Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய்!

ரு சுபயோக சுபதினத்தில் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும்15 லட்சம் ரூபாய் போடப்படும் என செய்தி முதல் நாளே வெளியாகி விட்டது. மறுநாள் காலையில்  'உங்கள் கணக்கில் 15 லட்ச ரூபாய்' என்பதை பத்திரிகைகள் எல்லாம் தலைப்புச் செய்தியாக்கி இருந்தன. டி.வி-க்கள் எல்லாம் அதையே திரும்பதிரும்ப செய்தியாக சொல்லிக்கொண்டிருந்தன. சாமிப்பிள்ளை நம்ம கணக்கிலும் பணம் விழுந்திருக்கும் என்று புறப்பட்டுப்போனார்.

விடிந்ததும் விடியாததுமாக மக்கள் வங்கி ஏ.டி.எம் களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஏ.டி.எம்மில் ஒருமைல் நீளத்துக்கு மிகப்பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. சரி வேறு ஏ.டி.எம்முக்கு போகலாமென்றால் அங்கு இதை விட மிகப்பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. சரி ஒரு டீயாவது முதலில் குடிப்போம் என்று போனால் டீக்கடை ஒன்று கூட திறந்திருக்கவில்லை. ஒரு ஓட்டலும் திறந்திருக்கவில்லை.

சரி இவ்வளவு தூரம் நடந்து வந்து விட்டோம். வீட்டுக்காவது போகலாமென புறப்பட்டால் , அரசு போக்குவரத்துக்கழக பஸ் எதுவுமே வரவில்லை. கண்டக்டர், டிரைவர் என எல்லோரும் 15 லட்சம் ரூபாய் கிடைத்த குஷியில் லீவு போட்டு விட்டு எவரும் வேலைக்கு வரவில்லை. சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோமே எலக்ட்ரிக் டிரெயினில் போய் சேரலமென்றுப் போனால் மத்திய,மாநில அரசு பந்த்போல , எந்த ரயிலும் வரவில்லை.

ரயில் நிலைய அலுவலர்கள் யாருமே பணிக்கு வரவில்லை. எல்லாம் 15 லட்சம் செய்யும் லீலை! சரி, இனி வேலைக்கு ஆகாதென வீட்டுக்கு வந்தார். நல்ல வேளையாக வங்கிகள் வேலை செய்தன. வங்கிகள் வேலை செய்தால்தானே  வங்கி ஊழியருக்கே பணம் அதனால் வங்கிகள் மிகச்சிறப்பாக வேலை செய்தன. அறிவிப்பு வந்த 3 நாள் கழித்து சாமிப்பிள்ளை  தன் கணக்கில் இருந்து அன்றைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட தொகையான 25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால், சென்னையிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் முந்திக்கொண்டவர்கள் வாங்கிக்கொண்டு சென்று பதுக்கி விட்டனர்.

மக்கள் கூட்டம் ஒன்று, சென்னையை காலி செய்து தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அவர்களெல்லாம் தாம்பரம் வரையிலுமே நடந்துதான் வந்திருந்தனர். அந்தக்கூட்டத்தோடு சாமிப் பிள்ளையும்  சேர்ந்து கொண்டார். எல்லோரும் வண்டலூர், மறைமலை நகர், சிங்கப்பெருமாள்கோயில்,  செங்கல்பட்டு என கடந்து வந்தனர். ரொம்ப தூரம் நடந்து வந்ததில் பசி வயிற்றைக் கிள்ளியது. ஒவ்வொரு வரும் மயக்க நிலைக்கே போய் கொண்டிருந்தனர். சாமிப்பிள்ளை ஒரு ஒத்தையடிப்பாதையைப் பிடித்து நடந்து போனார். அங்கே ஒரு விவசாயி குடும்பத்தினருடன் மணக்கும் கத்திரிக்காய் குழம்போடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சாமிப்பிள்ளைக்கு நாவில் எச்சில் ஊறியது. விவசாயி சாப்பிடச் சொன்னார்.  சாமிப்பிள்ளை சாப்பிட்டு முடித்தார். சரி, ' எனக்கு ஒரு 10 மூட்டை நெல் தேவை... வண்டி பிடித்து ஏற்றி விடுங்கள்' என்றார். உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது?  என்றார்.  25 ஆயிரம் இருக்கிறது என்றார். அப்போது விவசாயி சொன்னார் உங்கள் காசுக்கு 20 கிலோ அரிசி கூட வாங்க முடியாது ஒருகிலோ அரிசி 1,500 ரூபாய் என்று விவசாயி கம்பீரமாகச் சொன்னார். சாமிப்பிள்ளை மயங்கி விழுந்தார்.

