Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீடியால் புகையும் பெண்கள் வாழ்வு!

- க.நாகப்பன்

'பெண்கள் வானத்தின் பாதியைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்' என்றார் மாவோ.

'பெண் இன்றி சூரியன் இல்லை, சந்திரன் இல்லை. விவசாயம் இல்லை. நெருப்பும் இல்லை' என்கிறது அரபுப் பழமொழி. தாய்மொழி, தாய்நாடு, பூமாதேவி, கங்கா, யமுனா போன்ற நதிகள் என்று மொத்தத்திலும் பெண்களைத்தான் மையப்படுத்துகிறோம்.

பெண்கள் சக்தி படைத்தவர்கள் என்று சொலவதோடு தெய்வமாக வணங்குகிறோம். ஆனால் நம் நாட்டுப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அவர்கள் வளர்ச்சியும் தேவையும் போதுமானதா என்ற கேள்விகள் வருத்தத்தை வரவழைக்கின்றன. ஒரு பக்கம் பளபளக்கும் கட்டிடங்கள் இன்னொரு பக்கம் கூவம் மிதக்கும் குடிசைகள் என்பதைப்போல பெண்களின் முன்னேற்றமும் முரண்பாடாகத்தான் இருக்கின்றன.

இத்தருணத்தில் மகளிர் உரிமைகளைப் பெற போராட வேண்டும். மார்ச் 8 - உலக மகளிர் தினம் கொண்டாட்டத்துக்கு உகந்ததல்ல என்று ஆதங்கமாய்ப் பேசுகிறார் ஜெயசாந்தி.
லயோலா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரியும் இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி சுற்றும் பெண்களின் அவல வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார். இவரிடம் பேசியபோது...

"திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல், ஆலங்குளம், நாலாங்கட்டளை, சிங்கம் பாறை, அம்பாசமுத்திரம் போன்ற கிராமங்களில் ஏறக்குறைய ஐந்து லடசம் பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். விவசாயம் பொய்த்துப்போகும் சூழலில் ஆண்கள் வேலை தேடி வெளியூர் சென்றுவிடுவதால் பெண்கள் வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பீடிகள் சுற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்பார்க்கும் படலத்தில் மணமகன் வீட்டார் அழகு, அறிவு, கல்வி குறித்து எந்த கேள்வியையும் கேடபதில்லை. ஆனால் ஒரு நாளைகு எவ்வளவு பீடி சுற்றுகிறாள் என்ற கேள்வியை எழுப்பாமல் இருப்பதில்லை. பீடி சுற்றிய எண்ணிக்கையைக் குறித்துவைத்துள்ள கணக்கைப் பார்த்தபிறகே மருமகளாக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இன்றைக்கு நிலவும் பொருளாதார சூழலில் ஆணும், பெண்ணும் வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் புற்றுநோய், ஆஸ்த்துமா, காசநோயோடு பெண்கள் வாழவேண்டிய துர்பாக்கியத்தை தூக்கி எறியச் செய்பவர்கள் யாருமில்லை. ஐந்து லட்சம் மக்களுக்கு முக்கூடல் என்ற இடத்தில் எண்பது பேர் மட்டும் அட்மிட் ஆகும் அளவிற்கு ஒரு மருத்துவமனை இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளமா?

பீடி சுற்றுவதால் பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் ஆபத்து, நோய்களும் அதிகமாகத் தாக்குகின்றன. இதிலிருந்து மீள வேண்டாமா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, 'பீடி சுற்றாத பெண்களுக்கு காசநோய், ஆஸ்த்துமா வருவதில்லையா?' என்று எதிர்கேள்வி தொடுக்கிறார்களே தவிர பிரச்னையின் வீரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை.
பெண்களோடு மட்டும் இந்த பீடி சுற்றும் வேலை நிறபதில்லை. இலை வெட்டுதல், தூளாக்குதல் போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்கு அவர்களின் குழந்தைகளும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒரு தலைமுறை கண் எதிரிலேயே ஆரோக்கியமிழந்து வாழ்வதை ஜீரணிக்க முடியவில்லை.

இந்த மனவலியோடு 'கிளியம்மா என்ற குமணா' நாவலிலும், ஆவணப் படத்திலும் என் மனக்குமுறல்களைப் பதிவு செய்துள்ளேன். என் அடுத்த படைப்பும் இவர்களின் முழுமையான வாழ்க்கையைப் பதிவு செய்யும். என் நோக்கமெல்லாம் இவர்கள் பீடி சுற்றும் தொழிலிலிருந்து விடுபட்டு விடியலைப் பெற மாற்று வேலையை உருவாக்கவேண்டும் என்பதுதான்" என அழுத்தமாகச் சொல்கிறார்.

ஆவணப்படத்தை ஒளிப்பதிவு செய்த சாம்சன் துரை, "பள்ளிக்கூடத்தில் படித்த சான்றிதழுக்குப் பதிலாக பீடி சுற்றும் கணக்கு நோட்டை வைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் பெண்களை சந்தித்தேன். கர்ப்பப்பை பிரச்சனை, குழந்தைப் பிறப்பில் பிரச்னை என்று மனதைப் பிழியும் வருத்தத்தோடும், கண்ணீர் வழியும் காரணங்களோடும் பேசும்போது என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. மன உளைச்சல்களோடும், கனவுகளோடும் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை கடத்தப்பட்டு வருவது கொடுமையின் உச்சமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

'பெண்கள் காகித ஓடங்கள் அல்ல
காற்றில் கவிழ்ந்து போவதற்கு...
பனித்துளிகள் அல்ல -
கதிரவனில் கரைந்து போவதற்கு...
விட்டில் பூச்சிகள் அல்ல
வெளிச்சத்தில் வீழ்ந்துபோவதற்கு ..

பெண்கள் நாட்டின் விடிவெள்ளிகள் என்று கவிதை எழுதி, மேடைகளில் பேசி நம் மகளிர் தின கொண்டாட்டத்தை முடித்துக்கொள்கிறோம். உண்மையில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது போல பெண்கள் தங்கள் வாழ்வாதராத்தைப் பெருக்குவதிலும் ஆரோக்கியமான, சுதந்திரமன சூழல் உருவாக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு" என்கிறார் சாம்சன்துரை.

பெண்கள் முன்னேற்றம் குறித்து கூறப்படும் மேற்கோள்கள் எல்லாம் இனியாவது குறிக்கோள்கள் ஆகட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close