேர்ந்த பிள்ளை, தலித் பையனை காதலிக்குறாளேனு சுரேஷ் நினைச்சிருக்கான். இவங்க, காதல் விஷயம் தெரிஞ்சதும், முத்துக்குமாரை எப்படியாவது வீட்டுக்கு வரவெச்சு, கதைய முடிக்க திட்டம் போட்டிருக்காங்க போல. அதுக்கு ஏத்தமாதிரி அந்த பிள்ளைக்கு பிறந்த நாள் வரவும், கிப்ட் கொடுக்கறதுக்காக முத்துக்குமாரை டுவீலர்ல வெச்சு கூட்டிட்டுப் போயிருக்கான் சுரேஷ்.

அன்னிக்கு ராத்திரியே அங்க இருந்த கிணத்துல இருந்து முத்துக்குமாரை பிணமா மீட்டிருக்காங்க. இது பல சந்தேகங்களை கிளப்புது. அதனால இதை கொலை வழக்கா பதியணும்னு போராட்டம் நடத்திட்டு இருக்கோம். இதுக்கு இடையில, பால்காரர்னு ஒருத்தர் சம்பவம் நடந்த அன்னிக்கு 12 மணிக்கு சுரேசுக்கு போன் பண்ணி, ‘எல்லாம் முடிஞ்சதா’ன்னு கேட்டிருக்கார். இதை செல்போனில் ரெக்கார்டர் ஆகியிருந்ததை போலீசார் கண்டுபிடிச்சு அவரை விசாரிச்சுட்டு இருக்காங்க. இது திட்டமிட்ட ஜாதிய படுகொலைதான்’’ என்றார்.

முத்துக்குமார் காதலித்ததாக சொல்லப்படும் உமாவின் சார்பாக யாரும் பேசத் தயாராக இல்லாத நிலையில், பழனி டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் பேசினோம். "விசாரணை நடந்துட்டு இருக்குது. பலரையும் விசாரிட்டு இருக்கோம். இதை கொலை வழக்கா பதிவு  பண்ணுங்கன்னு போராட்டம் பண்றாங்க. ஆனா, அதுக்கான ஆதாரம் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கல. விசாரணை முடிவுலதான் உண்மை தெரியும். அது வரைக்கும் எந்த முடிவுக்கும் வரமுடியாது" என்றார்.

இளவரசன், முத்துக்குமார் தொடங்கி இன்னும் எத்தனை இளைஞர்கள் உயிர் குடிக்க காத்திருக்கிறதோ இந்த ஜா‘தீ’

ஆர்.குமரேசன்

படங்கள்: வீ. சிவக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close