Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃப்ளாஷ்பேக்: பரபரப்பை ஏற்படுத்திய முகநூல் கைதுகள்!

மூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான  மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு வழிவகை செய்திருந்தது.

அந்தப் பிரிவை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 'இது கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி' என்று என்று சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் இந்தச் சட்டப் பிரிவு ஏற்படுத்திய ஒருசில பாதிப்புகளைப் பார்ப்போம்.

ஜூனியர் விகடன் 4-7-2014 இதழில் இருந்து...

நெரிபடும் சுதந்திரக் குரல்வளை!

முரண்பாடான கருத்துக்களின் மோதலில்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் வைக்கப்படும். ஜனநாயகத்தில் முரண்பாடான கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். விளம்பரம் என்றால் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் ஆட்சி​யாளர்கள், தங்களை நோக்கி விமர்சனம் என்று வரும்போது அதிகாரத்தின் துணையோடு அதன் குரல்வளையை நெரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் அந்த அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளன.

கோவாவில் வசித்துவரும் மும்பை இளைஞர் அவர். பெயர் தேவு சோடன்கர். இவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்துள்ளார். அதில் ஒன்று, 'மோடி அதிகாரத்துக்கு வந்துவிட்டார். இனி சர்வநாசமும் அதிகாரத்துக்கு வந்துவிடும்’ என்பது. அவரின் தொடர் தாக்குதல்களால் எரிச்சலடைந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த அதுல் பைகானே என்பவர், தேவு சோடன்கர் மீது போலீஸில் புகார் செய்தார். கோவாவில் இப்போது பி.ஜே.பி ஆட்சியில் இருக்கிறது. புகார் கொடுத்தவர் ஆளும் கட்சிக்காரர். பிரதமருக்கு ஆதரவாகக் கொடுக்கப்பட்ட புகார் வேறு. கேட்கவா வேண்டும்? விரைந்து செயல்பட்ட கோவா போலீஸார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம்... என பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ், தேவு சோடன்கர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இரண்டு சம்மன்கள் தேவு சோடன்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தலைமறைவான அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் தேவு சோடன்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

மங்களூரைச் சேர்ந்த சையது வக்கார் என்ற எம்.பி.ஏ பட்டதாரியும் இதேபோல் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்-அப்பில் இவர் அனுப்பிய குறுஞ்செய்தியே இந்தக் கைதுக்கு காரணம். 'அப் கி பார் மோடி சர்க்கார்’ என்பதை கொஞ்சம் மாற்றி 'அப் கி பார் அந்திம் சன்ஸ்கார்’ என்று எழுதி அனுப்பியிருந்தார். இதன் அர்த்தம், 'இந்த முறை மோடி ஆட்சி என்பதற்கு பதிலாக’,  'இந்த முறை இறுதி அஞ்சலி’ என்பதாகும். அத்துடன் அதில் அனுப்பியிருந்த படத்தில் மோடியின் இறுதிச் சடங்கில் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொள்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

கருத்து சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது!

இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்கள் மத்தியில் லேசான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ''இந்த இரண்டு சம்பவங்களையே முன்மாதிரியாக வைத்து மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் காலம் தொலைவில் இல்லை'' என்கிறார் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

மேலும் அவர், ''முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் இன்று விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளன. அரசியல், சமூகம், பொருளாதாரம், பொழுதுபோக்கு என்று அதன் எல்லைகள் பரந்து விரிந்துள்ளன. எதைப்பற்றியும் யாருடனும் விவாதிக்கலாம் என்ற சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தகவல்களையும் தரவுகளையும் விரைந்து பகிர்ந்துகொள்ளவும் வழிவகை செய்கிறது. அப்படிப்பட்ட ஊடகத்தில் தங்களுக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகும்போது ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். அப்போது சட்டத்​தைக் காட்டி மிரட்டவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் செய்கின்றனர். பொய்யான தகவலைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்​கலாம். அது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், தங்களின் கருத்துக்களைத் தைரியமாகக் கடுமையான வார்த்தைகளால் தெரிவிப்பவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்து மிரட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இப்படி ஒருசிலரைக் கைதுசெய்வதன் மூலம் எல்லோரையும் பயமுறுத்தி, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது'' என்கிறார்.

புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சனம் செய்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்டது நினைவில் இருக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சூழலை படிப்படியாக உருவாக்கி வருகிறார்கள். சமூக வலைதளங்களே முடக்கப்படும் நிலைமை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்கால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவர் தன்னுடைய மனுவில், இந்தச் சட்டப்பிரிவு முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆட்சேபணைக்கு உரியவை எவை என்பதில் தெளிவில்லாமலும் இருக்கிறது. எனவே இதை தகுந்த முறையில் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதான் இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட முதல் வழக்கு.

