Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’வழக்கு எண் 18/9 படத்தின் ஆடிஷனுக்கு சிவகார்த்திகேயனும் வந்தார்..!’’ - பாலாஜி சக்திவேல்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதி, இயக்குவதில் வல்லவர் பாலாஜி சக்திவேல். அதற்குச் சான்று, இவர் எடுத்த 'காதல்' மற்றும் 'கல்லூரி' திரைப்படங்கள். 2012-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த 'வழக்கு எண் 18/9' திரைப்படமும் உண்மைச் சம்பவத்தைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான். படம் வெளியானபோது, நல்ல விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்றது. படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கரைந்த நிலையில், தமிழக அரசு 2012-ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேலையும், சிறந்த படமாக வழக்கு எண் 18/9 திரைப்படத்தையும் அறிவித்துள்ளது. வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பேசினோம்.

வழக்கு எண் 18/9

''குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்தேன். ஓர் உண்மைச் சம்பவத்தைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான், 'வழக்கு எண் 18/9'. இந்தப் படத்தின் குறைந்த பட்ஜெட் காரணமாக, ஒளிப்பதிவுக்கு 5டி ஸ்டில் கேமராவைத்தான் பயன்படுத்தினோம். விஜய் மில்டன் நேர்த்தியான ஒளிப்பதிவாளர். அவர், கேமராவில் ஃபிலிம் வைத்து ஒளிப்பதிவுசெய்தவர். இந்தப் படத்தில், முதல் முறையாக ஸ்டில் கேமராவைப் பயன்படுத்தினார். முதல்நாள் படப்பிடிப்பின்போது, விஜய் மில்டன் ஒருவித பதற்றத்துடன் ஸ்டில் கேமராவை கையில் பிடித்துக்கொண்டு ஷூட் செய்துகொண்டிருந்தார். இது எப்படி சாத்தியமாகும் என ஒரு கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்துகொண்டே இருந்தது. ஸ்டில் கேமராவில் எடுப்பதால் ஆயுள் வேறு குறைவு. ஆனால், படம் எடுத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு, இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் இந்த விருது, படத்துக்கான ஆயுளை அதிகப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் பாலாஜி சக்திவேல்

இந்தப் படத்தில், சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ஶ்ரீயை அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்துக்காக புதுமுகங்களை நான் தேர்வுசெய்துகொண்டிருந்தபோது, நடிகர் சிவகார்த்திகேயனும் ஆடிசன்ஸுக்கு வந்திருந்தார். அவர் அப்போது பிரபல தொலைக்காட்சியில் நகைச்சுவை செய்துகொண்டிருந்தார். என் கதைக்கு சீரியஸான ஒரு நபர்தான் வேண்டும் என்பதால், அதே தொலைக்காட்சியிலிருந்து வந்த நடிகர் ஶ்ரீயைத் தேர்ந்தெடுத்தேன். தமிழக அரசின் இந்த விருது, எனக்குக் கிடைத்ததற்கு, படத்தில் என்னுடன் உதவிபுரிந்த உதவி இயக்குநர்கள், யூனிட்டில் இருந்தவர்கள், தயாரிப்பாளர்கள், படத்தில் நடித்தவர்கள்தான் காரணம். அவர்கள் சார்பாகத்தான் இந்த விருது கிடைத்துள்ளது'' என்றார் பாலாஜி சக்திவேல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close