Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாஜ்நூர் இசையில் ‘வள்ளுவர் குடும்பம்’ வெளியிட்ட நாட்டுக்குறள்

குறள்

உலகின் ஆகச்சிறந்த வாழ்வியல் இலக்கியமாகிய திருக்குறளை வீதிகள் தோறும் கொண்டு சேர்க்கும் நோக்கில், "வள்ளுவர் குடும்பம்" சார்பில் நாட்டுக்குறள் என்ற ஒலிப்பேழை மற்றும் நூல் வெளியீடு சென்னையில் நடந்தது. 

திருக்குறளின் மாண்பையும் நெறிகளையும் தொன்மையையும் உலகெங்கும் பரப்பும் வகையில் "வள்ளுவர் குடும்பம்" என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு இயங்கி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்பட 200 பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். திருக்குறள் வாழ்வியல் நெறிகள், விவாதங்கள், ஆய்வுகள், சந்தேகங்களுக்குத் தீர்வு என ஆக்கபூர்வமாக இயங்கி வருகிறது இந்தக் குழு. திருக்குறளை எளிமைப்படுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், இன்பத்துப்பாலின் சில குறள்களைத் தழுவிய நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும், பாடல்-ஓவிய நூலும் சென்னை நாரதகான சபையில் நடந்த நிகழ்வில் வெளியிட்டது.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவகுமார், உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றார்கள். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும், சங்கர சரவணனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். 


இந்த ஒலிப்பேழையில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களையும் ஒடிஸா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.   இன்பத்துப்பால் பகுதியில் இடம்பெற்றுள்ள திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு காதல் ததும்ப எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல்களை கவிதா கோபி, அந்தோணிதாஸ், நின்சி வின்சென்ட், வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, பிரபு, சின்னப்பொண்ணு உள்ளிட்டோர் பாடியுள்ளார்கள். நிகழ்வில் தாஜ்நூர் இசையமைப்பில் இப்பாடகர்கள் மேடையில் பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்கள். 

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களுடன் கூடிய பாடல்கள் நேர்த்தியான வடிவமைப்பில் பாரதி புத்தகாலயம் சார்பில்  புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.  

திருக்குறள் பற்றிய ஆக்கபூர்வமான பல விவாதங்கள் எழுப்பப்படும் சூழலில் இந்த நாட்டுக்குறளின் வரவு முக்கியமானது. 

-வெ, நீலகண்டன்

எடிட்டர் சாய்ஸ்