Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாய் ப்ரசாந்த், சபர்ணா.. தொடரும் தற்கொலைகள்.. யார் காரணம்?

 சபர்ணா

சின்னத்திரை வட்டாரத்தின் கடந்த வாரப் பரபரப்பு நடிகை மற்றும் தொகுப்பாளினி சபர்ணாவின் மரணம்.

அது கொலையா, தற்கொலையா என்கிற விசாரணை தொடர்ந்து கொண்டிருக்க, சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பாக கடந்த நேற்று, சங்கத் தலைவர் சிவன் ஸ்ரீனிவாஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது.

சபர்ணாவின் அகால மரணமும் கூட்டத்தில் முக்கிய விவாதமாக இருந்த நிலையில், தலைவர் சிவன் ஸ்ரீனிவாசிடம் பேசினோம்.

''எங்களைப் பொறுத்தவரை சபர்ணா மிகவும் தைரியமான ஒரு பெண். சந்தோஷமான பெண். அவர் இப்படியொரு முடிவு எடுப்பார் என்பதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதையேதான் அவரது அம்மாவும் சொன்னார். இறப்பதற்கு முன் அவர் ஏதோ டைரி எழுதி வைத்திருந்ததாக சொல்கிறார்கள். என்ன பிரச்னை என்பது யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை.

நடந்தது தற்கொலையா, கொலையா என்கிற உண்மை தெரிய இன்னும் சில தினங்கள் ஆகும் என்கிறார்கள் காவல் துறையினர். அதுவரை இதைப் பற்றி நான் எதுவும் பேச முடியாது. 

சிவன் ஸ்ரீனிவாஸ்

சின்னத்திரை வட்டாரத்தில் நீண்ட காலமாக தற்கொலைகள் இல்லாமல் இருந்தது. சாய் பிரசாந்த் தற்கொலைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. இப்படி நிகழ்கிற எல்லா மரணங்களுக்கும், வேலையில்லாத பிரச்னைதான் காரணம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம், அவ்வளவுதான்.

நான் தலைவர் பொறுப்பை ஏற்றபிறகு மொழிமாற்றுத் தொடர்களை நிறுத்தச் சொல்லி  மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறேன். தமிழக முதல்வரின் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்கிறோம். அவரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.  இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காமல் தொடரும் பட்சத்தில் முன்பைவிட இன்னும் தீவிரமான போராட்டத்தைக் கையில் எடுப்போம். அது தனிப் பிரச்னை. அதை நட்சத்திரங்களின் தற்கொலைகளுடன் சம்பந்தப்படுத்த வேண்டியதில்லை.

பொதுவாகவே சின்னத்திரை நட்சத்திரங்களில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் சங்கத்தின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள்... நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பொதுக்குழுவிலும் அது வலியுறுத்தப்பட்டது....'' என்கிறார்.

சின்னத்திரை சங்க உறுப்பினர் விஜய் ஆனந்திடம் பேசியபோது....

விஜய் ஆனந்த்''ஆயிரத்தைநூறு நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் 50 முதல் 70 பேர்தான் பிசியாக இருக்கிறார்கள். மீதி ஆட்களுக்கு வேலையில்லை. காரணம் டப்பிங் தொடர்கள். வேலையில்லை என்கிற மன அழுத்தம் சாதாரணமானதில்லை.  நடித்து சம்பாதிக்கிற பணத்தை நம்பி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலை இல்லை என்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்களுக்கு? 

சின்னத்திரை இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. புதிதாக தொடர் எடுப்பவர்கள், இந்தி சீரியல்களில் வருகிற மாதிரியான புதுமுகங்கள் வேண்டும் எனக் கேட்கிறார்கள். இருப்பவர்களுக்கு வேலையில்லை. ஒரு தொடரின் வெற்றியைத் தீர்மானிப்பது கதைதானே தவிர, நட்சத்திரங்கள் இல்லை. அனேகமாக எல்லா சேனல்களிலும் டப்பிங் சீரியல்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு புது தொடர்களிலும் புதுமுகங்கள் வேண்டும் எனக் கேட்டால், இருப்பவர்கள் எங்கே போவார்கள்?

கர்நாடகாவில் டப்பிங் சீரியல்களே கிடையாது.  அதே நிலையை இங்கேயும் கொண்டு வர அரசாங்கத்தினால் மட்டும்தான் முடியும். டப்பிங் தொடர்களை நிறுத்தச் சொல்லி ஒவ்வொரு சேனலுக்கும் எங்கள் சங்கம் சார்பில் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்தோம்.  பிரைம் டைமில் குறைத்துக் கொள்வதாக சிலர் சொன்னார்கள். பரிசீலிப்பதாக வேறு சிலர் சொன்னார்கள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. 'நாயகன்' பட டயலாக் போன்று  'அவங்களை நிறுத்தச் சொல்லுங்க.. நாங்க நிறுத்தறோம்' என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். சபர்ணாவின் மரணத்துக்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் இந்த அலட்சியப் போக்கு தொடரும்வரை, வேலையில்லாத மன அழுத்தம் காரணமாக நிகழ்கிற மரணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்''  என்று வருத்தத்தை பதிவு செய்தார் விஜய் ஆனந்த். 

 ஆர்.வைதேகி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