Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இன்று.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.
இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்தார்.

- பூ.கொ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close