Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெட் ஜெயன்ட் மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

 

மிழக அரசின் மீது, வரிவிலக்கு தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை, உதயநிதி ஸ்டாலின் தொடுத்துள்ளார். அந்த வழக்குகளின் மனுதாரராக உள்ள  அவரின் மேலாளர் சரவணமுத்து, நேற்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள ரெட் ஜெயன்ட் அலுவலகம் முன்பு இரண்டாவது முறையாக தாக்கப்பட்டார்.இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்று பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

வரிவிலக்கும்  பிரச்சினைகளும்! 

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த படங்களுக்கு  எல்லாம்  அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதாகத்  தொடந்து  குற்றம் சாட்டியும், நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் முதலில் வழக்குத்  தொடரப்பட்டது. ‘‘தமிழில் பெயர் வைக்கப்பட்டு 'யு' சான்றிதழ் பெறப்படும் தமிழ்த்  திரைப்படங்களுக்குக்  கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

ஆனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ படத்துக்கு, தமிழக அரசு விதித்து இருக்கும் தகுதிகள் இருந்தும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. மாறாக ‘சைக்கிள்’, ‘ரம்மி’ என்று வேற்று மொழி பெயரிட்ட படங்களுக்கு வரிவிலக்கு அளித்து உள்ளது.

'இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொண்ட நடவடிக்கை' என்று அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட்டு, வரிவிலக்கு குழுவில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்று கூறுவதற்கு இல்லை என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தது. 

சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு 

இதை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்  ‘‘ஒரு திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பது என்பது அந்தப்  படம் வெளியான ஓரிரண்டு வாரங்களில் கிடைக்கும் வசூலில் அதன் பயன் வெளிப்படையாகப்  பிரதிபலிக்கும். ஆனால் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்துக்கு 46 நாட்கள் கழித்தே வரிவிலக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு வழங்குவது இல்லை. அனைத்து நிபந்தனைகளைக்  கடைப்பிடித்தும் இந்த நிறுவனத்தின் படங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது’’ என்று கூறியிருந்தனர்.

அதற்கு தமிழக அரசின் சார்பில், 'வரி விலக்கு அளிக்கும் விஷயத்தில்  அரசு எந்த விதமான பாரபட்சமும் காட்டுவது இல்லை என்றும், முறையான விதிமுறைகளை கடைப்பிடித்து முடிவெடுக்கும்போது சில நேரங்களில் தாமதமாகி விடுகின்றது' என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி இதில் அரசியல் நோக்கம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்ச்சைக்குரிய ஏழாம் அறிவு படத்தின் கதை என்ன என்று கேட்டார். இதைத்தொடர்ந்து, அந்த படத்தின் கதையை நீதிமன்றத்தில் ரெட் ஜெயன்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரைப்படத்தில் எவ்விதமான அரசியல் கருத்துகளும் இல்லை என்றும், அரசு இந்த காரணங்களுக்காக தாமதம் செய்யவில்லை என்றும், சில நடைமுறை விதிகளைக்  கடைப்பிடிக்கும்போது இப்படி தாமதம் நேர்ந்து விடுகிறது என்றும் அரசின் சார்பில் கூறினர்.

பின்னர், 'ஒரு படத்துக்கு வரி விலக்கு அளிக்க 46 நாட்கள் என்பது மிகவும் அதிகப்படியானது' என்று கூறிய நீதிபதிகள், பொதுவாக திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க தேவையான குறைந்தபட்ச காலஅவகாசம் பற்றியும், உரிய விதிமுறைகள் பற்றியும் தமிழக அரசிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றை பெற்று கோர்ட்டில் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழக  அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில்  தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்த நாளில் இருந்து 4 வாரங்கள் என்பதற்கு பதிலாக திரைப்படத்தை திரையிட்ட நான்கு வாரங்களுக்குள் வரி விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதைக் கேட்ட  நீதிபதிகள், “திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரி விலக்கு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்த 2 வாரங்களுக்குள் பார்வையிடும் குழுவினர் படத்தைத்  திரையிடும் தேதியை அரசு சார்பில் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கவேண்டும்.அந்தத்  தேதியில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்குள் தயாரிப்பாளர் பார்வையிடும் குழுவுக்குப்  படத்தைத்  திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்னர் படத்தைப்  பார்த்த தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதா..? இல்லையா..? என்பதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு தயாரிப்பாளருக்கு அறிவிக்கவேண்டும்.” என்று உத்தரவிட்டார்.

