Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏப்ரல் 30: இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே பிறந்த தின சிறப்பு பகிர்வு..

தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார் . பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார் . படங்கள் பெரும்பாலும் மவுனம் தான் ;இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது .

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின் ,இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார் ; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார். இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை . படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள் . மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது .பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் . இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார் .

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது ; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள் .ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார் . ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான் . நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார் .

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார் ;பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார் . தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர் ;பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார் .

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார் .அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார் .கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார் . பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன ;வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார் .வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார் .அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம் .அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது .அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது .

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட அவரின் பிறந்த தினம் இன்று.

- பூ.கொ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close