Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னை ரஜினியுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை : சூர்யா

சென்னை, நவ.16,2010

தன்னை நடிகர் ரஜினிகாந்துடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை என்று சூர்யா கூறினார். ##~~##

சூர்யா, விவேக் ஒபராய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ரத்த சரித்திரம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளிவரவுள்ளது

ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கில் இரண்டு பாகங்களாக வெளிவந்தாலும் தமிழில் ஒரே பாகமாக ரிலீஸாகிறது. இந்தி, தெலுங்கில் முதல் பாகம் வெளியாகிவிட்டது.

சூர்யாவை பிரதானப்படுத்தும் இரண்டாம் பாகத்துக்கான பட விளம்பரத்தில், "ரோபோ ரஜினியை தொடர்ந்து 'கஜினி' சூர்யா" என்று விளம்பரம் செய்தார், இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இந்த விளம்பரம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ரத்த சரித்திரம் பற்றியும், விளம்பர சர்ச்சை குறித்தும் சென்னையில் நிருபர்களிடம் சூர்யா கூறியது:

"ரத்த சரித்திரம், ஆந்திராவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. வெறும் படமாக இல்லாமல், சிறையில் கிடைத்த தகவல்கள், பத்திரிகைகள் மூலம் கிடைத்த தகவல்கள், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு அறிந்தவை ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்ட கதை.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நானே சொந்த குரலில், 'டப்பிங்' பேசியிருக்கிறேன். இந்த படத்துக்கு சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. யாரையும் நாங்கள் காயப்படுத்தவில்லை. என் முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. வழக்கமான கதாநாயகன் - வில்லன் படம் அல்ல. நேரம், காலம், சூழ்நிலை சிலரை எப்படி மாற்றுகின்றன? என்பதை ராம்கோபால் வர்மா ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறார்.

'ரத்த சரித்திரம்' படத்துக்காக ரஜினியுடன் என்னை ஒப்பிட்டு, மும்பையில் செய்யப்பட்டிருந்த விளம்பரங்களை அகற்றும்படி கூறிவிட்டேன். ரஜினி, மிகப்பெரிய நடிகர். அவருடன் என்னை ஒப்பிடுவதை விரும்பவில்லை.

படத்தின் கதைப்படி, என் அம்மா, தங்கை, தம்பி மூன்று பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதை நினைத்து நான் ஆக்ரோஷம், சோகம் இரண்டும் கலந்து பேசுகிற காட்சியை மும்பையில், 12 மணி நேரம் படமாக்கினார்கள். அதை படமாக்கி முடித்தபோது, சோகம் நடந்த ஒரு வீட்டுக்குள் போய் வந்த உணர்வு ஏற்பட்டது. 'ரத்த சரித்திரம் திரைப்படம் தேசிய விருதிற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல," என்றார் சூர்யா.

இத்திரைப்படத்தில் சூர்யாவின் நண்பரும் இயக்குனருமான கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வரும் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் காட்சிகளுக்கு பின்னணி பேசியுள்ளார். இப்படத்தை தயாநிதி அழகிரியின் க்ளைவுட் நைன் மூவஸ் வாங்கி  வெளியிடுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