Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஜ்ஜி, போண்டா கெட்ட உணவா ? விஷால் கேள்வி !

விஷால்

விஷால் மீண்டும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். பிரச்னை இந்த முறை நடிகர் சங்கத்தில் அல்ல தயாரிப்பாளர் சங்கத்தில். சில வாரங்களுக்கு முன்பு  ஆனந்த விகடனின் ஒரு பேட்டியில்... 


" தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆக்கபூர்வமான  நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அதே சமயத்தில் "சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.’’ என்று சொல்லியிருந்தார். 


சங்க விதிகளை மீறி விஷால் இப்படி பேசியது ஏன் ? என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கேள்விக்கு, அவர் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்று சொல்லி, விஷால் பிலிம் பேக்டரியின் உரிமையாளர் விஷாலை, தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு பதில் கூறும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷால் கூறியதாவது...

விஷால்

 


" தயாரிப்பாளர் சங்கத்தில் யாரும் கேள்வியே கேட்கக் கூடாதா?... கேள்வி கேட்டால் நீக்கிடுவாங்களா?... இது என்ன ஜனநாயகம்ன்னு புரியல.  இப்போ இருக்குற தயாரிப்பாளர் சங்கத்து மேல எனக்கு எந்த தனிப்பட்ட கோபமா, விரோதமோ கிடையாது. ஆனால், அவங்ககிட்ட கேட்க எனக்கு சில கேள்விகள் இருக்கு. அத கேட்க எனக்கு உரிமை இருக்கு. பதில் சொல்ல அவங்களுக்கு கடமை இருக்கு. எப்படி பார்த்தாலும், சட்டப்படி என்னோட நீக்கம் செல்லாது. ஏன்னா, எனக்கு இந்த நீக்கம் குறித்த எந்தக் கடிதமும் வரல. பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையிலும் கூட சங்கத்தின் நிர்வாகிகள் கையெழுத்துப் போடல. வக்கீல் மட்டும் தான் போட்டிருக்காரு." என்று தன் மீதான நீக்கம் குறித்து பேசியவர், மற்ற சில விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசினார். 


" அவங்க பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதா நான் சொன்னது குற்றம்ன்னு சொல்றாங்க. பஜ்ஜி, போண்டா என்ன கெட்ட உணவா? ... அதை நாம எல்லாருமே தான் சாப்பிடுறோம். இங்க பேச வேண்டிய பிரச்னை எத்தனையோ இருக்கு. திருட்டு விசிடி ஒழிக்க என்ன வழிங்குறது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்குத் தெளிவாகவேத் தெரியும். ஆனால், அவங்க அதற்கான எந்த முயற்சியும் எடுக்கல. எதுவா இருந்தாலும், இந்தப் பிரச்னைய ஏற்படுத்திய ஆட்களுக்கு நன்றி. இங்க உறுதியா ஒண்ண சொல்லிக்குறேன். வர்ற ஜனவரி மாசம்... தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் கண்டிப்பா நடக்கணும். எந்தப் பிரச்னையும் இல்லாம அத நடக்க விடணும். அதுல, இப்போ இருக்குற நிர்வாகிகளுக்கு எதிராக ஒரு வலுவான அணி நிச்சயம் போட்டியிடும். தமிழ்த் திரையுலகம் எனக்கு சோறு போடும் தெய்வம். அதுக்கு எங்க பிரச்னை வந்தாலும் இந்த விஷால் குரல் கொடுப்பான்..." என்று எமோஷனலாக சொன்னார் "ஹீரோ" விஷால். 

                                                                                                                                         

- இரா. கலைச் செல்வன், மா.பாண்டியராஜன்
- படம்:ப.சரவணக்குமார்

 

எடிட்டர் சாய்ஸ்