Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு இலவசங்கள்: பாவம் செய்த பதினொரு லட்சம் பேர்!

ட்சுமி அம்மாள்,  சென்னை  வளசரவாக்கத்தில்  ஒரு அப்பார்ட்மென்டில் உள்ள 12 வீடுகளுக்கு ஓனர்.

ஒவ்வொரு வீட்டின் வாடகையும் ஏழு  ஆயிரத்துக்கும் மேல். கொஞ்சம் டாம்பீகமும் வறட்டு கௌரவமும் உள்ள பேர்வழி. வீட்டை விட்டு வெளியில் கால் வைத்தாலே கார் இல்லாமல் எங்கும் போக மாட்டார். என்னவோ தெரியவில்லை. அன்றைக்குப் பார்த்து டிரைவரும் வரவில்லை. வேலைக்காரம்மாவும் வரவில்லை. தானே  காரை எடுத்துக்கொண்டு ரேசன் கடைக்கு வந்துவிட்டார்.

அவர் பட்டுசேலை பளபளக்க, பையைத் தூக்கிக்கொண்டு வருவதை க்யூவில் நின்றவர்கள் ஒருவித பிரமிப்பு கலந்த மரியாதையோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர்கூட, 'மாதம் வீட்டு வாடகையாக மட்டுமே 70 ஆயிரம் ரூபாய் பெறுகிறாரே என்பதையோ, அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர் கணவரும், ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற அவரும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் பென்சன் வாங்கிக்கொண்டும், அரசு வழங்கும் இலவசங்களுக்கு வந்து நிற்கிறாரே' என கேட்கவில்லை.  ரொம்ப பவ்யமாக மரியாதையோடு வழிவிட்டார்கள்.
  
லட்சுமி அம்மாள், மாதத்தின் முதல் திங்கள்கிழமையே ரேசனில் பொருட்களை வாங்கிவிடுவார். பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் என ஒன்றையும் விடமாட்டார். அன்றைக்கும் அவருக்கு யோகம்தான். ரேசன் ஊழியர், 'அரிசி வேணுமாம்மா' எனக் கேட்டார். 'ஆமாய்யா…  நாய் ரெண்டு வளக்குறேன். அதுக்கு போடத் தேவை' என பதில் அளித்தார். அவருக்குப் பின்னே க்யூவில் இருந்தவர்கள் இந்த வார்த்தைகளால் முகம் சுளித்தனர்.

'வாங்குவது ரேசனில் இலவச அரிசி...  இதை நாய்க்குப் போட்டால் என்ன... பேய்க்குப் போட்டால் என்ன?' என ரெங்கராஜ் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.  ரெங்கராஜ் வேறு யாருமல்ல… அவரது பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருப்பவர். கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கும் எந்த இலவச சலுகையும் கிடைக்கப் பெறாதவர். அந்த ஆதங்கம் அவருக்கு. அதனால்தான் அப்படி முனகினார்.

உண்மையான வருமானத்தைச் சொல்லிய பாவத்துக்கு உரிய தண்டனையை அவர் கடந்த 15 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார். இடையில், ’அனைத்து கார்டுகளுக்கும் எல்லா ரேசன் பொருட்களும், இலவசங் களும் எல்லோருக்கும் வழங்கப்படும்’ என்று ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாலும், மக்கள் முதல்வரும் அவ்வப்போது பேசி வந்தாலும், அதற்குரிய சட்ட வடிவமோ செயல் வடிவமோ கிடையாது.

2002-ல் இதே அதிமுக ஆட்சியில், தனது ரேசன் கார்டை சர்க்கரைக் கார்டாக மாற்றியதன் விளைவை, கடந்த 13 ஆண்டுகளாக அவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.  அப்போதெல்லாம் ரேசனில் வெறும் 5 கிலோ, அதுவும் நாற்றமடித்த புழுங்கல் அரிசியை மட்டும்தான் வழங்குவார்கள். அதனால்தான் அப்படி சொல்லித்தொலைத்தார்.

வெள்ள நிவாரணத் தொகையாகட்டும்...  திருவிழாபோல் நடந்த இலவசத் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சியாகட்டும்... பொங்கல் பொருட்களாகட்டும்... இலவச வேஷ்டி - சேலை வழங்குவதாகட்டும்... இலவச மிக்ஸி, கிரைன்டர், ஃபேன் வழங்குவதாகட்டும்... தெருவே ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழும். உண்மையைச் சொன்ன பாவத்துக்காக அவரும், அவர் மனைவியும் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறே வேடிக்கை பார்த்துக்கொண்டு வேற்று கிரகவாசிகள் போல அந்நியப்பட்டுக் கிடப்பார்கள்.   மாதந்தோறும் நடைபெறும் ரேசன் பொருட்கள் விநியோக குறைதீர்ப்புக் கூட்டத்திலும் பலமுறை முறையிட்டுப் பார்த்துவிட்டார். பாவம் பதில்தான் கிடைக்கவில்லை. ஏனிந்த நிலை?

தமிழகத்தில் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால், புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.  2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் சமீபத்தில் உள்தாள் ஒட்டும் பணி வேகமாக நடைபெற்று முடிந்தது.
 
மாதம் 5 லட்சம் சம்பாதித்தாலும், வருட வருமானம் 50 ஆயிரம் என போட்டுக்கொண்டு ரேசன் கார்டு வாங்கியவர்கள் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள்.  உண்மையைச் சொன்ன பாவத்துக்கு, 11 லட்சம் ரெங்கராஜன்களும் இலவசங்களை இழந்துவிட்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.  அவர்களுக்கு ஒரு வழி பிறக்க வேண்டுமென்றால், கேஸ் மானியம் போல் ரேசன் மானியம் வங்கியில் போடப்பட வேண்டும். அனைவருக்கும் ரேசன் கடையில் முழுமையான விலையில் பொருட்களை வழங்கிவிட்டு, மானியத்தை வங்கியில் செலுத்த வேண்டும். அதுதான் பொதுவான சமநீதியாக இருக்கும்.

2016-ல் ஸ்மார்ட்கார்டு வேறு வழங்கப்போகிறார்களாம். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 98 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 25 லட்சம் கார்டுகள் போலி ரேஷன் கார்டுகள் என்கிறார்கள். அவற்றைக் கண்டறிந்து ஒழிக்கும் பணியும் கூடவே நடைபெற்று வருகிறதாம். இருக்கிற கார்டுகள் எல்லாமே போலியான வருமானம் போடப்பட்ட ரேசன் கார்டுகள்தான். இவற்றை ஒழிக்க என்ன செய்யப்போகிறார்கள்?

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close