Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்ணதாசனின் தத்துவப்பாடல்களும் சிவாஜிகணேசனின் கதாவிலாஸமும்!

கண்ணதாசன்

அறிஞர் என்றால், அண்ணா 
கலைஞர் என்றால், கருணாநிதி 
கவிஞர் என்றால், கண்ணதாசன்' 

என்று சொல்வார்கள். இன்று கண்ணதாசன் நினைவு நாள். பூமிப்பந்தின் வரலாற்றில், தனது சொந்த வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக்களமாக்கி அதில் பலதரப்பட்ட அவதாரங்களையும் அதற்கேற்ற பலவிதமான வாழ்க்கையையும்  வாழ்ந்து பார்த்து, அதன் விளைவுகளை, அதன்  முடிவுகளை வெளிப்படையாக எல்லோருக்கும் கூறிய பெருமை ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு உண்டு என்றால், அது கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.

குழந்தையைப்போல் வெள்ளை உள்ளம் படைத்த அவர், மனிதனாக, ஞானியாக தன் வாழ்க்கையை  ஆய்ந்து, அதில் இறைவனின் பங்களிப்பையும் கலந்து  அவற்றைத் தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். அதனால்தான் `வனவாசம்’என்னும் தனது சுயசரிதையின் முன்னுரையில், 'ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல! ‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று குறிப்பிடுகின்றார். 

கண்ணதாசன், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல் கட்சித் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதில், பலவற்றில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும், நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் அவர் சந்தித்தார். இப்படிப் பலதரப்பட்ட முகங்களை அவர் கொண்டிருந்தாலும், திரைப்படப் பாடலாசிரியராகத்தான் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார். 

காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடல்களை வழங்கியதில், அவர் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முடிசூடா மன்னனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞராகத் திகழ்கிறார். வாழ்க்கைப் படிப்பினைகளை, தோல்விகளை, துன்பங்களை சிக்கல்களை தானே அனுபவித்ததால் நெருப்பில் புடம்போட்ட தங்கமாக மின்னும் ஞானத்தை அவருக்கு இணையாக இன்றளவும் எவரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.

55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங்களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப்  பாடலில்,

'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் திரைக் கதாபாத்திரங்களுக்கும் கண்ணதாசனின் சொந்த வாழ்வு அனுபவங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதுபோல் அவரது படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்கள் அமைந்திருக்கும். அந்தப் பாடல்களுக்கான பின்னணி, கண்ணதாசன் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக இருக்கும். சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணதாசன் பாட்டெழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாட  எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும். அதை இரவு நேரங்களில் கேட்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பாடல்களை எழுதும்போது கவிஞரின் வயது 35தான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமான ஒன்றாகும்.  கண்ணதாசனின் தங்க வரிகளில் மின்னும் சில வைரங்கள்:

படம்: பார்த்தால் பசி தீரும்
'உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'

படம்: பாவ மன்னிப்பு
'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை... 
வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்  
பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்... வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்... பணம்தனைப் படைத்தான்'

படம்: பாவ மன்னிப்பு
`எல்லோரும் கொண்டாடுவோம்... அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்...
நூறு வகைப் பறவை வரும்... கோடி வகைப் பூ மலரும்...
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா...
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே... கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை.... கடவுளில் பேதமில்லை...
முதலுக்கு அன்னையென்போம்... முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்...’

படம்: ஆலயமணி
`சட்டி சுட்டதடா கை விட்டதடா! புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா! நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா! சட்டி சுட்டதடா கை விட்டதடா!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா

படம்: ஆண்டவன் கட்டளை
ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’

படம்: குங்குமம்
`மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி 
கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம் 
நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் நான் திரை ஆனேன், தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது, விதியும் மதியும் வேறம்மா - அதன் 
விளக்கம் நான்தான் பாரம்மா, மதியில் வந்தவள் நீயம்மா - என் 
வழி மறைத்தாள் விதியம்மா’

படம்: நிச்சயதாம்பூலம்
'படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே 
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை 
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை’

படம்: புதிய பறவை
'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? 
எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்... 
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே...
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!’

படம்: பார் மகளே பார்
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே 
நான் பாக்கும்போது கண்களிரண்டைக்
கவர்ந்து போனாளே
அவள் எனக்கா மகளானாள்? நான்
அவளுக்கு மகனானேன் என்
உரிமைத் தாயல்லவா என்
உயிரை எடுத்துக்கொண்டாள்...

படம்: பாலும் பழமும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

படம்: வசந்தமாளிகை
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ... 
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...
சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான் 
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே...
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...’ 

படம்: அவன் தான் மனிதன்
'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன... அவன் ஆட்சி நடக்கின்றது...’

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் திரைப்படத்துறை வாயிலாகவும் , அரசியல் ரீதியாகவும் தொடர்பிருந்தது. இருவருமே தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள். சிவாஜிகணேசன் ஏற்ற கதாபாத்திரங்களின் நகர்வுகளில்  கண்ணதாசனின் பாடல்கள் கதையம்சத்துடன் ரொம்பவே நெருக்கமாக ஒட்டி உறவாடியவை. குறிப்பாக `வசந்த மாளிகை’யில் சிவாஜி ஏற்ற ஆனந்த் கதாபாத்திரம் கண்ணதாசனின் குணங்களோடு ரொம்பவே நெருக்கமானவை. அதனால்தான் காலங்கள் மாறினாலும், தரம் மாறாத பாடல்களாக இன்னமும் இனிக்கின்றன.  

 -கதிரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close