உண்மையிலேயே அவர் கட்டிலில் இருந்து தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தார். பிறகுதான் புரிந்தது, தான் இவ்வளவு நேரமாக கண்டது கனவு என்று. உடனே இனி எஞ்சியிருக்கும் வாழ்நாளில் விவசாயம் செய்தே வாழ்வோமென சூளுரைத்து சொந்த ஊர் புறப்பட்டார். கூடவே உழவுக்கு வந்தனை செய்வோம் வீணே உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோமென தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே.

''இந்தியா சுதந்திரம் அடைந்துள்ள இந்த 68 ஆண்டுகளில், நம் நாட்டின் வளம் செல்வம் ஆகியவையெல்லாம் எல்லோரையும் சென்றடையாமல் ஒரு சாரரையே சென்றடைந்து விட்டது. பணக்காரர் மேலும் பணக்காரராகிக் கொண்டே போகிறார். ஏழை மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார். கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் பாரதிய ஜனதா பதவிப்பொறுப்பேற்ற 100 நாட்களில் மீட்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனின் கணக்கிலும் சேர்க்கும்'' என்றே தேர்தல் பிரசார கூட்டங்களில் பெரும் திரளாக கூடிய மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  

''கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன். அந்தப் பணத்தை வைத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தான் வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று ராகுல் காந்தி  இப்போது கேள்வி எழுப்பி வருகிறார்.

'ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் 15 ரூபாயை கூட மீட்டுக் கொண்டுவர முடியவில்லை. பொய் வாக்குறுதி அளித்தவர்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு (பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு) மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்று அன்னா ஹசாரேவும் கடுமையாக சாடி வருகிறார்.  'தேர்தல் தந்திரமென்று' கூறிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமீத்ஷாவும் நன்றாகவே வாங்கிக் கட்டிக்கொண்டார்.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணக்காரர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதன் மூலம், பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு  கணக்கெடுப்பின் படி இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104  உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2024ம் ஆண்டிற்குள் எண்ணிக்கை 3  ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில்  ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்று எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அருண் ஜேட்லி அளித்த பதில் அளித்துள்ளார்.

"கருப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணம் முழுவதுமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரசாரத்தின் போது மோடி கூறினார். அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டின் எச்.எஸ்.பி.சி., வங்கியில் கருப்பு பணம் பதுக்கி இருப்போர் என முதலில் 628 பேர் பட்டியல் வெளியானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி வரும் 31-ந் தேதிக்குள் முடிந்து விடும். கருப்பு பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

கூடவே கருப்பு பணம் உருவாவதையும் அதை வெளிநாட்டில் பதுக்குவதையும் தடுக்க சட்ட விதிகளைக் கடுமையாக்குவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். சிறப்புக் குழுவினரின் பரிந்துரைகளில் சில மத்திய பட்ஜெட் அறிவிப்பில் ஏற்கெனவே இடம் பெற்று உள்ளன. மேலும் கருப்பு பண பதுக்கலைத் தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது" என்று கூறினார்.

என்ன செய்யப்போகிறார்களோ?

- எஸ். கதிரேசன்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close