ஆனாலும்  மீண்டும் 'நண்பேன்டா'  படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கேட்டு, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின்  விண்ணப்பம் செய்தார்  ஆனால், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து  மறுபடியும்  சென்னை  உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு மனுவில், ‘தமிழில் தலைப்பு வைத்துள்ள, தமிழ்க்  கலாசாரத்தை வளர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது. நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பம் செய்தோம். இதையடுத்து எங்களது படத்தை பார்த்த நிபுணர் குழு, நண்பேன்டா படத்தில் ஆபாசம் , வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கில சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

ஆனால் இந்தப்  படத்துக்கு சென்சார் போர்டு அனைத்துத்  தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற முறையில் யுனிவர்சல் சான்றிதழ் (யு) வழங்கியுள்ளது. இதனைக்  கருத்தில் கொள்ள அந்த நிபுணர் குழு தவறிவிட்டது. எனவே, எங்களது படத்துக்குக்  கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நீதிமன்றம் அட்வகேட் கமிஷனர் மூலம் படத்தைப்  பார்த்து முடிவு செய்யவேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நண்பேன்டா படத்தை இந்த நீதிமன்றமோ அல்லது இந்த நீதிமன்றம் அமைக்கும் வக்கீல் கமிஷனரோ பார்த்துவிட்டு, இந்தப்  படம் கேளிக்கை வரி விலக்கு பெற தகுதியுள்ளதா? என்பதை முடிவு செய்யலாம். தமிழக அரசு உள் நோக்கத்துடன் மனுதாரரின் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுக்கிறது. 

இந்தப் படத்தில் ஆபாசம், வன்முறை நிறைந்து இருப்பதாகக்  கூறுவது ஏற்க கூடியது அல்ல. படத்தில் ஆங்கில சொற்கள் அதிகளவில் இருப்பதாகக்  கூறுவதையும் ஏற்க கூடியது அல்ல. த்ரீ (3) என்ற படத்தில் ஆங்கிலம் வார்த்தைகள் கொண்ட பாடல் உள்ளது. மான் கராத்தே படத்திலும் ஓபன் தி டாஸ்மாக் என்ற ஆங்கில கலப்பு கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அந்த படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்போது, எங்களது படத்துக்கு அந்த சலுகை வழங்காதது உள் நோக்கம் கொண்டது' என்று வாதிட்டார். 

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு நோட்டீசு அனுப்பிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 'நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என்று உத்தரவிட்டார். 

உதயநிதி  கடைசியாக  நடித்த மனிதன் படம்  வரை இந்த  பிரச்னை தொடர்ந்து  வருகிறது. இதுகுறித்து  உதயநிதி ஸ்டாலின் அப்போது அளித்த பேட்டியொன்றில், மனிதன்  படத்துக்கு சென்சார்ல ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ஆனாலும் வரிவிலக்கு கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியாது. கிடைக்கலைன்னா மறுபடியும் கோர்ட்டுக்கு போவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இந்த ‘மனிதன்’ படமே கோர்ட் சம்பந்தப்பட்ட கதைதான். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு கோர்ட்டுக்கு போக வேண்டிய நிலைதான் இப்ப இருக்கு.

இந்த வரிவிலக்கு விஷயத்தில் இந்த ஐந்தாண்டு காலத்தில் நான் நிறைய இழந்துவிட்டேன். ஆனால் தயாரிப்பாளர் சங்கமும், சினிமாவுலகமும் எனக்கு எந்த உதவியும் செய்யலை.. வருத்தமாத்தான் இருக்கு.” என்று கூறியிருந்தார்.

