Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ஆளுநரை வரவேற்கும் சவால்கள் என்னென்ன!? பன்வாரிலால் புரோஹித் சமாளிப்பாரா?

பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வரும்போதெல்லாம் 'அடுத்த அசைன்மென்ட் தயாராகிவிட்டது' என அரசியல் களத்தில் பேசப்படுவது வழக்கம். இந்தநிலையில், தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தமிழகத்துக்கான ஆளுநர் நியமன விவகாரம், மாநில அரசியல் களத்தை மேலும் உற்றுநோக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் அதிகாரச்சண்டைதான் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, 22.8.2016 அன்று சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம். முதல்வர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும்" என்று மனு அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா ராஜேந்திரன், "அந்த 19 எம்.எல்.ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக சட்டசபை சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால், "கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும்" என்று கேட்டிருந்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட கெடு முடிவடையும்வரை, சபாநாயகரிடம் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் அளிக்காததால், ஜக்கையன் தவிர, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர்.

சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, அந்த எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ-க்கள்  தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்றும், இவ்வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம். எல் .ஏக்கள்

இதுபோன்ற அரசியல் பரபரப்புக்கு இடையேதான், தற்போது பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர், மிகப்பெரிய அரசியல்ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் பன்வாரிலால் புரோஹித்தின் பணிகள் எப்படி இருக்கும்? என்பது குறித்து அரசியல் விமர்சகர் பாலுவைத் தொடர்புகொண்டு பேசினோம். "தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் பன்வாரிலாலுக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் ஜனநாயகரீதியில் அவர் செய்வரா என்பது சந்தேகமே. மத்திய அரசிடம் இருந்து வரும் உத்தரவைப் பொறுத்தே, ஆளுநரின்  செயல்பாடுகள் இருக்கும் என நம்பலாம். 'தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை' என்றும், 'சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்' என்றும்கோரி தி.மு.க. ஏற்கெனவே வித்யாசாகர் ராவிடம் மனுகொடுத்துள்ளது. அந்தமனு மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளனர். அந்த மனு மீதும் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி கிடையாது என்றாலும், ஜனநாயகரீதியாக எழுகின்ற கோரிக்கைகள் மீது ஆளுநராக இருக்கிறவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,.எனவே, தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், இதுபோன்ற பிரச்னைகளில் ஐனநாயகரீதியாகச் செயல்படுவாரா என்பதை பிறகுதான் பார்க்கவேண்டும்.

பொதுவாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு, அவர் முடிவு ஏதாவது எடுத்தால், அது அதிரடியாக இருக்கும். எனவே, பன்வாரிலால் புரோஹித்மயிலை பாலு பதவியேற்றதும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளது. இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உத்தரவிடுவதற்கும் வாய்ப்புள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் ஆட்சி கலைப்புக்கும் வாய்ப்புள்ளது. வித்யாசாகராவே இதைச் செய்திருக்கலாம் என்ற கேள்விவரும். ஆனால், பல பிரச்னைகளில் இவ்வளவு காலம் அமைதிகாத்து விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கமுடியாது. இதன்காரணமாகவே தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கலாம். ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி யாரும் எதுவும் கேட்க முடியாது. எனினும், அரசியல் சட்டரீதியான பதவி வகிக்கும் ஆளுநர், ஜனநாயக மாண்போடு செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவாரா என்பது சந்தேகம்" என்றார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டிருப்பதை, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை முத்தரசன் சி.பி.ஐ அறிவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனிடம் பேசினோம். "கடந்த ஒரு வருடமாக தமிழக சட்டமன்றம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. மக்களின் ஆதரவை இந்த அரசு முற்றிலுமாக இழந்துவிட்டது. போதிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது. இத்தகையை சூழலில், முதலமைச்சரின் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டும் எனவும், அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் ஆளுநரிடம் மனுக் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எடப்பாடி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் சபாநாயகர். சட்டமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் ஆளுநருக்குத்தான் உள்ளது. அப்படி இருக்கின்ற சூழலில், இந்தப் பிரச்னையில் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகராவ் ஜனநாயக ரீதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தபோது, அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தினகரன் ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை எல்லாம் கருத்தில்கொண்டு, புதிதாகப் பதவியேற்கும் ஆளுநர்,  ஜனநாயகமுறைப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தின் மாண்பைக் காக்க வழிவகை செய்ய வேண்டும் இதுவே அவருடைய பணிகளாக இருக்கும்" என்றார்.

இதுதொடர்பாக பி.ஜே.பி.தரப்பில் விசாரித்தபோது, ,'பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்றவர் பன்வாரிலால். மிகவும் திறமையானவர்., மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப, பல்வேறு சாதகமான பலன்களை தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வல்லமை பெற்றவர். " என்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து வரும் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close