Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காப்பாற்றப்பட்ட இணையதள கருத்துச் சுதந்திரம்!

 சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பாக இயங்குபவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது உச்சநீதி மன்றத்தின் உத்தரவு. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சாமானியன் முதல் சமூக பிரபலங்கள் வரை   ஒரு சேர இயங்கும் `பிளாட் பார்ம்` என்பது மிகப்  பொருத்தமானதே. அந்த அளவிற்கு நவீன உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளன இணையதளங்கள்.

முன்பெல்லாம் கல்வி பயிலும் மாணவ மாணவியர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அறிவுச் சமூகத்தினர், தங்களுக்கு தேவையான தகவல்களைத் திரட்ட நூலகங்கள் செல்வார்கள். குறிப்பு மற்றும் பிரதிகள் எடுத்து தங்களின் ஆய்வுகளை செய்த காலங்கள் போய்விட்டன. கடந்த பத்தாண்டுகளில், இணையதள வருகை காட்டாற்று வெள்ளம் போல  மக்கள் மத்தியில் பாய்ந்து, தகவல்களை கொட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த பாய்ச்சலுக்கு ஆளாகாத ஆட்களே இல்லை என்கிற அளவிற்கு சூழல் மாறிப்போய் உள்ளது.

தனியார் தொழில் நிறுவனங்கள்,எழுத்தாளர்கள்,சினிமா பிரபலங்கள், தனி நபர்கள் ஆகியோர் கோலோச்சிய சமூக வலைத்தளங்கள், தற்போது அரசியல்வாதிகளும் அரசு அமைப்புகளும் பயணிக்கும்  நெடுஞ்சாலைகளாய்  விரிந்துள்ளன. இதனை கணினி மட்டும் அல்லாது ஸ்மார்ட் மற்றும் ஆண்டிராய்ட் போன்களின் வருகை  அனைவருக்கும் சாத்தியமாக்கி உள்ளது. நாளிதழ்கள்,வார, மாத பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் அடைந்த வளர்ச்சியை குறுகிய ஆண்டுகளில் பெற்று, சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொருவருக்கும் வீட்டு முகவரி இருப்பதைப்போல ஃபேஸ்புக், ட்விட்டர் `ஐ.டி.`கள் இருக்கின்றன.

நிறுவனங்கள் வாடிக்கை சேவை மையமாக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றன  என்றால், சில தனிநபர்கள் தங்களின் சுய விளம்பரச் சுவர்களாகவும்,முதிர்ச்சியற்ற நாகரீகமில்லாத வக்கிரமான ஆபாச பதிவுகளைக் கடைவிரிக்கும் அலங்கோல பக்கங்களாகவும் வலைத்தளங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இதில் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பெயர்களில் பல நூறு `பேக் ஐடி` கள் இயங்கி அவர்களுக்கும் வலைத்தள உறுப்பினர்களுக்கும் தீராத தலைவலியை உண்டாக்கி விட்டுள்ளன. இதன் காரணமாகவே  பல பிரபலங்கள் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை நிறுவி தற்போது இயங்கி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர்  இளையராஜாவும் தனது பெயரில் முழுமையான முக நூல் பக்கத்தை ஆரம்பித்துள்ளார்.

ஃபேஸ்புக் மூலம் விளம்பரம், தகவல் பரிமாற்றம், நாடுகடந்த நட்பு வளர்த்தல் என்று பன்முகத் தன்மைகள் வளர்க்கப்படுகின்றன.அதே நேரத்தில் ஒரு நாட்டின் அரசியல் அதிகார மாற்றத்திலும், முக நூல் பங்காற்றமுடியும் என்பதும் வலைத்தள வரலாறு. கடந்த 2011 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர ஃபேஸ்புக் , டிவிட்டர் மற்றும் யூ டியூப் ஆற்றிய பங்கு மகத்தானவை. 30 ஆண்டுகாலம் எகிப்தின் அதிகாரமாக இருந்து பல்வேறு இன்னல்களுக்கு மக்களைத் தள்ளிய  அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் அரசியல் இயக்கத்தினர்.தற்போது அந்நாட்டின் அரசியல் முகமே மாறிப்போயுள்ளது. 

