Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பண மதிப்பிழப்பு பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வெளியீடு!

பண மதிப்பிழப்பு பற்றிய அறிவிப்புகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்கெஸ்ட்ரா இசைக் கோர்வையில் ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். 

ரஹ்மான்

கள்ள நோட்டு புழக்கத்தையும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காகவும் "உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு" என்ற பெயரில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த வருடம் நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையொட்டி, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு உள்ளிட்ட அறிவிப்புகளால்  பொதுமக்கள் பலரும் வங்கிகளிலும் ஏ.டி.எம் வாசலிலும் பல மணிநேரம் காத்துக்கிடந்தனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடினர். 

இது அறிவிக்கப்பட்டு ஓராண்டு நெருங்கிவிட்டது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும்  ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான்,  'தி ஃப்ளையிங் லோட்டஸ்' (The Flying Lotus) என்ற பெயரில் புதிய சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இசைக் கோர்வையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். 19 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடல் முழுவதும் இசையால் நிரம்பியுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி குரலில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 

 

 

இதுகுறித்து ரஹ்மான் பேசுகையில், "பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தாலும், இதைப் பதிவு செய்வதற்காக, இசை மொழியில் சொல்ல முயன்றிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.  

ரஹ்மான் சினிமாவுக்கு இசையமைக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை அரசியல் நிகழ்ச்சிகளிலும், அரசியல் பேசுவதையும் கவனமாகத் தவிர்த்தேவந்துள்ளார். ஆனால், சமீப காலமாக அரசியல், சமூக நிகழ்ச்சிகள் குறித்து வெளிப்படையாக  கருத்துதெரிவித்துவருகிறார். குறிப்பாக, விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரஹ்மான், '' 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். 

அதேபோல, தன்னுடைய 'ஒன் ஹார்ட்' கான்சர்ட் படத்தின் பிரீமியர் காட்சியை வெளியிட மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூரில்  நடந்த கௌரி லங்கேஷ் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "இது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா அன்பான இந்தியாவாகவும் வளர்ச்சியை நோக்கியும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்" என்று வேதனை தெரிவித்தார்.

 தற்போது, பண மதிப்பிழப்புகுறித்த இசைக்கோர்வையை வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவருடைய ரசிகர்கள் உள்பட பலர் அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close