அந்த மனு அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனு பற்றி கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ''முகநூல் கருத்துகள் தொடர்பான சர்ச்சைகள் கைது நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதை நீதிமன்றமும் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து ஒரு வழக்குக்கூட இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது எங்களுக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நாங்களே தன்முனைப்பாக அப்படி ஒரு வழக்கை எடுத்து நடத்தலாம் என்றுகூட நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

சட்டப்பிரிவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உடனடி நடவடிக்கையாக, யார் இதுபோன்ற புகார்களில் கைது செய்ய அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மத்திய அரசு வரையறுக்கப்போவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது''  என்று கூறினார். 

அதன்படிதான் முகநூல் தொடர்பான புகார்களில் கைதுசெய்யும் அதிகாரம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காவல் துறை துணை ஆணையர் அளவில் உள்ள அதிகாரிகளுக்கும், பெருநகரங்களில் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.


'சட்டத்தில் தெளிவான வரையறைகள் இல்லை!''

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துருவிடம் இந்த வழக்குகள் பற்றி கேட்டோம்.

''தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிரிவு 66-ஏ சமூக வலைத்தளங்கள், செல்போன்கள் மூலம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காக  உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் தெளிவான வரையறை எதுவும் இல்லை. மற்ற தண்டனைச் சட்டங்களில் உள்ள சரத்துக்களை சற்று விரிவாக்கி இதில் தந்துள்ளனர் அவ்வளவுதான். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், 66-ஏ வில் எரிச்சல், சுகவீனம், ஆபத்து, தடுப்பு, நிந்தை, ஊறு செய்தல் மற்றும் மிரட்டல் விடுத்தால் அப்படிச் செய்தவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதில் எரிச்சல் ஏற்படுத்தினால் எப்படி? என்பதில் தெளிவான வரையறை இல்லை. ஒருவர் மற்றொருவரை உற்றுப் பார்த்தால் கூட சமயங்களில் எரிச்சல் ஏற்படும். அதற்காக பார்ப்பவரை கைது செய்ய முடியுமா? இதுவரை 66-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. அப்படி யாராவது தண்டிக்கப்பட்டு, அவர்கள் அந்தப் பிரிவை எதிர்த்து வழக்குத் தொடுக்கும்போது இந்த சட்டப்பிரிவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. மற்றபடி இப்போது இந்தச் சட்டப்பிரிவு அதிகாரத்துக்கு எதிராக முகநூலில் எழுதுபவர்களை கைது செய்யவும் அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படும்.

மேலும், வலைத்தளங்களை சமூக விரோத சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு கருத்துச் சுதந்திரவாதிகளை கவலைகொள்ள வைக்கிறது. சமீபத்தில் உ.பி.யில் உள்ள முசாபர்பூர் நகரில் நடந்த வகுப்புக் கலவரப் பின்னணியில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விஷமப் பிரசாரங்களும் காரணம் என்று தெரியவருகிறது. எனவே இந்த சட்டத்தை திருத்தும்போது, சமூக வலைத்தளத்தில் தீய சக்திகளின் செயல்களைத் தண்டிப்பது உறுதியாக்கப்படுவதோடு நியாயமான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்'' என்றார்.

கவனத்தை ஈர்த்த சில கைதுகள்!

ஆபாச எஸ்.எம்.எஸ், முகநூலில் தவறாக செய்தி அனுப்பிய குற்றங்களுக்காக இதுவரை பலர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சில கைதுகளின் விபரம்...

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது இரண்டு நாட்கள் மும்பை ஸ்தம்பித்தது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்போது மும்பையைச் சேர்ந்த ஷாகின் தாதா என்ற கல்லூரி மாணவி, ''இந்த பந்த் பயத்தால் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்று பதிவிட்டார். அதற்கு அவருடைய தோழி ரேணு லைக் பதிவு செய்திருந்தார். இதையடுத்து சிவசேனாக் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். ஷாகின் தாதாவின் உறவினருக்குச் சொந்தமான மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது.அதற்கு மறுநாள் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பற்றி முகநூலில் கருத்து தெரிவித்த மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

தமிழகத்தில் பாடகி சின்மயி மற்றும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த 6 பேர் தன்னை பல மாதங்களாக உளவியல் ரீதியில் துன்புறுத்தி வருவதாக புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கல்லூரிப் பேராசிரியர் சரவணக்குமார், கோவை அவினாசியைச் சேர்ந்த ராஜன் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

மம்தா பானர்ஜியை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததாக கல்லூரி பேராசிரியர் அம்பிகேஷ் மகோபத்ரா கைதுசெய்யப்பட்டார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் பற்றி தனது டூவிட்டர் பக்கத்தில் அவதூறாக எழுதினார் என்று புதுச்சேரியைச் சேர்ந்த ரவி ஸ்ரீனிவாசன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டார். ட்விட்டர் பக்கத்தில் எழுதியதற்காக இந்தியாவில் செய்யப்பட்ட முதல் கைது அது.

மக்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம் என்ற தொனியில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை விதைப்பதும் அதிகமாகி வருகிறது. பொறுப்பை உணர்ந்து பொதுமக்களும் கருத்தின் ஆழத்தை உணர்ந்து ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் முகநூல், இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

- ஜோ.ஸ்டாலின்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close