அதே போல அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா வருவதற்கும், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கும்,தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதற்கும் சமூக வலைத்தளங்கள்  ஒரு முக்கிய காரணம் என்பதை அவர்களின் பதிவுகளே காட்டுகின்றன.அதனால் தற்போது வலைத்தள பக்கம் இல்லாத பிரபலங்களே இல்லை என்கிற நிலை யதார்த்தமாகியுள்ளது.

இது போல பல சாதனைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் சாத்தியமாகியுள்ளன என்றாலும் அவற்றில் ஆபத்துக்களும் இல்லாமல்  இல்லை. குறிப்பிட்ட தனி நபரை வஞ்சம் வைத்து ஆபாசமாக மற்றும் பொய்த் தகவல்கள்  நிழற்படங்கள்  மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இந்த வலைத்தளங்கள் அதிர்ச்சியளிக்கும். சில நேரங்களில் மதம்,பால்,அரசியல் இயக்கம், முக்கிய தலைவர் என்று பிரச்னைகளைக் கிளப்பும்  அவதூறு பதிவுகள் மற்றும் வீடியோக்கள், பயங்கரமான விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கிவிடுவது உண்டு.

இப்படிப்பட்ட பதிவுகள் அதிகமானபோதுதான், கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு ஏற்கெனவே இருந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் முக்கிய திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி அவதூறான பதிவுகளைப் போடும் பதிவர்கள் மீது கைது நடவடிக்கை,கடுமையான காவல்துறை விசாரணை என்று பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கோவா  இளைஞர்  தேவு சோடன்கர்  தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்துள்ளார். அதில் ஒன்று, 'மோடி அதிகாரத்துக்கு வந்துவிட்டார். இனி சர்வநாசமும் அதிகாரத்துக்கு வந்துவிடும்’ என்ற பதிவு.

இதனால் கடும் எரிச்சலைடைந்த பிஜேபி  சோடன்கர் மீது போலீசில் புகார் செய்து, கடுமையான பிரிவுகளில் வழக்கைப் பதிந்தது. இதே போல மங்களூரைச் சேர்ந்த சையது வக்கார் என்ற எம்.பி.ஏ பட்டதாரியும், மோடியை வகை தொகை இல்லாமல் கேலி செய்து இருந்தார்.அதனால்  அவர் கைது செய்யப்பட்டார்.

சையது தனது  வாட்ஸ்-அப் அக்கவுண்ட் மூலம் 'அப் கி பார் மோடி சர்க்கார்’ என்பதை  மாற்றி 'அப் கி பார் அந்திம் சன்ஸ்கார்’ என்று எழுதி, மோடியின் இறுதிச் சடங்கில் பாஜக  தலைவர்கள் கலந்துகொள்வது போலவும் சித்தரித்து இருந்தார்.

தமிழகத்திலும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேமுதிக நகரச் செயலாளர் மல்லி (எ) சுப்பிரமணி   தனது முகநூலில்  வெளியிட்ட பதிவையடுத்து கைதுசெய்யப் பட்டார். 

அவதூறு கிளப்பும் வகையில் தகவல் தெரிவித்தல், பெண்களின் தன்மானத்தை அசிங்கப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி வரைமுறை இல்லாமல் பல்வேறு கோணத்தில் சமூக வலைத்தளங்களில் வாக்கியங்களும், நிழற்படங்களும் பதிவிடப்பட்டதால் அவர் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பது தனிக்கதை.

புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சனம் செய்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது. பாடகி சின்மயி மற்றும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த 6 பேர்,   பல மாதங்களாக உளவியல் ரீதியில் துன்புறுத்தி வருவதாக அளித்த புகாரின்  பேரில், கல்லூரிப் பேராசிரியர் சரவணக்குமார், கோவை அவினாசியைச் சேர்ந்த ராஜன் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இதே போல நாள்தோறும் பல்வேறு பாலியல் புகார்கள்,பண மோசடிகள் என்று காவல்துறை கதவை தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.இதில் வாட்ஸ் அப் வசதி வேறு பல பேரை கலவரப்படுத்தி உள்ளது.

அதே போல தேசிய அளவில்,சில கைதுகள் இணையதள வாசிகளுக்கு அதிர்ச்சி அளித்தன. சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது,பந்த் நடந்தது.அதை விமர்சித்து  மும்பையைச் சேர்ந்த ஷாகின் தாதா என்ற கல்லூரி மாணவி, ''இந்த பந்த் பயத்தால் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்று முக நூலில் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு அவருடைய தோழி ரேணு லைக் செய்திருந்தார். பின்னர் இருவரும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பற்றி முகநூலில் கருத்து தெரிவித்த மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

மம்தா பானர்ஜியை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததாக கல்லூரி பேராசிரியர் அம்பிகேஷ் மகோபத்ரா கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில்,கடந்த கடந்த 2013 ஆம் ஆண்டில் டெல்லி மாணவி ஷ்ரேயா சிங்கால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரின்  மனுவில், இந்தச் சட்டப்பிரிவு முறைகேடாகப்  பயன்படுத்தப்படுவதாகவும், ஆட்சேபணைக்கு உரியவை எவை என்பதில் தெளிவில்லாமலும் இருக்கிறது. எனவே இதை தகுந்த முறையில் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என  குறிப்பிட்டு இருந்தார். இதுதான் இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் கருத்துப்  பதிவு செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில், தகவல் தொடர்பு சாதனங்களில், தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு, அரசியல் எதிர்ப்பு, விமர்சனங்கள் வந்தன என்பதற்காக, அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ, தண்டிப்பதோ கூடாது என்பதுதான் அரசின் இப்போதைய எண்ணம் என்றும்,  இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும்தான், தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும்.

சில சமயங்களில், நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில், சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி, வலைத்தள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத்தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக கருத்துச்  சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்துப் பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள், சர்வாதிகார நடவடிக்கைகள் என்று சமூக செயல்பாட்டாளர்கள் குரல் எழுப்பினர். இவர்கள் மட்டுமல்லாது தற்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மோடி கூட, இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார்.

ஆனால் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு...இல்லாவிட்டால்  ஒரு பேச்சு என கொள்கை கோமான்களாக இருக்கும் தங்களை சமூக வலைத்தளங்களில் `நார் நாராக` கிழித்து தொங்கவிடுவதை எந்த அரசியல் கட்சிகளுமே விரும்பவில்லை. இதனால் அவர்கள் உள்ளுக்குள் அந்த சட்டப்பிரிவை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தனர்.

அது எத்தனை உண்மை என்பதை தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நிருபித்துவிட்டது. எந்த மோடி முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டப்பிரிவை எதிர்த்தாரோ, அவரது தலைமையிலான தற்போதைய மத்திய அரசுதான், இந்த சட்டப்பிரிவு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் அந்த 66 ஏ பிரிவுக்கு ஆதரவாக வாதிட்டது.

ஆனாலும் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், பிரச்னைக்குரிய 66 ஏ பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இது பல சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகள்,அரசியல் இயக்கங்கள் ஆகியோருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அதே சமயத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் தந்துள்ள இந்த கருத்து சுதந்திர உரிமையை தவறாக பயன்படுத்தாமல், நாகரிகமான கருத்துக்களை முன்வைத்திடல் வேண்டும்.

யாகாவராயினும்  நா காத்தலே  நாகரீகம் ஆகும்.

 

- தேவராஜன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close