Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிட்டுக்குருவியின் கீச்... கீச்... சத்தத்தை கேட்பதே இனிமை!

'சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா'..., 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு'... என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன.

தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. காடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் இனம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதற்கு, நம்முடைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் தான் காரணம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள். சிட்டுக்குருவிக்கு இன்று பலர் அடைக்கலம் கொடுத்து அந்த இனத்தை காப்பாற்றி வருவதால், ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் நம் கண்ணில் தென்படுகின்றன.

உருவத்தில் சிறியதாகக் காணப்படும் சிட்டுக்குருவி மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. இருப்பினும், அவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள். சிட்டுக்குருவிகளில் ஆண், பெண் என்பதை ரோமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவிகள் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சிட்டுக்குருவிகளை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கின்றனர். யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம் கொண்டது இந்த சிட்டுக்குருவி இனம்.

அதே நேரத்தில், எதிர்களிடமிருந்து எந்த நேரத்திலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும். உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு, கீச்சு என்று கத்தும் மெல்லிய இசை, மென்மையான உடலைமைப்பு கொண்ட இவைகளை பிடிக்காதவர்கள் யாருமில்லை. இவைகள் 27 கிராம் முதல் 39 கிராம் வரை எடை உடையது. 8 செ.மீ முதல் 24 செ.மீ வரை நீளமுடையது. சுமார் 13 ஆண்டுகள் வாழக் கூடியது. மூன்று முதல் 5 மூட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.

முன்பெல்லாம் ஓலை, குடிசை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு மாட்டுத் தொழுவமும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இவைகள் தான் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக திகழ்ந்தன. ஆனால் இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், காற்று உட்புகாத அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்களாகவே நகரமும், கிராமும் காணப்படுகின்றன. இதனால், சிட்டுக்குருவியின் இருப்பிடம் அழிக்கப்பட்டு விட்டன. அடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதீர்வீச்சு சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. அடுத்து, ரசாயண உணவுகளை உட்கொள்வதாலும் இந்த இனம் அழிவதாக சொல்கிறார்கள். இவ்வாறு 90 சதவீத சிட்டுக்குருவிகளை அழித்துவிட்ட பெருமை மனித இனத்தையே சேரும்.

எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவைகள். கொசு முட்டைகளை விரும்பித் திண்ணும் சிட்டுக்குருவிகள் அழிந்தால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். சிட்டுக்குருவிகள் கொண்டக்கடலை மாவு, திணை, கோதுமை, பச்சரிசி, பருப்பு, சாமை ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுமாம். பூச்சி, புழுவையும் இவைகள் விட்டுவைப்பதில்லை. ஆனால், இன்று இத்தகைய உணவுகள் மனிதனுக்கே கிடைக்காதபட்சத்தில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி கிடைக்கும்? இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களிடையே சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் என்று அறிவித்து அதை கடைப்பிடித்து வருகிறது. இதன்பிறகு ஓரளவு மக்கள் மத்தியில் சிட்டுக்குருவி பாதுகாப்பு எண்ணம் தோன்றி இருக்கிறது. அதோடுவிடாமல், மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்து மத்திய அரசு அசத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிட்டுக்குருவிக்கு இப்போது கூடுதல் மவுசு.

கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே அதிகமாக சிட்டுக்குருவிகளை இப்போது காண முடிகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு, இல்லை..இல்லை கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் அதில் தோட்டம் அமைத்து பயிரிட வேண்டும். சிட்டுக்குருவி வாழ வாழ்விடத்தை அதில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் வீட்டின் மொட்டை மாடிகளில் தானியங்கள் தூவுவதோடு குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும். வைக்கோல், புற்கள் வைத்தால் குருவிகள் கூடு கட்ட அவைகள் பயன்படும் என்று பட்டியலிடுகின்றனர் பறவை ஆர்வலர்கள்.

சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு அதற்கான உணவு தானியங்களை வழங்கி வரும் 'ட்ரி பேங்க்' நிறுவனம் முல்லைவனம் கூறுகையில், "சிட்டுக்குருவிகள் இருந்தால் அந்தப்பகுதி சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ தானியத்துடன் கூடிய பாக்ஸ் வழங்கினோம். இந்த ஆண்டும் தானியம் அடங்கிய பாக்ஸை கொடுத்துள்ளோம். அந்த பாக்ஸில் 2 மாதங்களுக்கு தேவையான கோதுமை, பச்சரிசி, சாமை, திணை, கொண்டைக்கடலை உள்ளிட்டவைகளை அரைத்து கொடுக்கிறோம்.

சென்னையில் இன்றும் வில்லிவாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், ராமாவரம், குன்றத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வீடுகள் சிட்டுக்குருவி வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கின்றன. அவைகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அவைகளை காப்பாற்றவே இந்த தானிய பாக்ஸை வழங்கியுள்ளோம். சிட்டுக்குருவியின் கீச், கீச் என்ற சத்ததை கேட்பதை இனிமை" என்றார்.

எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close