Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூன்.17; மர்மம் கலையாத ஆஷ்துரை மரணமும், வாஞ்சியின் உயிர்தியாகமும்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

ந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வும், தமிழக போராட்டத்தின் திருப்புமுனையுமாக ஜூன் 17, 1911 அன்று நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஒருவரை மணியாச்சியில் ஒருவர் சுட்டு, தானும் இறந்த வரலாறு தமிழக சுதந்திர வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு. சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இறந்த வரலாறு அது.  ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். இந்த நிகழ்வு நிகழ்ந்த நாள் இன்று. அந்த இருவரைப்  பற்றியான நினைவுப் பதிவுகள் இதோ...

நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி'எஸ்கோர் ஆஷ். ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அந்த விடுதியின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதில் இறந்துபோனார். ஆஷ், டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்கிறார். 1892ல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கவிதை எழுதும் பழக்கமும் கொண்டவர்.  பின்னர் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறார். முதல் பணி, இன்றைய ஒரிசா மாநிலத்தில், அன்றைய கஞ்சம் மாவட்டத்தில். பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910  திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணியில், தென்னிந்தியாவின் கடைகோடிக்கே வந்து சேர்கிறார் ஆஷ். இதற்காக தமிழ், தெலுங்கு முதலியனவும் கற்று தேர்ந்திருக்கிறார். இதற்கிடையிலேயே சேரன்மகாதேவி, சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி முதலிய இடங்களிலும் அதிகாரியாக பணியாற்றி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

17 ஜூன் 1911, காலையில் ரயில் பயணத்தில் ஆஷும் அவரின் காதல் மனைவி மேரியும் கொடைக்கானலுக்கு தன் பிள்ளைகளை பார்ப்பதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். சரியாக 10.38க்கு மணியாச்சி சந்திப்பை தொடர்வண்டி நெருங்கியது. வறண்ட கிராமத்திலிருந்து வெளியில் தனியாக விடப்பட்ட மணியாச்சி சந்திப்பு அது. கிராசிங் ரயிலுக்கு காத்திருந்தது ஆஷ் பயணப்பட்ட வண்டி. முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தனர் ஆஷ் தம்பதியினர். அந்த சமயம், குடுமி வைத்து நல்ல மிடுக்குடனும் பச்சை கோர்ட்டு அனிந்த ஒரு இளைஞனும், கூடவே மற்றொரு மனிதரும் முதல் வகுப்பு பெட்டியருகில் வேகமாக வந்தனர். பதட்டத்துடனும் ஆவேசத்துடனும் இவர்கள் இருந்தனர். திடீரென, ஆஷ் துரையை நோக்கி தன்னுடைய பெல்ஜியத் தானியங்கித் துப்பாக்கியை நீட்டுகிறார் அந்த இளைஞன். அதிர்ந்து போகிறார் ஆஷ். எதிர்பாராத நொடியில் ஆஷ் துரையின் நெஞ்சில் துப்பாகியால் சுடுகிறார் அந்த இளைஞன். ஆஷ் சுயநினைவினை இழக்கிறார். இரயில் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. கங்கைகொண்டான் அருகில் கொண்டு செல்லும் போது தன் உயிரையும் விடுகிறார் ஆஷ் துரை. அந்த இளைஞன் நடைமேடையில் ஓடி, பின், அந்த ரயில் நிலையத்திலேயே தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார். அவர்தான் வாஞ்சி நாதன்

யார் இந்த வாஞ்சி? வாஞ்சி, 1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாக பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராகவும் பணியாற்றினார். ஆயினிம் இவருக்கு பிரிட்டிஷ் அரசு மேல் கோவமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பல இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டுகிறது.

சுதந்திரப்போராட்டத்திற்காக தன் உயிரை விட்ட வாஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு செல்கிறது. அப்போது அவரின் சட்டையில் கடிதம் இருந்தது. அந்த கடித வரிகளின் சுருக்கம் இதோ, "ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்" என்று விரிகிறது அந்த கடிதம். இந்த கடிதம் தென்தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வு.

இதுவே ஜூன் 17ல் ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழக நிகழ்வு. அதன்பிறகு எந்த போராட்டமும் ஆங்கிலேயருக்கு எதிராக வலுப்படவில்லை, மேலும் ஆங்கிலேய அடக்குமுறைகளும் அதிகமாகத்தான் இருந்தது. பல்வேறு உயிர்பலிகளும் தமிழ் தேசிய போராட்டத்தின் பலமுக்கிய நிகழ்வுகளும் நடந்தேறியது. ஆனால், இந்த வாஞ்சி சம்பவத்தின் அரசியல் வேறாகவும், வாஞ்சியின் நோக்கம் என்ன என்பதினையும் வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்,  இதில்வாஞ்சிநாதன் வேறு சில அரசியல் பின்னூட்டத்தில் செயல்பட்டார். என்று அவரின் செயலை விமர்சிப்போரும் உண்டு.

இதுவரை முடிச்சுகள் அவிழ்க்கப்படாத, அரசியல் பின்னணி என்னவென்றே உறுதியாக சொல்லமுடியாத சம்பவமாகவே பார்க்கப்படுகிறது வாஞ்சி மணியாச்சி.  ஒவ்வொரு முறை ரயிலில் கடக்கும் போதும் வாஞ்சி மணியாச்சி தொடர்வண்டி நிலையம் எல்லோருக்குமே ஒரு புதிர்தான். யார் மேல் குற்றம், என்ன நடந்தது என்று ஆய்வதினை விடவும் வாஞ்சிநாதனின் செயல் சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலியின் முக்கிய பதிவுகளில் ஒன்று. இரு உயிர்களின் துறப்புடன்,  பல்வேறு அரசியல் ரகசியங்களின் முடிச்சும் கலையாத நாள் இன்று ஜூன் 17.

பி.எஸ்.முத்து.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close