அலுவலக மேலாளர் மீது தாக்குதல் 
 
ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் அலுவலக  மேலாளராகப்   பணியாற்றி வருபவர் சரவண முத்து. அந்த நிறுவனத்தின்  கணக்கு  வழக்குகளையும் அவர்  கவனித்து வந்ததாகக்  கூறப்படுகிறது. தமிழக  அரசின்  மீது உதயநிதி ஸ்டாலின்  தொடுத்து  உள்ள வழக்குகளுக்கு  எல்லாம் நிறுவனத்தின் மேலாளர்  என்கிற முறையில் அவரே மனுதாரராகவும் இருந்துள்ளார். உதயநிதி  தொடர்ந்த  வழக்குகளில்   தமிழக  அரசுக்கு பல்வேறு  நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இப்போதும் அந்த வழக்கு  நிலுவையில்  இருந்து  வருகிறது. இந்த நிலையில் தான் சரவண முத்து  இரண்டாவது  முறையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை தாக்கப்பட்டது  குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த முறை  சரவணமுத்து தாக்கப்பட்டது குறித்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் மற்றும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளனர் .நடந்தது என்ன என்பதை விளக்கமாக  புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.இம்முறையாவது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் போலீசாரை மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, "சரவண முத்து மீது தாக்குதல் நடத்துவது இது  முதல் முறையல்ல. இரண்டாவது முறை.  கடந்த முறையாவது  இரவில் தாக்கினர். இப்போது பட்ட பகலில் தாக்கியுள்ளனர். இரண்டு  தாக்குதல்  சம்பவங்களும் ஒரே இடத்தில் தான்  நடந்துள்ளது. வரிவிலக்கு தொடர்பாக தமிழக  அரசு  மீது நான்  தொடர்ந்து உள்ள வழக்குகளில், மனுதாரராக ரெட் ஜெயின்ட் சார்பாக சரவண முத்து தான் வழக்குகளை நடத்தி  வருகிறார்.

அவரை  யார் தாக்கினார்கள் என்கிற யூகத்துக்கு  நான்  பதில்  அளிக்க  விரும்பவில்லை. ஆனால் கடந்த  முறை  அவரை  தாக்கிய  போதே காவல்துறையிடம்  புகார்  அளித்தும்  எந்த  நடவடிக்கையும்  எடுக்கவில்லை.அவரின் பாதுகாப்புக்காக நாங்களே ஒருவரை  நியமித்துள்ளோம். அவருடனே சரவணமுத்து தினமும் அலுவலகத்துக்கு வந்து கொண்டு இருந்தார். இந்த  நிலையில்   மீண்டும் அவர் தாக்கப்பட்டு இருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

இப்போது அலுவலகத்தைச் சுற்றி கண்காணிப்பு  கேமரா  பொறுத்தச் சொல்லி இருக்கேன். என்  ஊழியர்களின் பாதுகாப்பு  எனக்கு  முக்கியம். கடந்த முறையாவது  தாக்கியவர்கள் யாருன்னு அடையாளம்  தெரியல. ஆனா இந்த முறை நேர்ல பாத்தவங்க  இருக்காங்க. இதவச்சு  உடனடியாக  நடவடிக்கை  எடுப்பதாகக் காவல் துறையினர் கூறியுள்ளனர். வரிவிலக்கு தொடர்பான  வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து  நடந்து வருகிறது. தற்போது வெளிவர உள்ள  படத்துக்கும், பெயர்  தமிழ்ல இல்ல. அதனால வரிவிலக்கு தரமுடியாதுன்னு சொல்லுவாங்க. மறுபடியும் நீதிமன்றத்துக்குத்தான் போகணும்" என்று கொந்தளித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கும், வரிவிலக்கு பிரச்னையிலும் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்பது  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தபட்ட பின்பே தெரியவரும்.    

 

- பிரம்மா.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