Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு

இன்றைக்கு உலக புத்தக தினம் .ஷேக்ஸ்பியரின் நினைவாக இந்நாளை அப்படி அனுசரிக்கிறோம் .புத்தகங்கள் உலக வரலாற்றை ஏகத்துக்கும் புரட்டி போட்டிருக்கின்றன . அங்கிள் டாம்ஸ் கேபின் நூல் தான் அடிமைகளின் வலிகளை அமெரிக்க உணர்ந்து தன் மனசாட்சியை மறுபரிசோதனை செய்து கொள்ளும் உள்நாட்டு போருக்கு விதையானது .

காமன் சென்ஸ் நூல் தான் அமெரிக்க விடுதலைப்போரை வீறு கொண்டு எழச்செய்த காரணி . அது நாற்பத்தி எட்டு பக்க நூல் ! நோபல் பரிசு பெற்ற ஹெமிங்க்வேயின் புகழ் பெற்ற கிழவனும்,கடலும் நூல் நூறு பக்கங்களுக்குள் தான். பெண்ணியப்பார்வையை தமிழ் மண்ணில் ஆழமாக விதைத்த 'பெண் ஏன் அடிமையானாள்' நூலும் அளவில் சிறிய புத்தகமே !

படிக்கிற நூல் எதுவோ அது மனிதனின் குணத்தையும் மாற்றும். கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியை மகாத்மா ஆக்கியது. நீட்ஷேவின் நெருப்பு வாதங்கள் ஹிட்லரை இனப்படுகொலை செய்யும் வெறியனாக ஆக்கியது !

ஒரு நூல் கிடைப்பதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? ஒரு எழுத்தாளன் ஒரு அற்புதமான படைப்பைத்தரவோ அல்லது ஒரு நூலை கண்டேடுக்கவோ எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? சங்க நூல்களை தேடிய உ.வே.சாவுக்கு தன் வாழ்நாளே அவற்றைப்பதிப்பதில் கழிந்தது. மார்க்குவேஸ் பதினெட்டு மாதங்கள் வீட்டுக்குள் தவங்கிடந்து வார்த்தது கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த நூல் என்று கொண்டாடப்படும் நூற்றாண்டு காலத்தனிமை நாவல். பன்னிரெண்டு வருடங்கள், பதினாறாயிரம் மைல்கள்  டிக்கன்ஸ் எங்கெங்கோ தேடித்தந்தது ப்ரோக்கன் தி ஹெல் நூல். அது கிடைத்ததும் "உலகின் மகிழ்ச்சியான மனிதன் நான் தான். இந்த நூலை பதிப்பித்த பின் என் உயிரே போனாலும் கவலையில்லை !" என்றார் அவர்.

டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் பெருத்த அலைகளை உண்டு செய்தது. அந்த நூல் வெளிவந்தால் கடவுளின் இருப்பும்,மதங்கள் குரிப்பிட்டவையும் கேள்விக்குள்ளாகும் என்பது தெரிந்ததால் பத்தாண்டுகள் வரை அந்த குறிப்புகளை எடுக்காமலே வைத்திருந்தார். மகளின் மறைவுக்கு பின்னரே அந்நூலை வெளியிட்டார். பகுத்தறிவின் சாளரங்கள் மேலும் வெளிச்சமாகின. மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலை டார்வினுக்கே சமர்ப்பணம் செய்தார்.

நிராகரிப்பு என்பது இன்றைக்கு புகழ் பெற்றிருக்கும் நூல்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, ஒழுங்கான இடம் கிடையாது, பசியால் வாடி, மன உளைச்சலுக்கு உள்ளானார். காபி கடைகளில் உட்கார்ந்து, பழைய டைப்ரைட்டரில் அடித்தே கதையை முடித்தார். அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர். லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. சேத்தன் பகத்தின் முதல் நாவல் ஆக்ஸ்போர்ட் பதிப்பக எடிட்டர்களால் நிராகரிக்கப்பட்டு ரூபா பதிப்பகத்தால் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது.

அண்ணா மேரி கரோலியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை மரணம் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது வாசித்துக்கொண்டு இருந்தார். "இந்த நூலை படித்து முடித்தபின் மரணம் என்னைத் தழுவிக் கொண்டால் பரவாயில்லை !" என்றார் அவர். பகத் சிங் தூக்கு மேடைக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் தாமதப்படுத்தினார். "என்ன செய்கிறீர்கள் ?" என்று கேட்கப்பட்ட "ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் !" என்று சொன்னார் அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும்,புரட்சியும் நூல்...

ஒரு பொய்யான நூல் உலகின் வரலாற்றை மாற்றிப்போட்டது.  ஜான் மாண்டேவல்லி எனும் இங்கிலாந்து நபர் 'the travels' நூலில்  நாய் தலை உள்ள பெண்கள்,ஒற்றைக்கண் ராட்சதர்கள்,பெரிய நத்தைகள்,முட்டிகளுக்கு நடுவே தொங்கிய விதைப்பைகளை கொண்ட ஆண்கள் ஆகியோரை எல்லாம் கடந்து இந்தியா வந்ததாகவும் அங்கே ப்ரெஸ்டர் ஜான் எனும் கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர் ஆள்வதாகவும் கதை அளந்திருந்தார். மேலும் முப்பது அரசர்கள்,எழுபத்தி இரண்டு சிற்றரசர்கள்,முன்னூற்றி அறுபது பிரபுக்கள் அவருக்கு கீழ் இருந்ததாகவும் கிளப்பி விட்டிருந்தார். உலகம் உருண்டை,மேற்கில் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று அவர் சொன்னதை நம்பி போன கொலம்பஸ் திசைமாறி அமெரிக்காவில் லேண்ட் ஆனார். பல்வேறு கடல் சாகசக்காரர்கள் நூற்றாண்டுகளுக்கு இந்த பொய்யை நம்பினார்கள்.

இவ்வளவும் படிச்சோம். இதுக்கு மேலே தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன .புத்தக கடைகள் இருக்கின்றவனவா ?எழுத்தாளனை நாம் கொண்டாடுகிறோமா ?கேரள மக்கள் புத்தக வாசிப்பை மூச்சாக செய்பவர்கள் .எழுத்தாளர்களை மதிப்பவர்கள் ;வாசுதேவன் நாயர் ஞான பீட விருது பெற்ற பொழுது முதல்வர் அந்தோணியின் கார் அவர் வீட்டு முன் வாழ்த்த வந்து நின்றது.அப்படி ஒரு நிலை நோக்கி நம் சமூகம் பயணிக்க வேண்டும்

ஒரு சமூகத்தை கட்டமைப்பதில், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதில் ,நமக்குள் புது புது தேடல்கள் செய்ய நூல்கள் உதவும். பிள்ளைகளுக்கு வீடியோ கேம்களை வாங்கித்தரும் நீங்கள் நல்ல நூல்களை வாங்கித்தாருங்கள் ;நூலகங்களில் சேர்த்து விடுங்கள் .சிந்திக்க மறுக்கிற சமூகம் என யாரையும் முத்திரை குத்துவதற்கு முன் அந்த சமூகத்தை சிந்திக்க வைக்கும் நூல்கள் சார்ந்து அவர்களை திசை திருப்ப வேண்டிய பொறுப்புணர்வு எல்லாருக்கும் உண்டு.

- பூ.கொ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