Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ரஜினி, கமலை ஏமாற்றி ஊழல் செய்திருக்கிறார்கள்!' - நடிகர் சங்க அட்டாக்

ஸ்டார் கிரிக்கெட் என்ற பெயரில் கூத்தடித்து விட்டு, மோசடியை மறைக்க பொய்யான கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளதாக நடிகர் வாராகி குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டார் கிரிக்கெட் போட்டி மற்றும் சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்துள்ளதாக நடிகர் விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மீது, நடிகர் வாராகி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கம் தம்முடைய இணையதளத்தில் ஸ்டார் கிரிக்கெட் தொடர்பான கணக்கு விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியவற்றில் இருந்து ஸ்டார் கிரிக்கெட்டுக்கு செலவிடப்பட்ட தொகை விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கணக்கு விவரங்களை விரிவாக வெளியிடப் போவதாக கூறிவிட்டு தங்களது ஊழல்களை மறைக்க வெறும் மேலோட்டமாகவே கணக்கு காட்டியுள்ளனர் என்று நடிகர் வாராகி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகர் வாராகியிடம் பேசினோம்,

"ஆரம்பத்தில் இருந்தே இந்த ஸ்டார்  கிரிக்கெட்டில்  ஊழல் நடந்துள்ளது என்று கூறிவருகிறேன். சங்கத்தில் பணம் தொடர்பாக எந்த நடவடிக்கைக்கும் பொதுக்குழு செயற்குழுவை கூட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என்று சங்க சட்ட விதிகள் கூறுகின்றன. ஆனால் இவர்கள் முடிவை எடுத்துவிட்டு பொதுக்குழுவில் அறிவிப்பை  மட்டுமே வெளியிட்டனர்.

நடிகர் சங்க கட்டடம் கட்ட பெங்களூரு நிறுவனம் டெமோ காட்டியது. அந்த நிறுவனத்துக்கு கொடுக்க பொதுக்குழுவில் அனுமதி வாங்கினார்களா? இல்லையே. இதற்கு இரண்டு கோடி லஞ்சமாக வாங்கியுள்ளனர். ஸ்டார் கிரிக்கெட் நடத்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் சன் டிவி க்கு ஒளிபரப்பு உரிமையை 13 கோடிக்கு  வழங்கியுள்ளனர்.

ஏன்  இந்த நிகழ்ச்சியை டெண்டர் மூலம் விடாமல் சன் டிவி க்கு கொடுத்தார்கள்? சட்டமன்ற  தேர்தல் நேரத்தில் இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் இடையில் ’என்ன அம்மா எப்படி பண்றிங்களேமா’ என்கிற தி. மு. க விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இந்த விளம்பரத்தை ஒளிபரப்பதான் அவசரமாக கிரிக்கெட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக சன் டிவி யிடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இதில் தற்போது சட்டமன்ற  உறுப்பினர் கருணாஸுக்கும் பங்கு உண்டா என்பதை அவர் விளக்க வேண்டும். 2004-ல் நடத்தப்பட்ட கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு ஒளிபரப்பு உரிமம் 4 கோடி ரஜினிகாந்த் கலந்து  கொண்டால்  9 கோடி  என தருகிறோம் என தொலைக்காட்சிகள் கூறியுள்ளன. தற்போது நான்கு  மாநில சூப்பர் ஸ்டார்கள் கலந்து  கொண்டனர். ஆனால் 13 கோடிக்கு தான் உரிமை என்றால் யாருக்கு இதில் ஆதாயம்? ஏற்கெனவே 2015 சி சி எல் கிரிக்கெட் நடத்தியதில் சன் டிவி தரவேண்டிய 25 லட்சத்தை இதுவரை வாங்கவில்லை. ஸ்டார்  கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை அளிக்கும்போது பழைய பாக்கி 25 லட்சத்தை ஏன் கேட்கவில்லை?

