Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விக்ரம் இன்னும் மாறவில்லை..!'- நெகிழும் நடிகர் பார்த்திபன்

விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', உதயநிதி ஸ்டாலினுடன் 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் மலையாள இயக்குநர் நிஷாத் இயக்கத்தில் மலையாள ரீமேக் படமான 'கேணி' படத்திலும் கெளரவ வேடத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் பார்த்திபன். ஹவுஸ் ஃபுல் படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், விக்ரமுடன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். 'துருவ நட்சத்திரம்' படத்துக்காகப் பல்கேரியாவில் தனது முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கும் பார்த்திபனை படத்தின் அப்டேட்ஸ்க்காகத் தொடர்புகொண்டோம். 

பார்த்திபன்

''ரொம்ப ஸ்டைலான இயக்குநர் படத்தில் நடிக்கிறேன். ஸ்டைலே இங்க டைரக்டரா இருக்காரு. இந்தப் படத்தில் என் கேரக்டரும் ரொம்ப ஸ்டைலாதான் இருக்கும். ஹவுஸ்ஃபுல் படத்தை நான் இயக்கும்போது, விக்ரமைப் பார்த்தால் என் பக்கத்திலேயே நின்னுக்கிட்டுருப்பார். உட்காரகூட மாட்டார். இப்போ பல்கேரியாவில் படப்பிடிப்பில் பார்த்தாலும் இயக்குநர் பக்கத்திலேயே நிற்கிறார். நான் கூட சொன்னேன், 'அப்படியே இருக்கீங்க. மாறவே இல்லை விக்ரம்'ன்னு. ஹவுஸ்ஃபுல்' படம் பண்ணுறப்போ நான் நினைப்பேன். 'ஏன் இவருக்கு நல்ல படங்கள் கிடைக்காமல் இருக்கு, நல்ல திறமையான நடிகர்... ஏன் சரியான வாய்ப்புகள் கிடைக்கலை’ன்னு ஆதங்கப்படுவேன். அவருடைய விடாப்பிடியான போராட்டங்களால்தான் அவர் இன்று இந்த இடத்தில் இருக்கிறார்'' என்றவரிடம், 'மலையாள இயக்குநர் நிஷாத் இயக்கத்தில் நடிக்கும் 'கேணி' படம் பற்றிக் கேட்டோம்.

''இது மலையாள ரீமேக் படம். மலையாளத்தில் பசுபதி நடித்த கேரக்டரில் தமிழில் நான் நடிக்கிறேன். 1956-ம் ஆண்டு தமிழ்நாடும் கேரளாவும் பிரிக்கப்படும்போது, தமிழ் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய கிணறு கேரளா பக்கம் போய்விட்டது. அதனால் கிராமத்து மக்கள் தண்ணீர்க் கிடைக்காமல் போராடுறாங்க. அவங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வழி செய்யும்படியான ஒரு கேரக்டரில் நான் நடிக்கிறேன். இதில் நான் பேசுற ஒரு வசனம், நானே எழுதி இயக்குநர்கிட்ட கேட்டு படத்தில் சேர்த்தேன். மலையாளி யாரும் டீ கடை நடத்தக்கூடாதுன்னு படத்துல ஒரு வசனம் வரும். அப்போது நான், ''ஒரு மலையாளின்னு தெரிந்தும், மக்கள் திலகம் என்ற ஒருத்தரை நம்ம சி.எம்-மாகக் கொண்டாடிருக்கோம். அப்படியிருக்கும்போது, அண்ணன் தம்பியா பழகுற ஒருத்தரை டீ கடை நடத்துறதுக்கு ஏன்யா தகராறு பண்ணுறீங்க?'' ன்னு கேட்பேன். ஒரு பெரிய தண்ணீர் பிரச்னையை, ஒரு சிறிய தண்ணீர் பிரச்னை மூலமாகச் சொல்லும் படமாக இந்தக் 'கேணி' இருக்கும். இந்தப் படத்தில் ஜெயப்ரதாவும் நடிக்கிறாங்க. தண்ணீர் பற்றிய கதை என்பதால் இந்தப் படத்தில் பாத்திரங்கள் அதிகம்'' என்று அவர் பாணியில் கலகலப்பாக முடித்தார் பார்த்திபன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close