Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`தனியார் பள்ளிகள் மறுப்பால் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியான கல்வி உரிமை சட்டம்`!

மிழகம் மட்டுமில்லாது, இந்தியா முழுவதும் லாப நோக்கில் இயங்கும் தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதால், ஏழை கிராமப்புற மாணவர்கள் கடுமையான கல்வி இழப்பினை சந்தித்துள்ளனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி  நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்,  21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு உள்ளன.

இந்த இடங்களில் வெறும்  29 சதவீத இடங்களை மட்டுமே தனியார் பள்ளி நிறுவனங்கள் `பெரிய மனது வைத்து` நிரப்பிவருகின்றன.

இந்த உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாதது, அமல்படுத்துவது குறித்து கண்காணிப்பு இல்லாதது,  தனியார் பள்ளிகளின் பணப் பேராசை  போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகி உள்ளது. இதனால் ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வியும் கிடைக்காமல் போகிறது.இது மிகப்பெரிய சமூகக் கவலை அளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

தனியார் பள்ளிகளின் கல்வி, ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் தனியார் பள்ளிகள் மத்திய அரசின் சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.வழக்கம்போல கல்வியை கொள்ளை லாபத்திற்கு விற்கத் தொடங்கின. ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய, 25 சதவீத இடங்களையும்  ஒதுக்காமல் அந்த இடங்களை வசதி கொண்ட குடும்ப மாணவர்களுக்கு வழங்கி கொள்ளை லாபம் சம்பாதித்து வந்துள்ளன.

அரசின் சட்டதை மதிக்காமல்  தனியார் பள்ளிகள் செயல்படுவது தலைமுறைகளை வஞ்சிக்கும் செயல் என்றும்  மிகப்பெரிய   ஏமாற்றும் செயல் என்றும் ஆதங்கப்படுகின்றனர் கல்வி ஆர்வலர்கள். இந்தச் சட்டம்  2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டாலும், செயல்பாட்டுக்கு வந்தது 2010 ஆம் கல்வி ஆண்டு முதல்தான்.  குஜராத் மாநிலத்தின்  ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தினரும், 2 தனியார் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இந்த அபாயகரமான கல்வி மோசடி தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முடிவுகள்: 

" கடந்த, 2013 - 14 ஆம் கல்வியாண்டு இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய நிலையில், 6 லட்சம் இடங்கள் தான் ஏழைகளுக்கு கிடைத்துள்ளது.

ஒன்பது மாநிலங்களில்  20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பில், இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலையில், 45 ஆயிரம் மாணவர்களுக்குத் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களிலும் இந்நிலை காணப்படுகிறது. டெல்லியில் நிலைமை பரவாயில்லை. கல்விக் கட்டணம் இலவசம் என்ற விவரம் பெரும்பான்மையான பெற்றோருக்கு தெரியவில்லை. தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள் வெளிப்படையாகக்  கூறுவதில்லை.

தமிழகத்தில் 11.25 சதவீதம்

கடந்த, 2013 - 14ம் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள்: டில்லியில், 92 சதவீதம்; மத்திய பிரதேசம், 88 சதவீதம்; ராஜஸ்தான், 69 சதவீதம்; ஆந்திரா, 0.2 சதவீதம்; ஒடிசா, 1.85 சதவீதம்; உத்தர பிரதேசம், 3.62 சதவீதம்; தமிழகம், 11.25 சதவீதம்; மகாராஷ்ட்ரா, 19.35 சதவீதம்"

மேலும் 'சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும்' என, சட்டம் இயற்றிய பிறகும், அதை செயல்படுத்தாதது மிகப் பெரிய குற்றம் எனவும், அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க, சில பள்ளிகள் முறைகேடான வழிகளைப்  பின்பற்றியுள்ளன  என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கின்றனர்.

என்று தணியும் இந்தத் தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளை வியாபாரம்?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