சன் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறியிருந்தேன். குண்டூசிக்கும் கணக்குக் காட்டுவோம் என வசனம் பேசிய நடிகர் சங்க நிர்வாகிகள். சன் டிவியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடவில்லை? இதில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? மடியில் கனமில்லை என்றால் பகிரங்கப்படுத்த வேண்டியதுதானே!

இனி இவர்கள் வெளியிட்டுள்ள கணக்கு விவரங்களில் உள்ள மோசடிகளை பாருங்கள்... இவர்கள் நடத்துவது கிரிக்கெட் போட்டி. இந்த போட்டிக்கு உபகரணங்கள், உடைகள் மட்டுமல்ல மேக்கப் போட செலவு செய்ததாகவும் ரூ.6 லட்சம் கணக்கு காட்டியுள்ளனர். மேக்கப் போட்டுதான் விளையாடுவார்களா?. சரி யார் யாருக்கு மேக்கப் போட இந்த பணம் கொடுத்தீர்கள்? ஏன் அந்த விவரத்தை விரிவாக வெளியிடவில்லை.

ஸ்டார் கிரிக்கெட் போக்குவரத்துக்கு ரூ20 லட்சம் செலவு செய்ததாக கூறுகிறார்கள். அதாவது கிரிக்கெட் சங்க கணக்கில் ரூ6,18,716; அறக்கட்டளை கணக்கில் ரூ13, 67,052 போக்குவரத்துக்கு என கணக்கு காட்டியுள்ளார்கள். யார் யாருக்காக இந்த பணம் செலவிடப்பட்டது? ஏன் விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

கிரிக்கெட் போட்டியை ஒட்டி தங்குமிடத்துக்கான செலவு ரூ19 லட்சம் என குறிப்பிட்டுள்ளனர். முதலில் ஒன்றைப்  புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடத்த மைதானத்துக்கு ரூ25 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். அந்த மைதானத்திலேயே கிரிக்கெட் வீரர்களுக்கான 40 அறைகள் உள்ளன. இவை இலவசமாக தங்குவதற்கான இடங்கள். இருந்தும் யார் யார் ஹோட்டலில் தங்குவதற்கு இந்த பணம் கொடுக்கப்பட்டது? அந்த  விவரம் எங்கே.?

அடுத்தது உணவு மற்றும் அத்தனை பானங்களுக்குமான செலவு ரூ.21 லட்சமாம்.. ஏழை நடிகர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு வழியே இல்லாமல் இருக்கின்றனர்... இந்த நிலையில் ஸ்டார் கிரிக்கெட் என்ற பெயரில் ஒருநாள் கூத்தடிக்க நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் ரூ.21 லட்சம் பணத்தை எடுத்து கும்மாளம் போட்டிருப்பது எவ்வளவு கொடுமையானது?

விளம்பரம் செய்ததாக மொத்தம் ரூ17 லட்சம் கணக்கு காட்டியிருக்கிறீர்களே... சன் டிவிக்குதான் ஒளிபரப்பு உரிமத்தை கொடுத்துவிட்டீர்கள்..  அவர்கள்தானே விளம்பரங்களை வாங்கி ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.. நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தீர்கள் என்பதற்கு ஏன் விளக்கம் தரவில்லை.

 

இப்படி ஒருநாள் கூத்துக்காக நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் ரூ6 கோடி பணத்தை செலவிட்டதாக பொய் கணக்குகளைக் காட்டியுள்ளனர். இது பொய் கணக்கு இல்லை என்றால் குண்டூசிக்கும் கணக்கு காட்டுவோம் என்ற நிர்வாகிகள் விரிவாக அதே இணையதளத்தில் பகிரங்கப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே.

நீங்கள் நேர்மையாளர்கள் எனில் ஒவ்வொரு செலவுக்குமான கணக்கு விவரங்களை பகிரங்கப்படுத்துங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

ரஜினி, கமல் மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை ஏமாற்றி நீங்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த ஊழல் மோசடி பேர்வழிகளை கமல், ரஜினி மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்கள் அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன்".என  கொந்தளிப்போடு கூறி முடித்தார் வராகி.

- பிரம்மா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